அரசியல்உள்நாடு

எனது கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அனுர அமைதியாக இருக்கிறார் – ஜனாதிபதி ரணில்

அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை இறக்குமதிப் பொருளாதாரமா அல்லது ஏற்றுமதிப் பொருளாதாரமா என தாம் கேள்வி எழுப்பி, 03 நாட்களாகியும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவன் திருடன், இவன் திருடன் என்று கூறாமல் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் செயற்றிட்டத்தை தேசிய மக்கள் சக்தி முன்வைக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் விவசாய அமைச்சர் அனுரகுமார, கோட்டாபய ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதியை விட மோசமாக நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க தயாராகி வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கஷ்டப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட பொருளாதாரத்தை அழிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் வலியுறுத்தினார்.

பேருவளை கடற்கரை விளையாட்டரங்கில் நேற்று (13) பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் முடியும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு சலுகைகள் வழங்குவதற்கான ஆலோசனைகளும் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

புள்ளி விவரங்களுடன் விடயங்களை முன்வைப்பது போல் திசைகாட்டி தனது வரவு செலவுத் திட்டம் பற்றிய உண்மைகளை புள்ளி விவரங்களுடன் மக்களுக்கு முன்வைக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

எனவே, மக்களை ஏமாறாமல் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் உண்மையான புரிதலுடன் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

”மக்கள் கஷ்டத்தை போக்குவதே எனது நோக்கமாக இருந்தது. அதனை வெற்றிகரமாக செய்திருக்கிறேன். இன்று அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறைந்திருக்கிறது. மக்கள் கஷ்டத்திலிருப்பதும், பிள்ளைகள் பாடசாலைகளுக்கு செல்லாமலிருப்பதும் எனக்கு கவலையளித்தது.

ஆனால், இன்று நாட்டின் பொருளாதாரம் நிலைத்தன்மைக்கு வந்திருக்கிறது. இந்த பயணத்தை இன்னும் ஆறு வருடங்களாவது தொடர வேண்டும். வாழ்க்கைச்சுமையை குறைப்பதே எனது பிரதான இலக்கு.

தொடர்ந்தும் கடன் பெற்று வாழாமல் சொந்த வருமானத்தில் வாழ்வதற்கான ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினோம். அரச ஊழியர்களுக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கினோம்.

வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்திருப்பதால் வாகன இறக்குமதி தடையை நீக்க முடிவு செய்திருக்கிறோம். வரி செலுத்தும் வரம்பை அதிகரித்து மக்களுக்கு சலுகை வழங்க வழி செய்திருக்கிறோம். அடுத்த வருடத்தில் இவற்றை முடக்க முடியாது. நாட்டின் முன்னேற்றத்தை அதிகரிப்பதே எனது நோக்கம்.

சுற்றுலாத்துறைப் பலப்படுத்தினால் இந்த பிரதேசம் இலகுவாக அபிவிருத்தியை நோக்கி செல்லும். புதிதாக ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படும். அரசாங்கத்திலும் தனியார் துறையிலும் நிதி உதவியுடன் தொழில் பயிற்சிகள் வழங்குவோம்.

இதுவே எமது ஆரம்பம். இதனைக் கைவிடக்கூடாது. முன்னாள் விவசாய அமைச்சர் அநுரகுமார திஸாநாயக்கவின் விஞ்ஞாபனத்தை அடிப்படையாக வைத்து வரவு செலவு திட்டமொன்றைத் தயாரித்தோம். அவர் கோட்டாபயவையும் மிஞ்சிவிடுவார் என்பது தெரிகிறது. அவர்களின் கொள்கைப்படி ரூபாவின் பெறுமதி விண்ணைத் தொடும். அவற்றை செயற்படுத்தினால் 2022இல் இருந்ததை விடவும் நெருக்கடிகள் உருவாகும்.

அது குறித்து கேள்வி கேட்டால் அநுரவை அவதூறு செய்வதாக கூறுகின்றனர். அனுரவால் இவற்றை செய்ய முடியுமானால் நான் எதிர்க்கப்போவதில்லை. அவர் சரியான தரவுகளுடன் அது குறித்து விளக்கமளிக்க வேண்டும். சில இளைஞர்கள் திசைக்காட்டிக்கு வாக்களிக்க தீர்மானித்திருந்தாலும் அவர்கள் எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியுடன் இருக்கின்றனர்.

எனவே, திசைக்காட்டிக்கு வாய்ப்பளித்து எதிர்காலத்தை சூனியமாக்க வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். இப்போது அநுர என்னை விவாதத்திற்கு அழைக்கிறார். ஆனால் நான் கேட்ட ஒரு கேள்விக்கு அவர் இன்னும் பதிலளிக்கவில்லை. இவ்வாறானவர்களிடம் எவ்வாறு எதிர்காலத்தை கையளிப்பது.

