அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

கிழக்கு ஆளுநர் இணைப்பாளர்களை நியமிப்பது சட்டவிரோதம் : தேர்தல் ஆணைக்குழு

(UTV | கொழும்பு) –   கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் இணைப்பாளர்களாக ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் நியமிக்கப்படுவது சட்டவிரோதமாகும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  இந்நியமனங்களை உடனடியாக நிறுத்துமாறு கோரி கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளருக்கு கடந்த வாரம் கடிதமொன்று எழுதியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பரினால் இந்த நியமனம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனையடுத்து, குறித்த நியமனத்தினை நிறுத்துமாறு கோரி மீண்டுமொரு கடிதத்தினை கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளருக்கு அனுப்பவுள்ளதாகவும் சமன் ரத்னாயக்க கூறினார்.

இது போன்று முன்னாள் தென் மாகாண ஆளுநர் வில்லி கமகேயினால் மேற்கொள்ளப்பட்ட இணைப்பாளர் நியமனங்கள் தேர்தல் ஆணைக்குழுவின் தலையீட்டினை அடுத்து இடைநிறுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் இறுதியாக செயற்பட்ட மேயர்களும், தவிசாளர்களும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் இணைப்பாளராக நியமிக்கப்படவுள்ளனர்.

இதற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு விசேட கடிதமொன்றினை நேற்று (04) வியாழக்கிழமை எழுதியுள்ளார். “ஒருங்கிணைப்பாளர்களின் சட்டவிரோத நியமனங்கள் – தேர்தல் சட்டங்களை அப்பட்டமாக மீறுதல்” எனும் தலைப்பில் தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னாயக்கவிற்கு பிரதியிட்டு அனுப்பப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைய கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்பாளர்களாக நியமித்து அவர்களுக்கு உள்ளுராட்சி மன்றங்களின் வாகனங்கள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தேர்தல் சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும், ஏனெனில் இவர்களில் பெரும்பாலானோர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக உள்ளனர், அவர்களின் வேட்புமனுக்கள் இன்னும் செல்லுபடியாகும். மறுபுறம், இது மூன்று மாதங்களுக்குள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கான இலஞ்சமாகும். இது மிகவும் தீவிரமான விடயமாகும். இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருமாறு எமது கட்சி மற்றும் கட்சித் தலைமையால் எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆளுநர் மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு உத்தரவுகளை அனுப்பி இந்த சட்டவிரோத நியமனங்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்” என அவர் கோரியுள்ளார். இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநரினால் வழங்கப்படவுள்ள ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொறுப்பேற்கக் கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார். எங்கள் கட்சியின் உறுப்பினர்களுக்கு இவ்வாறான பதவிகளை கொடுத்து அவருக்கு சார்பானவர்களாக அவர்களை மாற்றிக்கொள்ள முயற்சிப்பதாக நிசாம் காரியப்பர் குற்றஞ்சாட்டினார். இவ்வாறான ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாட்டிற்கு எமது கட்சி ஒருபோதும் துனைபோகாது. கட்சியின் இந்த தீர்மானத்தை மீறி செயற்படுவோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 றிப்தி அலி

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

1000 CC இற்கு குறைவான வாகனங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

X-Press Feeders நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி மன்னிப்பு கோரினார்

வீடுகளை புதுபித்து தறுமாறு எம்பிக்கள் கோரிக்கை!