அரசியல்உள்நாடு

சுமந்திரன், சாணக்கியனின் துணிச்சலான முடிவு வரவேற்கத்தக்கது – திகாம்பரம் எம்.பி

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் படியில் முன்னிலையில் உள்ள வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானம் எடுத்துள்ள தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோரின் துணிச்சலான முடிவும் தீர்க்க தரிசனமும் வரவேற்கத்தக்கது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

நாடு மாத்திரம் அல்லாமல் சிறுபான்மை மக்களும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ள நேரத்தில் இன்னும் சில தினங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

பிரதான வேட்பாளர்களில் சஜித் பிரேமதாசதான் முன்னிலையில் இருக்கின்றார். தமிழ் முஸ்லிம் மக்களதும் மலையக மக்களதும் பெரும்பான்மை ஆதரவு சஜித்துக்கே கிடைத்து வருகின்றது.

வேட்பாளர்களின் கள நிலவரத்தை பொறுமையாகவும் உன்னிப்பாகவும் அவதானித்து தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் உட்பட சிறுபான்மை மக்களின் நலன் கருதி தீர்க்கமான முடிவை எடுத்துள்ளமை பாராட்டத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரை ஆதரித்து அவருக்கு வாக்களிப்பதன் ஊடாகவே வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடியதாக பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்ற தீர்க்க தரிசனம் மிகுந்த செயற்பாடு அவர்களின் அரசியல் முதிர்ச்சியை எடுத்துக் காட்டுகின்றது.

சஜித் பிரேமதாசாவிடம் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கூடிய சிறந்த நிபுணத்துவக் குழு இருக்கின்றது. அவருக்குக் கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியான முறயில் பயன்படுத்தி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வார் என்பதில் ஐயமில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை விடுவிக்க முழுமையாக முடியாவிட்டாலும், ஒரளவு விடுவிக்கப்பட்டிருந்ததை மறுப்பதற்கில்லை.

முழுமையான தீர்வைப் பெற்றுக் கொள்ள சஜித்துக்கு ஆதரவு வழங்குவதே சரியான முடிவு என்பதை தமிழரசுக் கட்சி துணிச்சலோடும், நம்பிக்கையோடும் எடுத்துக் காட்டி ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது.  

வடக்கு, கிழக்கு மலையகம் உட்பட தமிழ் மக்களோடு, முஸ்லிம் மக்களும் இணைந்து சஜித்துக்கு பூரண ஆதரவை வழங்க முன்வந்துள்ள நேரத்தில் நாளுக்கு நாள் அவரின் வெற்றி உறுதி செய்யப்பட்டு வருகின்றது.

அவரின் வெற்றியில் நாமும் பங்காளர்களாக இருந்து எமது மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்னைகளுக்குத் தீர்வு காண முன்வந்துள்ள சுமந்திரனும் சாணக்கியனும் எடுத்துள்ள சாதுரியமான முடிவை பாராட்டுகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொழும்பு மாவட்ட அனைத்து மதுபான, இறைச்சி கடைகளுக்கு நாளை பூட்டு

நாட்டில் மேலும் 260 பேருக்கு கொவிட் உறுதி

பிரதமரின் அழைப்பை ஏற்றது ஐ.தே.க