முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், அத்தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் அரச வாகனம் ஒன்று பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு கிடைத்த முறைப்பாடு ஒன்று, அவ்வாணைக் குழுவொனால் மேலதிக விசாரணைகளுக்காக கொள்ளுபிட்டி பொலிசாருக்கு மாற்றப்பட்ட நிலையில், கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்த்ரகுமாரவின் மேற்பார்வையில் கொழும்பு மத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் லீலரத்னவின் ஆலோசனைக்கு அமைய கொள்ளுபிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார (தனியார்) கம்பனியின் நலன்புரி பிரிவுக்குச் சொந்தமான மொன்டரோ ரக ஜீப் வண்டி ஒன்று, ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடு மற்றும் சான்றுகளை வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் கோட்டை நீதிவான் தனுஜா லக்மாலிக்கு அறிவித்து விசாரணைக்கு தேவையான உத்தரவுகளையும் பெற்றுக்கொன்டுள்ளனர்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷவின் கூட்டத்தின் பிரசார நடவடிக்கைகளுக்காக இலங்கை மின்சார (தனியார்) நிறுவனத்தின் நலன்புரி பிரிவுக்குச் சொந்தமான வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனம் பழுதுபார்ப்பு பணிக்கு அனுப்பப்படுவதாக தெரிவித்தே இவ்வாறு பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
குறித்த ஜீப் வண்டிக்கு பொறுப்பாக இருந்த சாரதியே அதனை எடுத்துச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.
முதலில் கராஜ் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள இந்த ஜீப், மறு நாள் ஹொரவ்பொத்தானை பகுதியில் மரண வீடொன்றுக்கு செல்வதாக கூறி அனுராதபுரம் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகலில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந் நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு மற்றும் விசாரணை தொடர்பான முதல் தகவல் அறிக்கையை (பி அறிக்கை ) சமர்ப்பித்து, குறித்த வாகன சாரதியின் தொலைபேசி பதிவுகளை பெற்றுக் கொள்ள கொள்ளுப்பிட்டி பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அனுமதி நீதிமன்றினால் வழ்னக்கப்ப்ட்டுள்ளது.
குறித்த அறிவியல் சான்றினை மையபப்டுத்தி மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க கொள்ளுபிட்டி பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.
இலங்கை மின்சார (தனியார்) நிறுவனம் LECஓ என பரவலாக அறியப்படுகின்றது.
1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனமாக இது நிறுவப்பட்டது.
இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக இலங்கை மின்சார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை (UDA), திறைசேரி மற்றும் நான்கு உள்ளூராட்சி அதிகார சபைகள் அங்கம் வகிக்கின்றன.
அத்துடன் இந்த நிறுவனம் இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனாலேயே குறித்த நிறுவனத்தின் சொத்துக்கள் அரச சொத்துக்களாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.