ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்காக நாமலுக்கும் சஜித்துக்கும் இடையில் நேர்மையற்ற கூட்டணி ஒன்று உருவாகியுள்ளதாக களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இதன்படி, ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டுவதற்காக நாமல் ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்குவதாகவும், அதற்கு பிரதிபலனாக ராஜபக்ஷக்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அரசியல் அலுவலகத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியைக் குழிதோண்டிப் புதைக்க எத்தகைய கூட்டணிகள் உருவாக்கப்பட்டாலும், அதில் எதுவுமே வெற்றியடையாது எனவும், ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் ஜனாதிபதி இன்னும் முன்னணியில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன,
“இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில்தான் போட்டி என்று பலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். மக்கள் விடுதலை முன்னணி குறைந்த வாக்குகளைப் பெற்று தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது என்றே கூற வேண்டும்.
கிராமத்தில் ஜே.வி.பி.க்கு அதிக பலம் இல்லை. எனவே, களத்தில் உள்ள யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தில் இருந்தாலும், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. சமூக வலைதளங்களில் இன்று ஒரு வித்தியாசமான செய்தி பரவி வருகிறது. ஜேவிபி ஒரு குமிழி. அந்த காற்று குமிழி ஊதப்படுகிறது.
ஆனால் உள்ளே வெறும் காற்றே உள்ளது. எனவே இது ஒரு மாயை. இந்த மாயை செப்டெம்பர் 22 காலைக்குள் நிஜமாகிவிடும்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய போதும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷ குடும்பத்தைப் பாதுகாத்து வருவதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர். அப்போது ரணில் ராஜபக்ஷ என்று கூறப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷாக்களை பாதுகாத்திருந்தால் இன்று அவர்கள் ஜனாதிபதிக்கு எதிராக செயற்படுவார்களா? ராஜபக்ஷாக்கள் சஜித்துடன் கைகோர்த்துள்ளதுடன் கூட்டணியை உருவாக்கியுள்ளர். இதுதான் உண்மை.
ஜனாதிபதி தேர்தலில் சஜித்தை வெற்றியடையச் செய்து, எதிர்க்கட்சித் தலைவராக நாமலை நியமிப்பதே சஜித்துக்கும் நாமலுக்கும் இடையிலான இந்தக் கூட்டணியின் நோக்கமாகும். அதற்கு, ராஜபக்ஷாக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என சஜித் உறுதியளித்துள்ளார்.
சஜித் மற்றவர்களை ஏமாற்றிக்கொண்டு, அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று கூறுகிறார். அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவும் நாமல் ராஜபக்ஷவும் சஜித்துடன் கலந்துரையாடியுள்ளனர்.
சஜித் தான் ஜனாதிபதியாக வருவதற்கு உதவிகேட்டும், அதற்காக நாமலை எதிர்க்கட்சித் தலைவராக்குவதற்கு ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார். இது நேர்மையற்ற கூட்டணி. அடுத்த ஐந்தாண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவராக நாமல் ராஜபக்ஷவை நியமித்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்நிறுத்துவதே அவர்களின் எதிர்பார்ப்பு.
இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ராஜபக்ஷாக்கள் செயற்படுகின்றனர். ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்து சஜித்தை ஜனாதிபதியாக்கி அவர்களின் அரசியல் சதிகளை வெற்றிபெறச் செய்வது அவர்களின் தேவையாகும்.”
முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பிரதம செயலாளர் எம்.ஆர்.எம்.பைசல்,
“முஸ்லிம் சமூகமும், தமிழ் மக்களும் எதிர்நோக்கும் தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கக்கூடிய ஒரே தலைவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொவிட் நோய்த்தொற்றின்போது பாராளுமன்றத்தில் தனி ஆசனம் பெற்ற கட்சியில் அங்கம் வகித்த போதும் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் நேரடியாக எமது மக்களுக்காக குரல் கொடுத்தார். அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வையும் வழங்க முன்வந்தார்.
எனவே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போன்ற தலைவர் இருக்கும்போது, சஜித் பிரேமதாச, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதுர்தீன் போன்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளால் முஸ்லிம் சமூகத்திற்கு எந்த நன்மையும் ஏற்படாது.