புத்தளத்தில் மின்சாரம் தாக்கி, புத்தளம் தள வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (30) உயிரிழந்துள்ளார்.
புத்தளம் , ஐந்தாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த துவான் சலீம் முஹம்மது சஹ்ரான் ( வயது 17) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன், கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தனது வீட்டில் குளித்து விட்டு , முடி உலர்த்தி மூலம் முடியை உலர வைத்த சந்தர்ப்பத்திலேயே மின்சாரம் தாக்கியுள்ளது..
புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம், உயிரிழந்த இளைஞனின் ஜனாஸா மீதான மரண விசாரணையை நடத்தி மின்சாரத் தாக்குதலினால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பளித்து ஜனாஸாவை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.
புத்தளம் சாஹிரா தேசியப் பாடசாலை மாணவரான இவர், கடந்த மாதம் நிறைவடைந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது