அரசியல்உள்நாடு

ஜே.வி.பி. ஆட்சியைக் கைப்பற்றியிருந்தால் இலங்கை பாதாள உலகமாக மாறியிருக்கும்

நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைவார்கள் என மக்கள் நம்புகின்றனர். ஒவ்வொரு நாளும் வெற்றி பெற அரசியல் கட்சி தேவையில்லை. ஜே.வி.பி. ஆட்சியைக் கைப்பற்றியிருந்தால் இலங்கை பாதாள உலகமாக மாறியிருக்கும். இத்தேர்தலில் கட்சி பேதமின்றி, நாட்டை மீட்கும் திட்டத்திற்கு கூட்டாக ஆதரவு தாருங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க கோரிக்கை விடுத்தார்.

பம்பலப்பட்டியவில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர்கள் 134 பேர் வாக்களித்து ரணில் விக்கிமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமையால் அவருக்கு மக்கள் ஆதரவு இல்லை என்று சிலர் குறிப்பிடுகின்றனர். உண்மையில் அன்று அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்காவிட்டால் நிச்சயமாக பங்களாதேஷ் போன்ற நிலைமையே ஏற்பட்டிருக்கும்.

ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லால் காந்த பாராளுமன்றத்தை கைப்பற்றி தமக்கு தேவையான சட்டங்களை தாமே நிறைவேற்றிக் கொள்வோம் என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அழைப்பு விடுத்தார். அன்று அவர் கூறியது நடப்பதற்கு இடமளித்திருந்தால் பங்களாதேஷைப் போன்று ஆட்சியும் ஆட்சியாளர்களும் இல்லாத இலங்கையே எஞ்சியிருக்கும்.

ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ஒன்றிணைந்தால் வீழ்ந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். எனவே தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அடையாளத்தையும் கொள்கைகளையும் பாதுகாத்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொண்டோம்.

காலி முகத்திடல் போராட்டத்தில் இந்த நாட்டிலுள்ள நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செய்திகள் பல இருந்தன. அரசியல் கட்சிகளின் பிளவுகளுக்கும், நாடுகளுக்கு இடையேயான விரிசலுக்கும் எதிராக அனைத்து இனத்தவர்களும் இணைந்து சகல பண்டிகைகளைகளையும் கொண்டாடுவதைப் பார்த்திருக்கிறோம். கல்வி முறையில் மாற்றம் வர வேண்டும், குறைபாடுகள் சரி செய்யப்பட வேண்டும், வரி சரியாக விதிக்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஜே.வி.பி. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தால் நாடு பாதாள உலகமாக மாறியிருக்கும். பாராளுமன்றத்தில் சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய இரண்டு உறுப்பினர்களைத் தவிர ஏனைய அனைவரும் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு வாக்களித்தனர். நாட்டின் இன்றைய நிலையைப் பார்க்கும்போது, அன்று நாம் எடுத்த தீர்மானத்தைக் கண்டு மகிழ்ச்சியடைகிறோம்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போதும், சுயேச்சை வேட்பாளராக போட்டியிடத் தீர்மானித்த போதும் நாட்டை கட்டியெழுப்ப சகல கட்சிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தார். தனியொரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து நாடு சுவாசிக்கக்கூடிய நிலையை உருவாக்கினார்.

இன்றைய நிலவரப்படி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காணப்பட்ட  பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அரசியல் நோக்கத்தோடும், வெறுப்போடும், கோபத்தோடும் நாம் தீர்மானங்களை எடுத்திருந்தால் இன்று இந்த அமைதியான நிலைமை ஏற்பட்டிருக்காது.

எனவே தற்போதுள்ள நிலைமை மாறினால் மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டியிருக்கும். நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைவார்கள் என மக்கள் நம்புகின்றனர். ஒவ்வொரு நாளும் வெற்றி பெற அரசியல் கட்சி தேவையில்லை. இத்தேர்தலில் கட்சி பேதமின்றி, நாட்டை மீட்கும் திட்டத்திற்கு கூட்டாக ஆதரவு தாருங்கள்.

ஏனென்றால் அரசியல் செய்வதற்கு ஒரு நாடு வேண்டும். பொது எதிரி என்றால் நாடு முழுவதும் ஒன்றுபட வேண்டும். அப்படிச் செய்தால் பிறக்காத தலைமுறைக்கு நல்ல நாட்டை உருவாக்கலாம். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கைகோர்க்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். 

-எம்.மனோசித்ரா

Related posts

தனியார் பஸ்கள் போக்குவரத்திலிருந்து விலகல்

ஊரடங்கு சட்டத்தை மீறுவோர் தனிமைப்படுத்தலுக்கு

மகளை தவறான முறையில் தொலைபேசியில் காணொளி எடுத்த தாய் முல்லைத்தீவில் கைது!