அரசியல்உள்நாடு

உலகின் முக்கிய சுற்றுலாத்தலமாக மட்டக்களப்பை அபிவிருத்தி செய்வேன் – ஜனாதிபதி ரணில்

வாகரை தொடக்கம் காத்தான்குடி வரையிலான பாரிய சுற்றுலா வலயமொன்றை  உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு உலகின் பிரதான சுற்றுலாப் பிரதேசமாக மாறும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கல்குடா பிரதேசத்தில் இன்று (08) முற்பகல் இடம்பெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். முற்போக்குத் தமிழர் கழகம் இதனை ஒழுங்கு செய்திருந்தது.

இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், 

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சஜித்துக்கும் அனுரவுக்கும் சரியான கொள்கை இல்லை. அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை மாத்திரமே செய்கிறார்கள் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாடு எதிர்நோக்கும் சவால்களுக்கு அவர்களிடம் தீர்வுகள் இல்லை எனவும், பிரச்சினைகள் ஏற்படும்போது ஓடிவிடுவதாகவும் தெரிவித்தார்.

எனவே, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாட்டுக்காக மக்கள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி எரிவாயு சிலிண்டரை வெற்றியீட்டி நாட்டை முன்னோக்கிக்கொண்டு செல்லும் செயற்றிட்டத்தை வலுப்படுத்துமாறு அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொண்டார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது:

2022இல் நான் இந்த பகுதிக்கு வந்தபோது நீண்ட வரிசை இருந்தது. பல பகுதிகளுக்கும் சென்றேன். நீங்கள் அனைவரும் வரிசையில் இருந்தீர்கள். இந்த வரிசை யுகத்தை நிறைவு செய்ய முடிவு செய்தேன். 

2023இல் நான் வரும்போது வரிசைகள் இருக்கவில்லை. விவசாயிகள் என்னிடம் உரம் கேட்டார்கள். அதனை நான் பெற்றுக்கொடுத்தேன். நீங்கள் சிறந்த விளைச்சலை பெற்றுத் தந்தீர்கள். இவ்வாறு தான் நாட்டை முன்னேற்றினோம். நீங்கள் அனைவரும் கஷ்டப்பட்டீர்கள். மீண்டும் அந்த நிலைக்குச் செல்ல வேண்டுமா? 

நெருக்கடியை போக்க சர்வதேச நாணய நிதியத்துக்கு சென்றோம். நிபந்தனைகளுடன் உதவி கிடைத்தது. உதவி பெற வேறு வழியிருக்கவில்லை. இந்தியாவிடமிருந்து 3.5 பில்லியன் கிடைத்தது. அது தவிர வேறு வழி எதுவும் இருக்கவில்லை. கடினமான முடிவுகளை எடுக்க நேரிட்டது. வரியை அதிகரிக்க நேரிட்டது. விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. 

எவ்வாறு முன்னோக்கிச் செல்ல இருக்கிறோம் என்பது இந்த தேர்தலிலே முடிவாகும். பிரச்சினைகள் வந்தபோது மற்ற தலைவர்கள் ஓடுகையில் நான் மட்டுமே முன்வந்தேன். இவர்களை நம்ப முடியுமா? பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு கோரினார்கள். தேர்தலை நடத்தச் சொன்னார்கள். இவ்வாறு பல நொண்டிச்சாக்குகளைக் கூறினார்கள். இவர்கள் கூறியதைப் போன்று 2022இல் தேர்தலை நடத்தியிருந்தால் என்ன நடந்திருக்கும்? பிரச்சினை தீருமா? அல்லது சிக்கல் ஏற்படுமா? பங்களாதேஷை போன்று நாடு மாறியிருக்கும்.

சஜித் வந்து மேடைகளில் பேசுகிறார், பேசுகிறார். பேசிக்கொண்டே இருக்கிறார். எந்த தீர்வும் அவரிடமில்லை. இவ்வாறானவர்களுக்கு எவ்வாறு தீர்வு வழங்க முடியும். அடுத்த 5 வருடங்களுக்கான ‘இயலும் ஸ்ரீலங்கா’ திட்டம் எம்மிடமுள்ளது. 5 அம்சங்களில் அதில் பிரதானமானவை.

வாழ்க்கைச் சுமையை இலகுபடுத்த வேண்டும்.  வரியைக் குறைப்பதாக சஜித்தும் அநுரவும் சொல்கிறார்கள். வரியை குறைத்தால் வருமானம் குறையும். கடன் பெறுவதாக அவர்கள் சொல்கிறார்கள். 2019இல் கோட்டாபய வரியைக் குறைத்தார். 2022இல் நாடு வீழ்ச்சியடைந்தது. அந்த நிலைமை மீண்டும் ஏற்பட வேண்டுமா? 