மறுமுனையில் சஜித் எல்லாவற்றையும் இலவசமாக தருவதாக சொல்கிறார். அவ்வாறு இலவசமாக வழங்க வேண்டுமாயின் அமெரிக்காவிற்கு நிகரான பொருளாதாரம் இலங்கைக்கு இருக்க வேண்டும். எனவே செப்டம்பர் 21 உங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது. டொலரும் இருக்காது என தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன கூறுகையில்,

நாட்டில் அரசியல், பொருளாதார நெருக்கடி இருந்த காலத்தை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். நாடு இருந்தது. ஆனால், நாட்டுக்கு ஒரு தலைவர் அன்று இருக்கவில்லை. தலைவர் இல்லாத நாட்டில் வன்முறைகள் அதிகரிக்கும். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சரியான தருணத்தில் நாட்டை ஏற்றுக்கொண்டு அந்த அராஜக நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஜனாதிபதிக்கு இருப்பது போல் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை செயற்படுத்திய அனுபவம் எதிர்தரப்பு வேட்பாளர்களுக்கு இல்லை. நாட்டின் தலைவர் ஒருவருக்கு சர்வதேச தொடர்புகள் கட்டாயமானது. அந்த சர்வதேச தொடர்புகள் எதிர்தரப்பு வேட்பாளர்கள் இருவருக்குமே இல்லை. அன்றும் சிலர் நாட்டின் ஆட்சியை அரஜகமான முறையில் கைபற்ற முயற்சித்தனர். அந்த முயற்சிகள் கைகூடவில்லை.

தற்போது இலங்கை தொடர்பில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நம்பிக்கை தொடர்ந்தால் மட்டுமே நாட்டின் முன்னேற்றம் நிலைக்கும். குறைந்தபட்ச வருமானம் ஈட்டுவோருக்கும் ஜனாதிபதி நிவாரணங்களை வழங்க வழி செய்திருக்கிறார்.

இன்று நாட்டில் எமிரேட்ஸ் போன்ற நிறுவனங்கள் நாளாந்தம் ஐந்து முறை விமான சேவைகளை முன்னெடுக்கின்றன. அந்தளவு இலங்கைக்கு சுற்றுலா பிரயாணிகள் வந்து குவிகின்றனர். எனவே, நாட்டை மீட்ட தலைவருக்கு வாக்களிப்பதா? மக்களை கஷ்டத்தில் விட்டு தம்மை காப்பாற்றிக்கொண்ட தலைவர்களுக்கு வாக்களிப்பதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றார். ஷ

அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கையில்,

நாடு இன்று நல்ல நிலைமையில் இருக்கிறது. இந்த பயணத்தை மாற்ற வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். கிரீஸிலும் இதேபோன்று பொதுவுடமை மாற்றம் வேண்டும் என்று சிலர் வந்தனர். அங்கிருந்து சர்வதேச நாணய நிதியத்தினை திருப்பி அனுப்பிவிட்டனர். அதன் பின்னர், அந்த நாட்டு மக்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டனர். அவ்வாறான நிலைக்கு நாமும் செல்ல வேண்டுமா?

இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அனுரகுமாரவும் மாத்திரமே வேட்பாளர்களாக உள்ளனர். வேறு எவருக்கு வாக்களித்தாலும் அனுரவுக்கு சாதகமாக அமையும். எனவே, இலங்கையில் இன்று யாழ். தமிழ் மக்களும் மலையக தமிழ் மக்களும் கொழும்பு மக்களும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனேயே உள்ளனர். எனவே, ஜனாதிபதியின் வெற்றி தற்போது உறுதியாகியுள்ளது என்றார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பேசுகையில்,

கடந்த இரு வருடங்கள் மிகக் கஷ்டமான காலத்தை இலங்கை கடந்து வந்தது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றிருக்காவிட்டால் அத்தியாவசிய பொருட்களின் விலை ஆயிரக்கணக்கில் உயர்ந்திருக்கும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை மீட்டெடுத்த வேகத்தில் உலகில் எவருமே செய்யவில்லை.

மலேசிய பிரதமர், மாலைத்தீவு முன்னாள் சபாநாயகர், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாட்டின் அரசியல் பிரதிநிகளிடம் பேசும்போதும் ரணில் விக்ரமசிங்க போன்ற தலைவர்கள் அவர்களின் நாட்டில் இல்லை என்ற ஏக்கம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால், இலங்கை மக்களுக்கே அவரின் அருமை தெரியாமல் இருக்கிறது.

பலர் பத்திரிகைளில் அறிக்கை விடலாம். மேடைகளில் அழகுவார்த்தைகளைப் பேசலாம். ஆனால், நடைமுறையில் செய்ய முடியாது. இப்போது தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு கிடைத்துள்ளது. மேலதிக சம்பள அதிகரிப்பு விரைவில் தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்க ஜனாதிபதி வழிசெய்வார் என்றார்.

