அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் – அஸாத் சாலி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று வேண்டும், இல்லாவிட்டால் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என புதிய ஜனநாயக முன்னிணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அஸாத் சாலி தெரிவித்தார்.

கொழும்பில் நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி இருந்தார். அவரின் வாக்குறுதிகளை நம்பியே மக்கள் அவருக்கு வாக்களித்து ஜனாதிபதியாக்கி இருக்கிறார்கள்.

ஆனால் ஜனாதிபதியாக பதவி ஏற்று ஒருமாத காலம் கடந்தும் அளித்த வாக்குறுதிகளல் ஒன்றையேனும் நிறைவேற்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முடியாமல் போயிருக்கிறது.

தற்போது பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களுக்கு செல்லும் ஜனாதிபதி, தான் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்ற முடியாமல் போனமைக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான கால அவகாசத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் பாேட்டியிடுவதற்கு அவர்களின் கட்சியில் இருந்து களமிறக்கி இருப்பவர்கள் யார் என மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களாகும்.

அதனால் மக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கும்போது சிந்தித்து செயற்பட வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதால் எவ்வாறான பாதிப்பு ஏற்படும் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

மேலும் கடந்த காலங்களில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அதற்கு எதிராக பாராளுமன்றத்தில் அநுரகுமார திஸாநாயக்கவே அதிகம் கதைத்தார்.

எரிபொட்களை வழங்க முடியுமான விலையை கணக்கு பாேட்டு காட்டியிருந்தார். தற்போது ஜனாதிபதியான பின்னர் இரண்டு தடவை எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் அவர்கள் தெரிவித்த பிரகாரம் விலை குறைவடையவில்லை. இறுதியாக எரிபொருள் விலை குறைத்தபோதும் தனவந்தர்கள் பயன்படுத்தும் எரிபொருள் வகையில் மாத்திரமே விலை குறைப்பு இடம்பெற்றது. அதுவும் அவர்கள் தெரிவித்த அளவில் விலை குறைப்பு இடம்பெறவில்லை.

மேலும் வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள அன்று மக்கள் சரிசையில் இருந்தபோது அதுதொடர்பில் அரசாங்கத்தை பாரியளவில் விமர்சித்து வந்தது மக்கள் விடுதலை முன்னணியாகும்.

ஆனால் தற்போது அன்றைக்கும் பார்க்க கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கான வரிசை நீடித்துள்ளது. கடவுச்சீட்டு ஒரு தொகை வர இருப்பதாகவும் இந்த பிரச்சினையை ஒரு வாரத்துக்குள் தீர்ப்பதாக அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

ஆனால் அந்த கடவுச்சீட்டு தொகை முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் கொண்டுவந்த தொகையாகும். அவ்வாறு கொண்டுவரப்பட்ட கடவுச்சீட்டுகளையும் இவர்களால் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முறையான வேலைத்திட்டம் இல்லை.

இந்த அரசாங்கத்தை வீழ்த்த இடமளிக்கப்போவதில்லை என அநுரகுமார திஸாநாயக்க தெரிவிக்கிறார். ஆனால் 69இலட்சம் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ்வும் இவ்வாறுதான் தெரிவித்தார்.

ஆனால் இறுதியில் நாட்டை விட்டு செல்ல வேண்டிய நிலையே அவருக்கு ஏற்பட்டது. அதனால் இவர்களுக்கு நாட்டை கொண்டு செல்ல முறையான வேலைத்திட்டம் இல்லை.

அதனால் இவர்களால் நாட்டை கொண்டு முடியாது. அதனால் மிக விரைவாக இந்த அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக்கோரி, கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நீதிமன்றில் டயானா