அரசியல்உள்நாடு

தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு – தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரக் காலம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

குறித்த காலத்திற்குப் பின்னர் எந்தவொரு தனி நபரோ அல்லது குழுக்களோ வேட்பாளர்களை பிரச்சாரம் செய்வது, ஊக்குவிப்பது போன்றன தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் ஆணையாளர் தொடர்ந்து கருத்து வௌியிடுகையில், நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடைமுறையை உறுதி செய்வதற்காக கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.

“பிரச்சார காலம் முடிவடைந்தவுடன் பொது பேரணிகள், விளம்பர பொருட்கள் விநியோகம் அல்லது வீடு வீடாக பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படாது.

எந்தவொரு பிரச்சாரத்திற்கும் எதிராக நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க,சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, நுவன் போககே ஆகியோர் தலைநகரில் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை இன்று நடத்தவுள்ளனர்.

இதனால் கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்கஸ் சந்தியில் இன்று பிற்பகல் 2 மணிக்க இடம்பெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்தை வீதி டவர் மண்டபத்துக்கு முன்பாக இன்று பி.ப. 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேகொட ஆனந்த சமரகோன் மைதானத்தில் இன்று பி.பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பிலியந்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமவீர சந்திரசிறி மைதானத்தில் இன்று பி.ப 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

சர்வஜன அதிகார ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று பி.ப. 2 மணிக்கு கொட்டாவ பிரதான பேருந்து நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

மக்கள் போராட்டம் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகேவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிரிபத்கொட பகுதியில் இன்று பி.ப.3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

Related posts

இரத்மலானையில் ரயில் சாரதிப் பயிற்சி பாடசாலை

ஐ.தே.க தலைவர் குறித்து தீர்மானிக்கும் விசேட பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று

தே.ம.ச.கூட்டணியின் வேட்புமனு விண்ணப்பங்கள் நாளை முதல்