அரசியல்

சுபீட்சம் ஏற்பட ரணிலின் ஆட்சி தொடர வேண்டும் – எம்.ராமேஷ்வரன் MP

இலங்கையின் பொருளாதாரம் அபிவிருத்தியை நோக்கி பயணிக்க வேண்டுமெனில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி தொடர வேண்டுமெனவும், நாட்டு மக்களும் இதனை உணர்ந்துள்ளனர் எனவும் இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

பல வருட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்ட 5.5 கி.மீ வரையிலான பூண்டுலோயா முதல் டன்சினன் வழியாக நுவரெலியா செல்லும் பிரதான பாதை, 2024 ஆம் ஆண்டின் 1000 கி.மீ வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 130 மில்லியன் ரூபா செலவில் கார்ப்பட் இடப்பட்டு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன மற்றும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர்களால் மக்கள் பாவனைக்கு ஞாயிற்றுக்கிழமை (21) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ்வரன் மேலும் கூறியவை வருமாறு,

“எமது அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கோரிக்கையின் பிரகாரமே இவ்வீதி புனரமைக்கப்பட்டு இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

மலையக மறுமலர்ச்சிக்காக அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்து ஜனாதிபதியுடன் உதவியுடன் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால்தான் நெருக்கடியான கட்டங்களில்கூட எமது மக்களுக்காக சேவைகளை வழங்க முடிகின்றது.

விமர்சன அரசியல் என்பது இலகுவானது, அதனையே இன்றைய சில மலையக அரசியல்வாதிகள் செய்துவருகின்றனர். ஆனால் சவாலை ஏற்று, நெருக்கடியான நேரங்களில்கூட மக்களுக்காக செயற்படுவதே உண்மையான அரசியல். அதனையே நாம் செய்துவருகின்றோம்.

இன்று வீரவசனம் பேசும் அரசியல்வாதிகளெல்லாம் நாடு வீழ்ந்தபோது சவாலை ஏற்க முன்வரவில்லை. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதான் நாட்டை பொறுப்பேற்றார்.

இன்று நாடு முன்னோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது. நிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி பணிகள் மீள ஆரம்பமாகியுள்ளன. இதற்கு ஜனாதிபதியின் ஆளுமையும், தலைமைத்துவமும் காரணமாகும்.

எமது அமைச்சரும் அமைச்சரவையில் இருந்து ஜனாதிபதிக்கு பக்கபலமாக இருந்து வருகின்றார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாடு எப்படி இருந்தது? இன்று எவ்வாறு உள்ளது? பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளன. மின்சார கட்டணம் குறைந்துள்ளது. நீர் கட்டணமும் மறுசீரமைக்கப்பட உள்ளது.

எனவே, இந்நாடு முன்னேற வேண்டுமெனில், நாட்டு மக்கள் வாழ்வில் சுபீட்சம் ஏற்பட வேண்டுமெனில் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி தொடர வேண்டும்.” என்றார்.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு துப்பாக்கிகள்.

editor

ரிஷாட் எம்.பி யை சந்தித்த இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்.

editor

மக்களின் ஆணையை மீறி கட்சி தாவியோருக்கு தேர்தலிலே தீர்ப்பு – ரிஷாட் எம்.பி

editor