உள்நாடுசூடான செய்திகள் 1

மக்காவிலிருந்து வந்த மெளலவியின் உடமையில் இருந்த கோடி ரூபா பெறுமதியான தங்கம்!

(UTV கொழும்பு) ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா சென்றதாக கூறப்படும் மெளலவி ஒருவரும், அவரது குழுவில் சென்ற பெண் ஒருவரும் மீள நாடு திரும்பும் போது பெரும் தொகை தங்க நகைகளை சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயன்றார்கள் எனும் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்முனை பகுதியை சேர்ந்த்த 44 வயதான மெளலவி ஒருவரும், 49 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி சுமார் ஒரு கோடியே 90 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் பொலிசாரால் சந்த்தேக நபர்களின் உடமைகளில் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும், சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் UTV செய்திப்பிரிவிடம் தெரிவித்தது.

சம்பவம் தொடர்பில் அறிய முடிவதாவது,

கடந்த 21 ஆம் திகதி பிற்பகல் 2.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை சவூதி அரேபியாவிலிருந்து வந்த இடிஹாட் விமான சேவைக்கு சொந்தமான ஈ.வை.300 எனும் விமானம் வந்தடைந்துள்ளது. இந்த விமானத்திலேயே குறித்த மெளலவியும், பெண்ணும் வந்துள்ளனர். அவர்கள் விமான நிலைய சுங்க பரிசோதனைகள் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட போது, விமான நிலைய பொலிஸ் குழுவொன்றினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில், விமான நிலைய வெளியேறல் பிரிவில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களின் பயண பொதிகளுக்களை பொலிசார் சோதனை செய்துள்ள போது சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்ப‌டும் 850 கிராம் நிறை உடைய 24 மற்றும் 22 கரட் தங்க சங்கிலிகள், வலயல்கள், காதணிகள் உள்ளிட்ட ஆபரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை, நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சர் எரிக் பெரேராவின் ஆலோசனைக்கு அமைய, உதவி பொலிஸ் அத்தியட்சர் பாலித்த அமரதுங்கவின் நெறிப்படுத்தலில், விமான நிலைய பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பியல் ஜீவரத்ன சில்வா தலைமையிலான குழுவினர் ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து, இது குறித்து நீதிமன்றுக்கு பீ அறிக்கை ஊடாக விடயங்களை முன் வைத்துள்ள பொலிஸார் சந்தேக நபர்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.  இந்த் நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடரும் நிலையில் எதிர்வரும் முதலாம் திகதிவரை சந்தேக நபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(ஆலியா செய்ன்)

Related posts

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் மேற்கொண்டுள்ள தீர்மானம்…(UPDATE)

வாத்துவ 4 பேர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் – இருவரும் மீண்டும் விளக்கமறியல்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பிள்ளையானுக்கு அனுமதி