அரசியல்உள்நாடு

ரணிலின் பொருளாதார வேலைத்திட்டங்களை நிறுத்தினால் அழிவு என்பதை தேசிய மக்கள் சக்தி உணர்ந்துவிட்டது – நிமல் லான்சா

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துச் சென்ற பொருளாதார திட்டங்களை நிறுத்தினால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும்.

இதை தற்போது தேசிய மக்கள் சக்தி உணர்ந்துள்ளது. எனவே தான் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் தொடர்பில் தேர்தலுக்கு முன்னர் கூறியதை தேசிய மக்கள் சக்தி செயற்படுத்தவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.

நீர்கொழும்பு வெல்லவீதிய காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (6) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது பொருளாதார குழு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை அண்மையில் சந்தித்தது. தேர்தலுக்கு முன், சர்வதேச நாணய நிதியம் ஒப்பந்தத்துடன் செல்ல முடியாது எனக் கூறினர்.

அதில் திருத்தங்களை மேற்கொள்வோம் என்றும் மக்களுக்கு உறுதியளித்தனர்.

அந்த ஒப்பந்தம் நாட்டுக்கு பயன்படாது என்றும் கூறினர். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்தபோது, அதற்கு எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

அவ்வொப்பந்தம் நாட்டு மக்களுக்கு நல்லதல்ல என்றும் தாம் ஆட்சிக்கு வந்ததும் அதனை இரத்து செய்வதாகவும் குறிப்பிட்டனர். இவ்வாறு அவர்கள் தேர்தலுக்கு முன்னர் கூறிய விடயங்களை செய்யாமலிருப்பது எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த பொருளாதார வேலைத்திட்டத்தில் ஒரு எழுத்தைக் கூட மாற்ற முடியாது என்பதை நாம் அறிந்திருந்தோம். அதனை இன்று ஜே.வி.பி. ஏற்றுக் கொண்டிருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டங்கள் ஒரு வாரத்தில் முன்னெடுக்கப்பட்டவையல்ல. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வரும் வெற்றிகரமான திட்டமாகும். மத்திய வங்கியின் ஆளுநர், திறைசேரியின் செயலாளர் மற்றும் பொருளாதாரக் குழுவினால் தீர்மானிக்கப்பட்ட நீண்ட வேலைத்திட்டமாகும்.

மத்திய வங்கியின் ஆளுநரும், திறைசேரி செயலாளரும் பொருளாதாரத்தை வீழ்த்துபவர்கள் என விமர்சித்தனர். ஆனால் அவர்கள் தான் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கும் உதவிக் கொண்டிருக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் முன்னெடுத்த திட்டத்தைக் கைவிட்டால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும். பாராளுமன்றத் தேர்தல் காரணமாக இந்த விடயங்கள் மூடி மறைக்கப்பட்டாலும், தேர்தலுக்குப் பிறகு, சர்வதேச நாணய நிதியம் ஏராளமான சீர்திருத்தங்களை முன்மொழியும்.

நாம் கடந்த ஒன்றரை ஆண்டுகள், சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்துடன் இணைந்து பணியாற்றிய போது ஜே.வி.பி. ஒரு நாள் கூட ஒத்துழைக்கவில்லை. எப்போதும் எதிராகவே செயற்பட்டனர்.

எவ்வாறிருப்பினும் இந்த அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தல், சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துதல், வர்த்தகப் பற்றாக்குறையைத் தீர்ப்பது, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு போன்றவற்றை முன்னெடுப்பது அவசியமாகும். மார்ச் மாதத்திற்குப் பின் வழங்கிய வாக்குறுதிகளை இவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

-எம்.மனோசித்ரா

Related posts

அதிகம் வெப்பம் : குழந்தைகள் மத்தியில் அதிகரித்துவரும் நோய் தாக்கங்கள்

மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவைகளே முன்னெடுப்பு

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 30 பேர் தாயகத்திற்கு