அரசியல்

தீகவாபி தூபியில் நினைவுச் சின்னங்கள், பொக்கிஷங்கள் வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு.

வரலாற்றுச் சிறப்புமிக்க தீகவாபி தூபிக்குள் புனித தாது, பொக்கிஷங்கள் என்பவற்றை வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (14) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்களிப்புடன் நடைபெற்றது.

இலங்கையின் நான்காவது பெரிய தூபிகளில் ஒன்றான தீகவாபியை புனரமைக்கும் பணிகள் 2020ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டன.

மகா சங்கத்தினரின் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தீகவாபி தூபியில் புனித தாது வைக்கப்பட்டபோது விமானப்படையினர் மலர் தூவி அனுஷ்டித்தனர்.

புனித தாது மற்றும் ஏனைய தாதுக்கள் வைக்கப்பட்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தாது மண்டபம் மற்றும் அன்னதான மண்டபம் என்பவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்துவைத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன,  கிழக்கு மாகாணத்தின் பௌத்த பாரம்பரியத்தை பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் கீழ் தீகவாபி தாது கோபுரம் மற்றும் முகுது மகா விகாரையை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

‘தீகவாபி அருண நிதியம்’ என்ற பெயரில் ஒரு நிதியத்தை நிறுவி நிதி சேகரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர் தாது கோபுரம் 62.3 அடி உயரத்துக்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்கியதோடு பக்தர்கள் வழங்கிய தாராளமான ஆதரவும் பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மல்வத்து தரப்பு வணக்கத்துக்குரிய அங்கும்புரே பிரேமவன்ச தேரர், கிழக்கு மாகாண பிரதி பிரதான சங்க நாயக்க தேரர், ரஜமகா விகாராதிபதி வணக்கத்துக்குரிய மகா ஓயா சோபித தேரர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பௌத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் டீ. வீரசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா , இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே , கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா,  விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ , முன்னாள் அமைச்சர் தயா கமகே,  தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் பேராசிரியர் துசித மெண்டிஸ் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

கட்டுப்பணம் செலுத்தினார் ரணில்.

சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – ஜனாதிபதி ரணில்

editor

நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்!

editor