மகாநாயக்கர்களையும், பௌத்த கலாச்சாரத்தையும் திட்டமிட்ட வகையில் விமர்சிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.
இதனை அலட்சியப்படுத்த முடியாது. தமிழர்களை பாதுகாத்த இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எமது ஆட்சியில் இராணுவத்தினரை பாதுகாப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
குருணாகல் – கல்கமுவ பகுதியில் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கட்சி என்ற ரீதியில் நாங்கள் நாட்டுக்கு அபிவிருத்தி செய்துள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நகரத்தை அபிவிருத்தி செய்தார். நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒருமித்த பொருளாதார கொள்கையை நாங்கள் செயற்படுத்தினோம்.
மகாநாயக்கர்களையும், பௌத்த கலாச்சாரத்தையும் திட்டமிட்ட வகையில் விமர்சிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. இதனை அலட்சியப்படுத்த முடியாது.
பிறிதொரு தரப்பினர் இராணுவத்தையும் கேலிக்கூத்தாக்கினார்கள். விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை பாதுகாத்த இராணுவத்தினர் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள். சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.
உலக நாடுகளில் தற்போது இடம்பெறும் போரினால் சிவில் பிரஜைகள் கொல்லப்படுகிறார்கள். இதனை பற்றி எந்த நாடும் பேசுவதில்லை. நாங்கள் மனிதாபிமான கண்காணிப்புக்களை முன்னெடுத்தோம். தமிழர்களை பாதுகாத்த இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
எமது அரசாங்கத்தின் இராணுவத்தினரின் கௌரவத்தை பாதுகாப்போம். இராணுவத்தினர் இந்த நாட்டுக்கு செய்த சேவையை நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே அவர்களுக்கான புதிய நலன்புரித் திட்டங்களை முன்னெடுப்போம்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஒரு தரப்பினரது தவறான ஆலோசனைகளுக்கமைய விவசாயத்துறையில் முன்னெடுத்த தவறான தீர்மானத்தால் இரண்டு போக விவசாய நடவடிக்கை பாதிக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விவசாய கொள்கையையே நான் செயற்படுத்துவேன்.
இறக்குமதி செய்து உணவளிக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை. தேசிய உற்பத்திகளை சகல வழிகளிலும் மேம்படுத்த விசேட கொள்கை திட்டங்களை செயற்படுத்துவோம் என்றார்.
-இராஜதுரை ஹஷான்