உள்நாடு

முடங்கியது ஹட்டன் நகரம்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1700 ரூபா உடன் வழங்குமாறு பெருந்தோட்ட கம்பனிகளுக்கும், அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுத்து தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் ஹட்டனில் இன்று (28 ) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், எம்.உதயகுமார், எம்.வேலுகுமார், முன்னாள் மாகாண உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், தொழிலாளர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமை, சம்பள உரிமை, வீட்டு உரிமை என்பன இதன்போது வலியுறுத்தப்பட்டதுடன், தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீள பெறப்பட்டமை தொடர்பிலும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு நிற ஆடைகளை அணிந்திருந்ததுடன், ஹட்டனில் உள்ள சில கடைகளிலும், முச்சக்கரவண்டிகளிலும் கறுப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஹட்டன் நகர புட்சிட்டி பகுதியில் இருந்து போராட்டத்தை ஆரம்பித்து ஹட்டன் பிரதான நகர் வழியாக பேரணி மணிக்கூட்டு கோபுரத்தை சென்றடைந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், கலகத் தடுப்பு பிரிவினரும், நீர் தாரை பிரயோக வாகனமும், அட்டன் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன், ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலிருந்தும் பெருந்தொகையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த போராட்டம் காரணமாக ஹட்டன் நகரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

– க.கிஷாந்தன்

Related posts

சீனா இலங்கைக்கு குறிப்பிட்ட அரசாங்கத்திற்காக உதவவில்லை

கடவுச்சீட்டு பிரச்சினை – திங்கள் முதல் முடிவுக்கு வருகிறது – அமைச்சர் விஜித ஹேரத்

editor

இஸ்ரேல்- பலஸ்தீன் போரால் கச்சா எண்ணெயின் விலை உயர்வு