அரசியல்உள்நாடு

மக்கள் இரசியமாக ரணிலுக்கு வாக்களிக்க இருக்கின்றனர் – ஆஷு மாரசிங்க

மக்களை அச்சுறுத்தி வாக்கு கேட்கும் நடவடிக்கையில் தேசிய மக்கள் சக்தி ஈடுபட்டு வருகிறது. அதனால் நாட்டு மக்கள் மௌனமாக இருந்து இரசியமாக ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க இருக்கின்றனர்.

மக்கள் அலை ரணில் விக்ரமசிங்கவுடனே இருக்கிறது என்பதை 21ஆம் திகதி தெரிந்துகொள்ள முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினை என்ன? அதற்கு தீர்வுகாண யாருக்கு முடியும் என்பதை மக்கள் தற்போது தெளிவாக தெரிந்து வைத்திருக்கின்றனர்.

அதனால் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு மக்களை அதிகம் ஒன்று திரட்டி, தங்களின் பக்கமே மக்கள் இருப்பதாக தெரிவிக்க சில கட்சிகள் முயற்சித்து வருகின்றபோதும் மக்கள் அதற்கு ஏமாறப்போவதில்லை.

அதேநேரம் தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டு சில நாட்களில் தேசிய மக்கள் சக்தி, அவர்களின் பிரசாரக் கூட்டங்களுக்கு அதிகமான மக்களை வரவழைத்து, இந்த தேர்தலில் தாங்கள்தான் வெற்றிபெறப்போகிறது என்றதொரு விம்பத்தை ஏற்படுத்தி வந்தனர்.

அந்த காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்க தேர்தல் பிரசாரப்பணியை ஆரம்பித்திருக்கவில்லை. இதனை பயன்படுத்திக்கொண்டே இவர்கள் இவ்வாறானதொரு போலி விம்பத்தை ஏற்படுத்திக்கொண்டு, மக்களை ஏமாற்றி வந்தனர்.

ஆனால் தற்போது தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டங்கள் செயலிழக்க ஆரம்பித்துள்ளன. அவர்கள் தங்களின் பிரசார கூட்டங்களுக்கு வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பஸ்களில் மக்களை அழைத்து வருகின்றனர்.

ரணில் விக்ரமசிங்கவுக்கான மக்கள் ஆதரவு அதிகரிக்க ஆரம்பித்துள்ளதை அவர்கள் அறிந்து வருகின்றனர். அதனால் தற்போது அவர்கள் மக்களை அச்சுறுத்தியும் பயமுறுத்தியும் வாக்கு கேட்கும் பணியை ஆரம்பித்துள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் கடந்த கால வரலாறு மக்களுக்கு தெரியும். அதனால் முழு நாட்டு மக்களும் அவர்களின் அச்சுறுத்தல் காரணமாக மெளனமாக செயற்பட்டு, ரணில் விக்ரமசிங்கவுடன் இரசகசியமாக இருக்கின்றனர்.

அத்துடன் 2009 ஜனாதிபதி தேர்தல், யுத்தம் நிறைவடைந்தவுடன் இடம்பெற்றபோது, யுத்தத்தை வெற்றிகொண்ட தலைவர் என்றவகையில், மக்கள் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்தனர்.

2015 ஜனாதிபதி தேர்தலின்போது நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற தொனிப்பொருளே நாட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தப்பட்டு, முக்கிய விடயமாக கருதப்பட்டமால், அன்று நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் வாக்களித்தனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற பின்னர் 2019ல் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றபோது தேசிய பாதுகாப்பு என்ற தொனிப்பொருள் தலைதூக்கி, கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்தனர்.

அந்த வரிசையில், தற்போது, நாடு பொருளதாார நெருக்கடியில் இருக்கும் நிலையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே தற்போது தொனிப்பொருளாகி இருப்பதால், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழு்ப்ப முடியுமான தலைவர் ரணில் விக்ரமசிங்க என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

அதனால் முழு நாடும் இரகசியமாக ரணில் விக்ரமசிங்கவுடன் இருக்கின்றனர். மக்கள் அலை ரணில் ரணில் விக்ரமசிங்கவுடனே இருக்கிறது. அதனை 21ஆம் திகதி கண்டுகொள்ள முடியும் என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் பிரச்சினைகள் – இன்று கலந்துரையாடல்

 கருத்தரங்குகளுக்கு தடை

குற்றச் செயல்களை ஒழிப்பதற்கான விசேட நடவடிக்கை நாளை ஆரம்பம் – டிரான் அலஸ்.