அரசியல்உள்நாடு

கட்சியிலிருந்து எவர் வெளியேறினாலும் திறமையாளர்களை அடையாளப்படுத்துவோம் – ரிஷாட்

திருகோணமலை மாவட்டத்தில், நான்கு வருடங்களாக தீர்க்கப்படாதுள்ள பிரச்சிச்சினைகளுக்கு தீர்வுகாணும் களப்பணிகளைச் சிறப்புடன் செய்யும் வேட்பாளர் டொக்டர் ஹில்மி மஹ்ரூப். எனவே, இம்முறை தேர்தலில் அமோக ஆதரவுடன் அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் கூட்டணியில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் டொக்டர் ஹில்மி மஹ்ரூபை ஆதரித்து, செவ்வாய்க்கிழமை (15) கிண்ணியாவில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது;

“ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு நாங்கள் தீர்மானித்தோம். அந்தத் தேர்தலில் சுமார் 95,000 வாக்குகளை சஜித்துக்குப் பெற்றுக்கொடுத்தோம். ஆனால், எமது தீர்மானத்துக்கு உடன்பட முடியாது எனக் கூறிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், அமைதியாக இருக்கப்போவதாகத் தெரிவித்தார்.

பின்னர், ரணிலின் தந்திரத்துக்குப் பலியாகி எமது கட்சியிலிருந்து தூரமாகிவிட்டார். அப்துல்லாஹ் மஹ்ரூப் கட்சியின் வளர்ச்சிக்காக கடந்த காலங்களில் செய்த பணிகளுக்கு நன்றி கூறுகிறோம். 2010 மற்றும் 2015 தேர்தல்களில், அவரை வேட்பாளராக நிறுத்தி வெல்ல வைத்ததும் எமது கட்சியே. இதற்காக இம்மாவட்டத்தைச் சேர்ந்த பலர் உழைத்தனர்.

இப்போது அப்துல்லாஹ் மஹ்ரூப் எங்களுடன் இல்லை. எவர் வெளியேறினாலும் பறவாயில்லை. திறமையானவர்களை களத்துக்கு கொண்டுவந்து, கட்சியை வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்செல்வதே எமது இலக்காக இருக்கும்.

அந்தவகையில், டொக்டர் ஹில்மி மஹ்ரூபை பாராளுமன்றத் தேர்தலில் நிறுத்தியுள்ளோம். நகர சபை தவிசாளராக இருந்த இவரிடம் நிறைய அனுபவங்கள் உள்ளன. சிறந்த கல்விமானாகவும் ஒழுக்கசீலராகவும் இவரை நாம் பார்க்கிறோம். இறைவன் நாடினால் அவரது வெற்றி உறுதியாகும்.

புல்மோட்டை முதல் தோப்பூர் வரை அவருக்கு ஆதரவு இருக்கிறது. இம்மாவட்டத்தின் பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி உழைப்பதற்கு, டொக்டர் ஹில்மி மஹ்ரூபை வெற்றியடையச் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

-ஊடகப்பிரிவு

Related posts

பெட்ரோலை குறைத்தாலும் நிவாரணம் இல்லை

ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி!

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சாரதி அனுமதிப்பத்திரம்!