அரசியல்உள்நாடு

நாட்டில் வினோதமான அரசாங்கமே காணப்படுகிறது.

இன்று, நாட்டில் ஒரு வினோதமான அரசாங்கமே காணப்படுகிறது. இந்த அரசாங்கம் உயர் நீதிமன்றத்தின் முடிவுகளை நிராகரித்து செயற்படுகின்ற வினோத அரசாங்கமே உள்ளது.

நாட்டின் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை பின்பற்றுகிறார்கள் இல்லை. பதில் ஜனாதிபதி, தனது வகுப்புச்சகாவான பிரதமர், சபாநாயகர், நாட்டை சீர்குலைத்த திருடர் தரப்பு ஆகியோர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, நாட்டின் சட்டத்தை அப்பட்டமாக மீறி செயற்படுகின்றனர்.

ஜனாதிபதியும் பிரதமரும் கூறும் சட்டமே இன்று நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அரசியலமைப்பை அப்பட்டமாக மீறி வருகின்றனர். நாட்டின் சட்டம் மற்றும் அரசியலமைப்பை உதாசீனப்படுத்தி வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அவர்கள் எண்ணுவது போல், அவர்கள் சொல்வது போல் நாட்டின் சட்டமாக கருதப்பட்டால் அவர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே நான் அவர்களுக்கு கூற வேண்டும். இந்நாட்டு மக்கள் நீதி, நியாயம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை கொண்ட யுகத்தை உருவாக்கும் போது, அரசியலமைப்பை மீறுபவர்கள் சட்டத்திற்கு முகம் கொடுக்க நேரிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பதுளை மாவட்டம் பசறை தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதிக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் தலைமையில் நேற்று (28) பசறை நகரில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூட்டத்தின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் தலைவர்கள், மாவட்ட மற்றும் தொகுதிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வாழ்க்கை நெருக்கடியில் தவிக்கும் மக்களுக்கு இப்போது தீர்வும் பதில்களுமே தேவை. ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பிறகு, நியாயமான காலத்திற்குள், துக்கம், அசௌகரியம், அழுத்தங்களை சந்திக்க நேரிடாத மக்கள் வாழ்க்கையை உருவாக்கித் தருவேன். மாளிகைகளில் சுகபோகமாக வாழும் நாட்டை ஆளும் பிரபுக்களுக்கு சாதாரண மக்கள் படும் துன்பம் புரிவதில்லை.

இவர்களுக்கு இரக்கமும் கருணையும் இல்லை. இவ்வாறான ஆட்சியாளர்களால் வங்குரோத்து நிலையில் உள்ள எமது நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நேரடியாக தீர்மானங்களை எடுக்கும் தலைவரே எமது நாட்டிற்குத் தேவை,

கருணை கொண்ட, மக்களின் எண்ணங்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும் வலிமையான, ஆற்றல் மிக்க, நேரடியாக முடிவெடுக்கும் தலைவரும் அரசாங்கமுமே நாட்டிற்குத் தேவை.

மாளிகை அரசியலுக்கு முற்றுப்புள்ளி, தாம் மாளிகை அரசியல் விளையாடும் அரசியல்வாதியல்லாததால், அந்த மாளிகைகளை இலவசக் கல்வியின் கீழ் நவீன தொழில்நுட்பங்களை கற்பிக்கும் கல்வி நிலையங்களாக மாற்றி, இலவச உயர்கல்வி நிலையங்கள் மூலம் உலகையே வெல்லும் ஸ்மார்ட் மாண தலைமுறையை உருவாக்குவேன் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

தோட்ட மக்களை ஏமாற்றும் காலம் முடிந்துவிட்டது,

தோட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் தலைவர்கள் அண்மையில் ஒரு வினோத மோசடியை நடாத்தி, போலி வர்த்தமானி மூலம் 1700 சம்பளம் பெற்றுத் தருவதாக தெரிவித்தனர். தோட்ட உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடருவோம் என கூறிக் கொண்டு, தோட்ட உரிமையாளர்களுடன் டீல் போட்டுள்ளனர். இரு தரப்பையும் சமநிலைப்படுத்தி மக்களை ஏமாற்றும் கோட்பாட்டை நடைமுறைப்படுத்துகின்றனர் என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களை விடுத்து, தோட்டத் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவோம்,

தோட்ட மக்களை கூலித் தொழிலாளிகள் என்ற நிலையில் வைத்திருப்பதற்கும், தோட்ட மக்களை லயன் அறைகளுக்குள் வைத்திருக்கவுமே ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். தோட்ட மக்களுக்கென தனி கிராமங்களை உருவாக்காமல் லயன் அறையிலான கிராமங்களை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நாட்டின் அரச தோட்டத் துறையில், தனியார் தோட்டத் துறையில் இலட்சக்கணக்கான ஏக்கர் காணி விவசாயம் செய்யப்படாத பாழ் நிலங்கள் காணப்படுகின்றன. இவ்வாறானதொரு நிலை இருந்தும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பதாக ஏமாற்றி வருகின்றனர். தோட்ட மக்களை ஏமாற்றாமல், தோட்ட மக்களை நிரந்தர தொழிலாளியாக்காமல், காணியில் வீட்டு உரிமையை வழங்கி சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். தோட்ட மக்களை பலப்படுத்துவேன் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளராக தேயிலை உற்பத்திக்கு பங்களிக்க முடியும். சாதி, மதம், வர்க்கம், கட்சி என வேறுபாடின்றி இத்துறையில் ஆர்வமுள்ள ஏனைய இளைஞர்களும் தோட்டத் தொழில் முனைவோர் ஆக்கப்படுவர். தோட்டத் தொழிலாளர் சமூகத்தை பெருந்தோட்ட தொழில்முனைவோராக மாற்றுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி வெல்லும் என்பது நிரூபணமாகியுள்ளது,

இம்முறை அனைத்து மாகாணங்கள், அனைத்து மாவட்டங்கள், அனைத்து பிரதேசங்கள், 9 மாகாணங்கள், வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, போன்ற அனைத்து இடங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி வெல்லும் என்பதை சகல ஆய்வறிக்கைகளும் வெளிக்கொணரர்ந்துள்ளன. நாட்டை வெல்லும் பயணத்தை முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Related posts

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு.

பொலிஸ் அதிகாரிகள் 17 பேருக்கு இடமாற்றம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்தமைக்காக பரீட்சை அறையில் இருந்து மாணவர் வெளியேற்றம்