பெண்களுக்குத் தான் அதிக பிரச்சினை ஏற்பட்டது? பெண்களின் உரிமைகள் செயற்படுத்தப்படுவதில்லை. பெண்களை வலுவூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பெண்கள் வீடுகளில் எதிர்கொள்ளும் வன்முறைகளை தடுக்க சட்ட ஆலோசனை மற்றும் மருத்துவ சேவை நிலையங்களை அமைக்க இருக்கிறோம். குடித்து விட்டு வீட்டுக்கு வந்து குழப்பம் செய்யும் ஆண்கள் இனி கவனமாக இருக்க வேண்டிவரும். பெண்களின் மரியாதையைப் பாதுகாக்க வேண்டும்.

இந்தப் பிரதேசத்தில் விவசாய நவீன மயமாக்கலை மேற்கொண்டு நவீன விவசாயத்தில் ஈடுபவோருக்கு கடனுதவி வழங்க இருக்கிறோம். மீன்பிடித்துறையிலும் நவீன தொழில்நுட்பத்தை வழங்க இருக்கிறோம்.. கைத்தொழில் வலயங்கள் மற்றும் முதலீட்டு வலயங்களை ஆரம்பிக்க இருக்கிறோம். திருகோணமலையில் ஒன்றை ஆரம்பிப்போம். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இங்கு கொண்டு வர இருக்கிறோம். டிஜிட்டல் மத்திய நிலையமொன்றை மட்டக்களிப்பில் ஆரம்பிக்க இருக்கிறோம். 

இந்தப் பிரதேசத்தை சுற்றுலா வலயமாக முன்னேற்றுவோம். 1977இல் நான் இங்கு வந்த போது தேவநாயகம் அமைச்சராக இருந்தார். நல்லையாவைப் பற்றியும் அறிந்திருந்தேன். எனது தந்தை ஹோட்டலொன்றை ஆரம்பித்தார். அதற்கு அருகில் தான் பிள்ளையானின் கிராமம் இருந்தது. கல்குடாவில் அனைத்து இடங்களுக்கும் சென்று வந்துள்ளேன். வாகரை முதல் காத்தான்குடி வரை பாரிய சுற்றுலா வலயமொன்றை இங்கு உருவாக்குவேன். ஹிங்குரக்கொட விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இருக்கிறோம். இப்பகுதிக்கு வர அது இலகுவாக இருக்கும். சுற்றுலாத்துறையுடன் தொடர்புள்ள பயிற்சிகளை வழங்குவோம். சம்பிரதாய நடனங்கள், கப்பிரிங்ஜா, சம்பிரதாய முஸ்லிம் நடனங்கள், நவீன நடனங்கள், வாத்தியக் குழுக்கள், சுவையான உணவுகள் என பல விடயங்கள் எமக்குத் தேவைப்படும். அவ்வாறு தான் சுற்றுலாத்துறை முன்னேறும்.

இப்பகுதியில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ள இருக்கிறோம். மட்டக்களப்பு பிரதேசத்தை உலகில் தலைசிறந்த சுற்றுலாப் பயண வலயமாக மாற்ற எம்மால் “இயலும்”. சஜித்தினால் அல்லது அநுரவினால் அதனை செய்ய முடியும். கேஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இன்றேல் கேசும் இல்லை சுற்றுலாத்துறையும் இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன்:

“சுவாமி விபுலானந்தர் அரசியல் அதிகாரம் பெற வழிகாட்டியாக இருந்துள்ளார். வெள்ளைக்கார ஆட்சிக்காலம் முதல் பரம்பரையாக அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என எமது மக்கள் சரியாக சிந்தித்து தீர்மானம் எடுத்து வந்துள்ளனர். பல சிறந்த அரசியல் தலைவர்கள் கிழக்கில் உருவாகியுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கான ஆதரவை நாம் 6 மாதங்களுக்கு முன்னரே அறிவித்து விட்டோம். எமது மாவட்டத்திற்கான அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான முதற்கட்டமாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியை வெற்றிபெறச் செய்ய வேண்டும். ஒரு இலட்சத்திற்கு அதிகமான வாக்குகளினால் அவரை வெல்ல வைக்க வேண்டும். அதிகாரம் கொண்ட அமைச்சு பதவிகளை இந்த மாவட்டத்தில் உருவாக்க வேண்டும். எமது வளங்களைப் பயன்படுத்தி கிழக்கு மாகாணத்தில் வறுமையை ஒழிக்க வேண்டும்” என்றார். 

அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா:

”எந்த தேர்தலிலும் காணாத ஒற்றுமை எமது அணியில் உள்ளது. பல கட்சிகள் எம்முடன் ஒன்றாக உள்ளனர். மக்களும் பிரியாமல் இணைந்தே உள்ளனர். கல்குடா தொகுதி முக்கியமான தொகுதி. தேவநாயகம் போன்ற தலைசிறந்த தலைவர்கள் உருவான பகுதி இது. உங்களுக்கு பொய் வாக்குறுதிகளை அளிக்கும் அநுரவினாலோ சஜித்தினாலோ மக்களை ஏமாற்ற முடியாது. கழுத்து போனாலும் உண்மையைச் சொல்லும் தலைவர் ரணில் விக்ரமசிங்க. 

அப்படிப்பட்ட தலைவருடன் அரசியல் செய்வதில் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அழிந்துபோன இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் சவாலை அவர் அச்சமின்றி ஏற்றுக்கொண்டார். மிகவும் சிரமப்பட்டு நாட்டை இந்த இடத்திற்கு கொண்டு வந்தார். இதனைப் பாதுகாத்து நாட்டை முன்னேற்ற வேண்டும். நாட்டின் இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். அடுத்த 5 வருடங்களுக்கு ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்து நாட்டை அபிவிருத்தி செய்வோம்” என்றார்.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்:

”அநுரவும் சஜித்தும் நாடு பற்றி எரிந்த போது பொருளார வீழ்ச்சி ஏற்பட்ட போது இருளில் மூழ்கிய போது ஒரு மெழுகுவர்த்தியை ஏற்ற முன்வரவில்லை. ஜனாதிபதி ஒருவர் தான் தைரியமாக முன்வந்தார். அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்காக போராடிய நோயாளியைக் காப்பாற்றி சாதாரண விடுதிக்கு மாற்றினார். இந்த நாட்டுக்கும் அதே நிலை ஏற்பட்டது. சாதாரண வார்டில் உள்ள நோயாளியை வீட்டுக்கு அனுப்பப் போகிறீர்களா? மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப் போகிறீர்களா? 5 வருட காலத்திற்கு அவருக்கு அதிகாரம் வழங்கினால் நிச்சயம் நாடும் பழைய நிலைமைக்குச் செல்லும்.

நெல் உற்பத்தியில் முதல் 4 நிலைகளில் கிழக்கு மாகாணம் இருந்தது. 40 ஆயிரம் ரூபாவுக்குக் கூட உரம் வாங்கமுடியாத நிலை இருந்தது. 8 ஆயிரம் ரூபாவுக்கு யூரியா விலை குறைந்துள்ளது. 6 ஆயிரம் ரூபாவாக அது குறையும். கிழக்கில் பல அபிவிருத்தித் திட்டங்கள் எமது அரசியல் தலைவர்களினால் கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்டன. நாங்கள் செய்த அபிவிருத்திச் செயற்பாடுகளை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்லக் கூடிய அனுபவமுள்ள வெளிநாட்டு தொடர்புள்ள ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒருவர் தான்.

2030 இற்குள் சஜிதினாலோ அநுரவினாலோ எமது கடன்களை மீளச்செலுத்திவிட முடியுமா? 80 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை எமது மக்கள் வழங்குவார்கள். கல்குடாவை எவ்வாறு அபிவிருத்தி செய்வதற்கான அனைத்து திட்டங்களையும் ஜனாதிபதிக்கு கையளித்துள்ளோம். 10 ஆயிரம் போருக்கான ஆசன ஏற்பாடு செய்தோம். அதனை விட அதிகமான மக்கள் திரண்டுள்ளனர். தபால் மூல வாக்களிப்பில் 80 வீதத்திற்கு மேல் ரணில் விக்ரமசிங்கவிற்கு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்த கூட்டத்தில் இந்து சமயத் தலைவர்கள் மற்றும் ஏனைய மதத் தலைவர்கள், அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, முற்போக்குத் தமிழர் கழக மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தவயோகராஜா நிரோராஜ், கட்சியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ராஜதுரை இராஜேந்திரகுமார், கட்சியின் பொருளாளர் சமித்தம்பி யசோதரன், முற்போக்குத் தமிழர் கழக முக்கியஸ்தர்கள், பிராந்திய அரசியல் தலைவர்கள், அமைப்பாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

Related posts

முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கான ரமழான் விசேட விடுமுறையை விண்ணப்பித்து பெற நிர்ப்பந்தம் – இம்ரான் எம்.பி

‘பிம்ஸ்டெக்’ மாநாடு இலங்கையில்

ஹிருணிகாவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை