அரசியல்உள்நாடு

22 ஆம் திகதிக்குள் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்க்கிறோம் – தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் பூரணப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் சட்டத்துக்கும், பொதுச் சட்டத்துக்கும் எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் காலத்தில் அநாவசியமான பிரச்சினைகளை ஏற்படுத்துவதை அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். தமது குடும்பத்தை கருத்திற் கொண்டு அவதானத்துடன் செயற்படுங்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு ஊடாகவே உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். போலிச் செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்காதீர்கள். எதிர்வரும் 22ஆம் திகதிக்குள் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளோம்.ஆணைக்குழு மீது நம்பிக்கை வையுங்கள். தயவு செய்து அனைவரும் வாக்களியுங்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு நாட்டு மக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகஸ்தர்கள் கட்டாயம் சேவையில் ஈடுபட வேண்டும். கடமைக்கு சமூகமளிக்காவிடின் தாபன விதிக்கோவைக்கமைய அது ஒரு குற்றமாக கருதப்படும்.

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானவுடன் ஊடக நெறிக்கோவையை வெளியிட்டோம். அனைத்து ஊடகங்களும் முறையாக செயற்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வெளியிடல் மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு ஊடகங்களின் ஒத்துழைப்பை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.

பல்கலைக்கழக பணியாட் குழுவினருக்கும், மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கல்

அரச சேவையிலும், தனியார் துறையிலும் பணி புரிபவர்களுக்கு சம்பளம் இல்லது சொந்த விடுமுறை இரத்தாகாத வகையில் விடுமுறை வழங்குவது குறித்து 2024.09.04 ஆம் திகதி அறிவித்திருந்தோம்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பின் போது அரச பல்கலைக்கழகங்களின் பணியாட் குழுவினருக்கும், மாணவர்களுக்கும் வாக்களிக்க செல்லும் வகையில் விடுமறை வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குள் பிரவேசிக்க அனுமதியுடையோர்.

வாக்கெடுப்பு நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், நிலைய பணியாட்குழுவினர், வாக்கெடுப்பு நிலைய கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், வேட்பாளர்களின் தேர்தல் முகவர்கள், வேட்பாளர்களினால் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதிகள், ஒவ்வொரு வேட்பாளர் சார்பாக முறைப்படி நியமிக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலைய முகவர்கள்,

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அனுமதிப் பெற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச கண்காணிப்பு ஒழுங்கமைப்புக்களின் முகவர்கள், தெரிவத்தாட்சி அலுவலரின் அனுமதிபெற்ற அலுவலர்கள் ஆகியோர் மாத்திரமே வாக்களிப்பு மத்திய நிலையத்துக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

வாக்கெடுப்பு நிலைய , வாக்கெண்ணும் நிலைய தகாத செயற்பாடுகள்

வாக்கெடுப்பு மத்திய நிலையத்திலும், வாக்கெண்ணும் நிலையங்களிலும் கையடக்கத் தொலைபேசிகளைப் பாவித்தல், நிழற்படமெடுத்தல், காணொளி பதிவேற்றம் செய்தல், ஆயுதங்களை தம்வசம் வைத்திருத்தல், புகைப்பிடித்தல், மதுபானம் அருந்துதல் அல்லது போதைப்பொருள் பாவித்து விட்ட வருகை தருதல் என்பன தகாத செயற்பாடுகளாக கருதப்படும். தடை செய்யப்பட்ட இச்செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

உறுதிப்படுத்தப்படுதலுக்கான ஆவணங்கள்

காலை 7 மணிமுதல் 4 மணி வரை வாக்களிப்பதற்கு காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வாக்களிக்க செல்பவர்கள் வாக்குச்சீட்டுடன் தேசிய அடையாள அட்டையை கொண்டுச் செல்ல வேண்டும். தேசிய அடையாள அட்டை இல்லாதவிடத்து தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக வெளிநாட்டு கடவுச்சீட்டு, வாகன சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வாரள் அடையாள அட்டை, சிரேஷ்ட பிரஜைக்கான அடையாள அட்டை, தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ள தற்காலிய அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றினை வாக்களிப்பு நிலைய உத்தியோகஸ்தர்களிடம் காண்பித்து வாக்களிக்க முடியும்.

வாக்களிக்கும் முறைமை

வாக்காளர்கள் தமது வாக்கினை வேட்பாளர் ஒருவருக்கு 1 என்று இலக்கமிட்டோ அல்லது ( ) புள்ளடியிட்டோ வழங்க முடியும். 1 என்று இலக்கமிட்டு வாக்களித்ததன் பின்னர் 2 , 3 என்று விருப்பு வாக்கினை அளிக்க முடியும் .( ) புள்ளடியிட்டு வேட்பாளருக்கு வாக்களித்திருந்தால் விருப்பு வாக்களிக்க முடியாது.

