உள்நாடு

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு கொடுக்கும் விவகாரம் – நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களுடன் தொடர்புடையது.

2024.07.09ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சட்டத்துறை வல்லுநர்கள், அரசியல் பிரமுகர்கள், துறைசார்ந்தவர்கள், ஆலிம்கள் ஆகியோரிடையிலான விஷேட சந்திப்பொன்று தெஹிவளை பெரிய ஜுமுஆ பள்ளிவாயலில் அதன் நிர்வாகத்தினரின் பங்களிப்புடன் நடைபெற்றது.

பொதுவாக சமூகம் சார் விடயங்களில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவானது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது தேவையேற்படும் பட்சத்தில் இவ்வாறு சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் துறைசார்ந்தவர்களை அழைத்து, கலந்தாலோசிக்கும் வழக்கத்தின் அடிப்படையிலேயே இச்சந்திப்பும் நடைபெற்றது.

கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக நிரூபனமாகி, நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது சிறையிலிருக்கும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைப் பெற்றுக்கொடுக்கும் விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுபலசேனா அமைப்பினால் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்தே குறித்த விடயத்தினை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் கலந்தாலோசிப்பதற்காக சமூகத்தின் மேற்படி முக்கிய சிவில் அமைப்புகளின் பிரமுகர்கள் மற்றும் வழக்குத் தாக்கலுடன் தொடர்புடையவர்களை ஜம்இய்யா அழைத்து கலந்துரையாடியது.

அதனடிப்படையில் இப்பொதுமன்னிப்பு விவகாரமானது நாட்டின் சட்டத்தோடும் உயர் நீதிமன்றத்தோடும் நேரடியாக தொடர்புற்றிருக்கும் நிலையில் முஸ்லிம் சமூகத்துடனும் சம்பந்தப்படுவதால் நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களதும் கருத்தைப் பெறாமல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவோ, முஸ்லிம் சிவில் அமைப்புக்களோ, அரசியல் பிரமுகர்களோ இது தொடர்பில் எந்தவித நிலைப்பாடுகளையும் எடுக்கமுடியாதுள்ளது என குறித்த கலந்துரையாடலில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

Related posts

பொதுத் தேர்தல் 2020 : முதல் தேர்தல் முடிவுகள் மாலை 4 மணிக்கு

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கொரோனா அச்சுறுத்தல் – அனைத்து பாடசாலைகளுக்குமான அறிவித்தல்