பாலின சமத்துவ சட்டமூலம் பாலின சிகிச்சை மாற்று வியாபாரத்தை ஊக்குவிப்பதால் இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் ஆண் எம்.பி.க்கள் பெண்களாகவும்,பெண் எம்.பி.க்கள் ஆண்களாகவும் மாற்றமடைவதற்கு விரும்புகின்றார்கள் என்றே கருதப்படுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், சுயாதீன எதிரணி எம்.பி.யுமான பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) பாலின சமத்துவ சட்டமூலம் தொடர்பில் சபையில் ஏற்பட்ட வாதப் பிரதிவாதத்தின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
பாலின சமத்துவம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தை எதிர்க்க வேண்டிய அவசியம் கிடையாது.அரசியலமைப்புக்கு அமையவே நீதிமன்றம் தொழில்நுட்ப ரீதியில் ஆராய்ந்து தீர்ப்பளித்துள்ளது. பெண் சமத்துவம் என்று குறிப்பிட்டுக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகளுக்குள் மாற்று பாலினத்தவர்களை உள்ளடக்குவதையே நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்.