உள்நாடு

ஐ.எஸ் விவகாரம்: ஒஸ்மான் ஜெராட் கைதுவுக்கு பின் நடந்த உத்தரவு என்ன?

ISIS தொடர்பில் இலங்கையில் கைது செய்யப்பட்ட மூவரின் வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்துவதற்கு பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் இன்று (01) கோட்டை நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்றுள்ளனர்.

ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் இலங்கையில் கைது செய்யப்பட்ட மூவர் தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டு இந்த அனுமதி பெறப்பட்டுள்ளது.

அத்துடன், இணையத்தில் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது தொடர்பான சிசிடிவி காட்சிகளை பெற்றுக்கொள்ளுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களை வழிநடத்திய தலைவராக கருதப்படும் ஒஸ்மான் ஜெராட் கொழும்பில் நேற்று (31) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த கூட்டு நடவடிக்கையின் போதே அவர் கைதாகியுள்ளார்.

ISIS அமைப்புடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகவும் அவர்களுக்கு ஆதரவாகவும் சந்தேகிக்கப்படும் நபரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கடந்த சனிக்கிழமை கோரியிருந்தனர்.

அவர் தெமட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெராட் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சந்தேகநபர் கொழும்பு பிரதேசத்தில் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் பிரகாரம், நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் நேரடிக் கண்காணிப்பில் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையிலேயே இது இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இந்தியாவில் கைது செய்யப்பட்ட நால்வருடன் நாட்டினுள் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நால்வரும் இலங்கையில் நடத்தப்பட்ட பிரசங்கங்களிலும் பங்குபற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கு சந்தேகநபர், திட்டமிட்டு ஆதரவளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருமணமாகாத நபரான சந்தேகநபர், இறைச்சி வியாபாரியாக பணிபுரிவதுடன் 08 ஆம் தரம் வரை கல்வி கற்றுள்ளார்.

சந்தேகநபர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Related posts

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர் கைது

அரசியல் வாதிகளுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் – அநுர

editor

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 வருடங்கள் பூர்த்தி