பொதுமக்கள் அமைதியான முறையில் வாக்களித்து விட்டு வீடு செல்ல வேண்டும். ஏதேனும் வாக்களிப்பு மத்திய நிலையத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெற்று அதனால் வாக்களிப்புக்கு பாதிப்பு ஏற்பட்டால் அந்த வாக்களிப்பு மத்திய நிலையத்தில் வாக்களிப்பு செயற்பாடுகள் முற்றாக இடைநிறுத்தப்படும். பிறிதொரு தினத்தில் அந்த தொகுதிக்கு வாக்களிப்பை நடத்த நேரிடும். அவ்வாறு நேர்ந்தால் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவது தாமதமாகும்.ஆகவே பொது மக்கள் அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.

பிரச்சார அலுவலகங்கள் நீக்கம்.

நேற்று புதன்கிழமை (18) நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்களுக்காக வழங்கப்பட்ட காலவகாசம் நிறைவடைந்துள்ளது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. வாக்களிப்பு மத்திய நிலையத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் வேட்பாளரின் இல்லம் காணப்படுமாயின் அதில் தேர்தல் பதாதைகள் மற்றும் பிரச்சார சுவரொட்டிகளை காட்சிப்படுத்த முடியாது.ஷ

வாக்கு எண்ணும் பணிகள்.

நாடளாவிய ரீதியில் 13423 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் அளிக்கப்படும் வாக்குகள் 1713 மத்திய நிலையங்கள் ஊடாக எண்ணப்படும். சனிக்கிழமை (21) பி.ப. 4.15 மணிக்கு தபால் மூல வாக்குகள் எண்ணப்படும். தபால் மூல வாக்குகள் எண்ணப்படும் போது ஒரு வேட்பாளர் சார்பில் அவரது 2 பிரதிநிதிகளும், ஏனைய வாக்குகள் எண்ணப்படும் போது ஒரு வேட்பாளர் சார்பில் அவரது 5 பிரதிநிதிகளும் கலந்துக் வாக்கு எண்ணல் மத்திய நிலையத்துக்கு வருகை தர முடியும். வாக்கு எண்ணும் மத்திய நிலையத்தில் தொலைபேசிகளை பாவிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

விருப்பு வாக்கு எண்ணல்.

தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கினை எவரேனும் வேட்பாளர் பெறாத சந்தர்ப்பத்தில் விருப்பு வாக்குகள் எண்ணப்படும். கடந்த காலங்களில் இவ்வாறான நிலைமை ஏற்படவில்லை. இம்முறை விருப்பு வாக்குகளை எண்ணும் சாத்தியம் காணப்படுகிறது.

பொது இடங்கள், வீடுகளில் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

கூட்டம் கூட்டமாக வாக்களிப்பு நிலையத்துக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். வாக்களித்ததன் பின்னர் அமைதியான முறையில் வீடுகளுக்கு செல்லுங்கள். பொது இடங்களில் ஒன்று கூடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகுவதற்கு முன்னர் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிப்பு வெளியிடும் போது வீடுகளில் இருங்கள். தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏதேனும் அசம்பாவிதங்கள் இடம்பெற்று இழப்புக்கள் ஏற்பட்டால் அந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே பாதிக்கப்படுவார்கள். ஆதரவளிக்கும் வேட்பாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.ஆகவே தமது குடும்பத்தை கருத்திற் கொண்டு பொறுப்புடன் செயற்படுங்கள்.

பொலிஸ், முப்படையினர் தயார்

சுதந்திரமாகவும், நியாயமானதாகவும் தேர்தலை நடத்த பாதுகாப்பு தரப்பினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள். தேர்தல் சட்டத்துக்கும், பொதுச்சட்டத்துக்கும் முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக செயற்படுவபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

உத்தியோகபூர்வ அறிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழு ஊடாகவே உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். எதிர்வரும் 22 ஆம் திகதிக்குள் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளோம்.ஆணைக்குழு மீது நம்பிக்கை வையுங்கள். தயவு செய்து அனைவரும் வாக்களியுங்கள். உங்கள் வாக்கு உங்களின் உரிமை அதனை ஜனநாயக முறையில் வெளிப்படுத்துங்கள். பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிமைகளை கொண்டாடுங்கள் என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில்

“வசத் சிரிய – 2024” புத்தாண்டு அழகன்-அழகி விண்ணப்பம் ஏற்கும் காலம் நீடிப்பு

இந்தியாவிலிருந்து இலங்கை வந்த 163 மாணவர்கள்