2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் நோக்கங்களைப் பூர்த்தி செய்வதற்கும் ஜனநாயகத் தேர்தலை முழுமையாக அடைவதற்கும் தற்போதைய தேர்தல் முறையை மாற்றியமைக்க வேண்டியதன் தேவை கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
அதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய கட்சிகளின் ஆலோசனைகளை பெற்று அமைச்சரவைக்கு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்க அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
புதிய பிரேரணையின் படி, 160 பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்தந்த தேர்தல் தொகுதியில் வாக்காளர்களால் நேரடியாக தெரிவு செய்யப்படுவதற்கும், எஞ்சிய 65 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய ரீதியாவும் மற்றும் மாகாண ரீதியாகவும் விகிதாசார வாக்களிப்பு முறையின்படி தெரிவு செய்வதற்கும் மேற்படி குழுவிற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு பெரும்பான்மையானவர்கள் தங்கள் உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, தேர்தல் முறைமையில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட விதந்துரைகளையும் கருத்தில் கொண்டு தேவையான சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
derana