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவிக்கையில்,

இலங்கையின் அடுத்த தலைமைத்துவத்தைத் தெரிவுசெய்ய இன்னும் சிறிது நாட்கள் மட்டுமே உள்ளன. இரண்டு வருடங்களுக்கு முன்பு நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்தது. சிலர் அதனை அரசியல் நெருக்கடியாக மாற்றி பிரச்சினை மேலும் உக்கிரமடைய வழிசெய்தனர்.

ஆனால் ஜனாதிபதி துணிச்சலாக முன்வந்து நாட்டு மக்களைப் பாதுகாத்தார். நாட்டுக்கான ஜனாதிபதி செய்த அர்ப்பணிப்பை பலப்படுத்தவே அவரோடு இணைந்துகொண்டோம். அனுரவும் சஜித்தும் மேடைகளில் ஆசைக் கதைகளை சொல்கிறார்கள். அதனைக் கண்டு மக்கள் ஏமாந்துவிடக்கூடாது என்றார்.

முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவிக்கையில்,

இன்று இருக்கும் நிலை வேண்டுமா? கஷ்ட காலத்தை நோக்கி மீண்டும் செல்ல வேண்டுமா? என்பதை இன்னும் 8 நாட்களில் தீர்மானிக்க முடியும். இதே இடங்களில் இரு வருடங்களுக்கு முன்பு எத்தனை நாட்கள் வரிசையில் நின்றோம் என்பதை மறக்கக்கூடாது.

பிரச்சினைகளிலிருந்து மீண்டுவரும் வேளையில் வாய்சொல் வீரர்களை நம்பி மாற்றத்தை செய்து பார்க்க சிந்திப்பது வேடிக்கையானது. அதேபோல் மக்கள் அந்த நிலைமைகளை மறந்திருப்பது வேதனைக்குரியது. ஜே.வி.பிக்கு வெளிநாடுகளில் வேலை செய்யும் 15 இலட்சம் பேர் திசைக்காட்டிக்கு வாக்களிக்க வருவார்கள் என்று சொல்கிறார்கள்.

அப்படி வருவதாயின் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் விமானங்களை இலங்கைக்கு கொண்டுவர வேண்டியிருக்கும். இவ்வாறான பொய்களை மக்கள் நம்புவது கவலைக்குரியது.

எனவே, இன்னும் எட்டு நாட்களில் சரியான தீர்மானத்தை எடுக்காவிட்டால், இருள் யுகத்தில் வாழ வேண்டும் என்பதை மறக்காமல் மக்கள் வாக்களிக்க வேண்டும். எனவே கையிலிருக்கும் கிளியை விட்டுவிட்டு மரத்திலிருக்கும் குருவியைப் பிடிக்கச் சென்றால் இரண்டும் கிடைக்காது என்பதை மக்கள் நினைவில்கொள்ள வேண்டும் என்றார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகையில்,

ஒருநாள் ஒரு வீட்டில் தீப்பற்றிக்கொண்டது. வீட்டில் உள்ளவர்கள் அச்சத்தில் இருந்தனர். அவர்களை மீட்க எவரும் வரவில்லை. அப்போது ஒரு தலைவர் வந்து தீயை அணைத்தார். பின்னர் வந்த சிலர் வீட்டுக்கு வர்ணம் பூசினர். பின்னர் தீயை அணைத்தவரை அவர்கள் திருடர் என்று சொன்னார்கள்” என்று புத்த பெருமான் ஒரு போதனையில் சொல்லியிருக்கிறார். அப்படித்தான் இலங்கையின் நிலைமையும் இருந்தது.

ஜனாதிபதி பதவித் தட்டில் வைத்து தந்தபோதும்கூட எவரும் நாட்டை ஏற்க முன்வரவில்லை. அப்போது சில காலம் கஷ்டங்களை பொறுத்துக்கொள்ளுமாறு மக்களிடம் ஜனாதிபதி கோரினார். அரசியல்வாதிகளுக்கு பொறுமை இருக்கவில்லை. மக்களுக்கு பொறுமை இருந்தது. எனவே, இப்போது சரியான தலைவர்கள் யார் என்பதை தீர்மானிக்க மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

கிரீஸ் நாட்டில் ஒரே வருடத்தில் நான்கு ஆட்சிகள் வந்தன. அப்போது அரச ஊழியர்களின் சம்பளம் 50 சதவீதமாக வெட்டப்பட்டது. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களுக்கான எந்த நிவாரணத்திலும் கைவைக்கவில்லை. ஆனால் நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்க வழிசெய்தார். அதனால் இந்தப் பாதையை மாற்றினால் பாதகமான விளைவுகளை நாடு எதிர்கொள்ளும்.

அடுத்துவரும் தேர்தலை யுத்தம் போல் நினைக்க வேண்டும். அந்த யுத்தத்தில் தோற்றால் நாட்டு மக்கள் பெரும் அழிவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை கருத்தில் கொண்டு சரியான தலைவரை தெரிவு செய்ய வேண்டும்” என்றார்.

Related posts

கோட்டாபய – அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கலந்துரையாடல்

அவசரமாக கட்சி உறுப்பினர்களை அழைக்கும் மைத்திரி!

800 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!