தேசிய ஷுரா சபை பிரதிநிதிகளுக்கும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (12) கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
தேசிய மட்டத்தில் செயற்படும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியமான தேசிய ஷூரா சபை ஜனாதிபதி வேட்பாளர்களை சந்தித்து மகஜரை கையளிக்கும் தொடரிலே இச்சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகள் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பான இருபத்தேழு விடயங்கள் அடங்கிய மகஜர் ஒன்று ஷூரா சபையால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கையளிக்கப்பட்டது.
கோவிட் ஜனாசா மற்றும் பலஸ்தீன் விவகாரங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் எடுத்த தீர்மானங்கள், நடவடிக்கைகளுக்காக முஸ்லிம் சமூகம் சார்பாக தேசிய ஷூரா சபையின் பிரதிநிதிகள் தமது நன்றியையும் பாராட்டுக்களையும் இதன்போது தெரிவித்துக் கொண்டனர்.
முஸ்லிம் சமூகத்தை பாதிக்கும் விடயங்கள் தொடர்பில் தாம் ஏற்கனவே தலையிட்டு பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரல் எழுப்பியுள்ளதாக சஜித் பிரேமதாச இந்த சந்திப்பின் போது தெரிவித்தார்.
கோவிட் தொற்று பரவல் ஏற்பட்ட சமயத்தில், பல தலைவர்கள் மௌனம் காத்து வந்த சந்தர்ப்பத்தில், முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராக, அந்த அநீதிக்கும் பாகுபாட்டுக்கும் எதிராக வீதியில் இறங்கிப் போராடினோம். இவ்வாறு போராடிய ஒரே தேசியக் கட்சியும், அரசியல் தலைமையும் தாமே என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
முற்போக்கு தேசியவாதம் தமது கட்சியின் அடிப்படை பிரதான கொள்கைகளில் ஒன்றாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்டிய அவர், இந்நாட்டில் இலங்கையர்களாக சகலரும் ஐக்கியத்துடனும், சம உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழ்வதற்கு உரிமையுண்டு, அதனை நாம் சகலரோடும் இணைந்து பாதுகாப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.
தேசிய ஷூரா சபையின் பிரதித் தலைவர் எச்.எம்.எம்.ஹசன், தேசிய ஷூரா சபையின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ், தேசிய ஷூரா சபையின் அரசியல் விவகாரப் பிரிவின் தலைவர் என்.எம். ஷாம் நவாஸ், செயற்குழு உறுப்பினர் பாஹிம் உள்ளிட்டோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் எதிர்க்கட்சித் தலைவரின் சமூக நல மேம்பாடு மற்றும் அபிவிருத்தி விவகாரங்கள் தொடர்பான ஆலோசகர் கலாநிதி ரூமி ஹாசிம் அவர்களும் இதில் கலந்து கொண்டிருந்தார்.