அரசியல்உள்நாடு

பொருளாதார நெருக்கடியான காலத்திலும் ரணில் அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கினார் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை, தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய வெறும் ஆவணம் அல்ல எனவும், அதற்கு திறைசேரி மற்றும் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். 

பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப் பட்டதாகவும்,  அரச ஊழியர்களின் சம்பளம் நிர்ணயிக்கப் பட்டிருப்பதால், அதனை அறவே குறைக்கக் கூடாது என்று தெரிவித்து  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த யோசனையை கடுமையாக நிராகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். .

கொழும்பு, பிளவர் வீதியில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகள் எவ்வகையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் பொருளாதார நெருக்கடியான காலத்திலும் கூட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாவை வழங்கியதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியதாவது:

‘’இந்த நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட 2022 ஆம் ஆண்டளவில்,  13 இலட்சத்து எண்பதாயிரம் அரச ஊழியர்கள் இருந்தனர். அவர்களுக்கான சம்பளம், 95 பில்லியன் ரூபாவாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சராக பதவியேற்கும் போது அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை காணப்பட்டது. அதன்படி, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

அதில் ஒன்று அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்பது. ஆனால் ஜனாதிபதி அதனை கடுமையாக நிராகரித்தார். அதன் பிறகு இரண்டு முறை சம்பளம் கொடுத்து இரண்டு, மூன்று மாதங்கள் நிலைமையை சமாளித்தனர். அதன்படி, சாதாரண ஊழியர்களுக்கு உரிய நாளிலும், அதற்கு அடுத்த வாரத்தில் நிறைவேற்றுப் பதவியில் இருப்பவர்களுக்கும் சம்பளம் வழங்கப்பட்டது. அப்படி ஒரு காலம் இருந்ததை இன்று சிலர் மறந்து விடுகிறார்கள்.

2023 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் திறைசேரியுடன் நடத்திய கலந்துரையாடலின் போது அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டார். ஆனால் அப்போது  திறைசேரியால் சாதகமான பதில் அளிக்க முடியவில்லை. ஆனால் இவ்வாறானதொரு பொருளாதார நெருக்கடியின்போது அதற்கு முகம்கொடுக்கும் மக்களில் பிரதானமாக பாதிக்கப்படுவது நிலையான வருமானம் பெறும் அரச ஊழியர்களே என ஜனாதிபதி மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினார்.

இதன்படி அரச ஊழியர்களின் சம்பளத்தை கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலேயே பத்தாயிரம் ரூபாவால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகரித்தார். இதனால், திறைசேரியின் மாதாந்தச் செலவு 12 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமானது. ஆனால் சம்பள அதிகரிப்பு போதாது என்பதே ஜனாதிபதியின் கருத்தாகும். 

அத்துடன், அரச சேவையில் சம்பள முரண்பாடு, ஓய்வூதிய வேறுபாடு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பது போன்ற பிரச்சினைகள் அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளாக இனங்காணப்பட்டுள்ளன. இதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உதய ஆர். செனவிரத்ன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூட் நிலுக்ஷன், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹிரன்சா களுதந்திரி, ஒருங்கிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் எஸ். ஆலோக பண்டார, நிறுவன பணிப்பாளர் நாயகம் எச்.ஏ. சந்தன குமாரசிங்க,  சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெரன்ஸ் காமினி டி சில்வா, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் துமிந்த ஹுலங்கமுவ,  BCS International Technology PTY LTD இன் பிரதம பொது அதிகாரி சந்தி எச். தர்மரத்ன, கொமர்ஷல் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (மனித வளங்கள்) இசுரு திலகவர்தன, ஜனாதிபதி மேலதிக செயலாளர் ஜீ.எல். வர்ணன் பெரேரா ஆகியோர் செயற்படுகின்றனர். மேலும், இந்த 10 உறுப்பினர்களில் மூன்று பேர் தனியார் துறையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

இந்தக் குழுவினால் வழங்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. 18 பரிந்துரைகளுக்கு அமைச்சர்கள் குழு அங்கீகாரம் அளித்துள்ளது. அரச சேவையில் நேரடியாக தாக்கம் செலுத்தும் பல முக்கியமான பரிந்துரைகள் அதில் அடங்கியிருந்தன.

அதன்படி, 2025ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கருதி, அரச சேவையின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை இருபத்தைந்தாயிரம் ரூபாவாக அதிகரிப்பது, குறைந்தபட்ச ஆரம்ப மாதச் சம்பளத்தை 24% இல் இருந்து 50% ஆக அதிகரிப்பது, அதன்படி அவர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை ஐம்பத்தைந்தாயிரம் ரூபாவாக அதிகரிப்பது என்பன பிரதான பரிந்துரைகளாக இருந்தன. 

மேலும், இந்த அதிகரிப்பபை வர்த்தக அரச நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தவிர அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அமுல்படுத்த வேண்டும் என்றும், அனைத்து அரசதுறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்திர பங்களிப்பில் ஆயிரம் ரூபாய் கொண்ட முழு மருத்துவ காப்புறுதித் திட்டத்தை செயல்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டது. மேலும், 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளுக்கு சம்பள உயர்வை வழங்குவதன் மூலம் ஓய்வூதியத்தை மீள்திருத்தம் செய்வதும் பரிந்துரைகளில் அடங்கும். இந்த பரிந்துரைகள் அனைத்தும் 2025 வரவுசெலவுத் திட்ட ஆவணத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இது அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட திட்டமே தவிர வெறும் ஆவணம் அல்ல. இந்த பலன்களைப் பெற மீதமுள்ளது 2025  ஜனவரி 01 ஆம் திகதியாவது ஆகும். மேலும் இது நீண்ட காலத்தின் பின்னர் இந்நாட்டு அரச உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கும் பெரும் நன்மை என்பதைக் கூற வேண்டும். இது தேர்தலை குறிவைத்து நடத்தப்பட்டது என்று யாராவது கூறினால் அது ஆதாரமற்றது என்றே கூற வேண்டும். மிகவும் இக்கட்டான நேரத்திலும் பத்தாயிரம் ரூபாயை வழங்கி அரச ஊழியர்களை நாங்கள் கவனச் செலுத்துகிறோம் என்ற சமிக்ஞையை வழங்கிய அரசாங்கம் இது என்பதையும் விசேடமாக குறிப்பிட வேண்டும்.

இதேவேளை, அரச ஊழியர்களுக்கு நாம் வழங்குகின்ற குறைந்தபட்ச சம்பளமான ஐம்பத்தைந்தாயிரம் ரூபாவிற்கு பதிலாக ஐம்பத்தேழாயிரம் ரூபாவை வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. அது ஒரு சாதாரண அரசியல் கதை என்பதைக் கூற வேண்டும்.

தேசிய மக்கள் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படாவிட்டாலும், வாழ்க்கைச் செலவுக்கேற்ப 6 மாதங்களுக்கு ஒரு முறை வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என பல இடங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6 மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் வரவு செலவுத்திட்டத்தை  தாக்கல் செய்ய வேண்டிவரும்.

இல்லையெனில், ஒதுக்கீட்டுச் சட்டத்தை மாற்ற வேண்டும். ஆனால் மிக முக்கியமான விடயம் என்னவென்றால், நாங்கள் 10,000 ரூபாயை அதிகரித்தபோது, 20,000 ரூபா தருவதாகச் சொன்னார்கள். அதுபற்றி இப்போது எந்தவிதப் பேச்சும் இல்லை.

அரச உத்தியோகத்தர்களுக்கு இந்த நன்மைகளைப் பெற்றுக்கொடுக்கும் அதேவேளையில், அரச சேவையின் வினைத்திறனை அதிகரிப்பது மற்றும் ஆட்சேர்ப்பு முறையை மேலும் வினைத்திறனாக்குவது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளோம். இது ஆகஸ்ட் 12 ஆம் திகதி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்று அங்கீகரிக்கப்பட்ட திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்து அரச ஊழியர்களுக்கு தீர்மானிக்க முடியும்.’’ என்றார். 

ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சித் தலைவர் கலாநிதி அன்வர் முஸ்தபா

நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தலைவர்கள் பின்வாங்கிய போது தனியொரு நபராக நாட்டைப் பொறுப்பேற்றார். நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பினார். எதிர்வரும் 5 ஆண்டுகள் அவருக்கு நாட்டைக் கையளிப்பது தார்மீகக் கடமையாகும்.

13 ஆவது திருத்தத்தை செயற்படுத்துவதாக வடக்கில் சஜித் தெரிவித்தார். அவர் கடந்த  காலத்தில் வழங்கிய வாக்குறுகளை நிறைவேற்றாமல் போனது சுமந்திரனுக்கு தெரியும். இருந்தும் அவர் சஜித்தை ஆதரிப்பது வேடிக்கையாகும்.

முழுமையாக 13 ஆவது திருத்தத்தை சஜித்தினால் நிறைவேற்ற முடியுமா? அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் ராமநாதன், கிழக்கில் உள்ள தலைவர்கள் அபிவிருத்திப் பணிகளை செய்துள்ளனர். முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிசும் சஜித்திற்கு ஆதரவு தெரிவித்தாலும் முஸ்லிங்கள் ஜனாதிபதியின் பக்கமே உள்ளனர்.’’ என்றார்.

Related posts

இன்று முதல் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

ருவன்புர அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

மக்கள் தமது சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்