மத்திய நேபாளத்தில் மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் இன்று (12) அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பயணிகள் பஸ்கள் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த பேருந்துகளில் 63 பயணிகள் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, திரிசூலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, மதன் – ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, இன்று (12) அதிகாலை 3.30 மணியளவில், சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டுப் பஸ்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
இரண்டு பஸ்களிலும் 63 பயணிகள் இருந்துள்ளனர். பஸ்ஸில் இருந்த பயணிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பஸ்கள் திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால், தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்கு இடையூறாக உள்ளது எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹல் கூறுகையில், “நாராயண்காத் – முகிலின் சாலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பஸ்கள் அடித்துச் செல்லப்பட்டதில் பல பயணிகளைக் காணவில்லை என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால், பயணிகளைத் தேடித் திறம்பட மீட்கும்படி, உள்துறை நிர்வாகம் உட்பட அரசாங்கத்தின் அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளேன்.
வானிலை மோசமாக இருப்பதால் காத்மாண்டுவில் இருந்து சித்வானின் பரத்பூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் இன்றைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நேபாள பொலிஸ் மற்றும் ஆயுதப்படையினர் மீட்பு பணிகளுக்காக சம்பவ இடங்களை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக பொலிஸ் கண்காணிப்பாளர் பவேஷ் ரிமல் தெரிவித்தார்.
பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால், நாராயண்காட்-முகிலிங் சாலைப் பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.