நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களில் 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம், கடும் காற்று மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 16,707 குடும்பங்களைச் சேர்ந்த 68,672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த நிலைமை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பகுதியளவில் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 233 என்று கூறப்படுகிறது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் கணிசமான மழைவீழ்ச்சி இன்மையால் அத்தனகலுஓயா மற்றும் களனி, கிங், நில்வலா மற்றும் களு ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 09 மாவட்டங்களின் 47 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்பு இன்று மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.