உள்நாடு

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் சவ்ச் உயர்பீடமே கூடி முடிவெடுக்கும் –ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடமே கூடி முடிவெடுக்கும். எமது தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு – அதேபோல அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவாராக இருந்தால் அவருக்கு ஆதரவு வழங்க முடியும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வுகள் மகளிர் அணியின் தலைவியும், கட்சியின் பிரதி தலைவருமான திருமதி.அனுஷியா சிவராஜா தலைமையில், மகளிர் அணியின் உப தலைவியும், மஸ்கெலியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான திருமதி.செண்பகவள்ளியின் ஏற்பாட்டில் “பொருளாதாரத்தை வலுவூட்டலின் ஊடாக பாலின சமத்துவத்தை துரிதப்படுத்தல்” எனும் தொனிப்பொருளின் கீழ் கொட்டகலை சி.எல்.எப். வளாக கேட்போர் கூடத்தில் இன்று (10.03.2024) நடைபெற்றது.

 

இதன்போது, பெண்களின் பல்வேறு பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகள், சிலம்பாட்டம், கும்மி நடனம், வீதி நாடகம், கிராமிய நடனங்கள் இடம்பெற்றது.

 

இதேவேளை, இந்நிகழ்வில் யுவதிகள் அணியின் பிரதம அமைப்பாளர் கனிஷ்டா மைக்கலின் ஏற்பாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் யுவதிகள் அணி அங்குரார்ப்பண வைபவமும் நடைபெற்றது.

 

அத்தோடு, சுயதொழிலை ஊக்குவிக்கும் முகமாக கலந்துக் கொண்ட பெண்களுக்கு மரக்கறி விதைகளும் வழங்கி வைக்கப்பட்டதோடு, கலந்துக் கொண்ட அதிதிகளுக்கு கௌரவிப்பும் இடம்பெற்றது.

 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் கூறியவை வருமாறு,

 

“ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முதல் விடயம் மலையகத்தில் வீட்டுத் திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். அந்தவகையில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை அமுல்படுத்துவதற்குரிய சூழ்நிலையை ஜனாதிபதி ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.

இரண்டாவது மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்று அவசியம். தற்போது சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுத்துவருகின்றார். இது தற்காலிக தீர்வு மாத்திரமே. எனவே, நிரந்தர தீர்வு என்னவென்பதை ஜனாதிபதி முன்வைக்க வேண்டும்.

இறுதியாக காணி உரிமை விடயமாகும். இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி 4 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். காணி உரித்தும் வழங்கப்பட வேண்டும். இவற்றை செய்து, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் அவரை நாம் ஆதரிப்போம்.

கோரிக்கைகளை விடுத்துக்கொண்டும், ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுக்கொண்டும், அறிக்கைகளை விடுத்துக்கொண்டும் அரசியல் நடத்துவதில்லை நாம். சொல்லுக்கு செயல் வடிவம் கொடுத்து வருகின்றோம்.

அதேவேளை, இலங்கையில் மகளிருக்கான ஒதுக்கீடு தொடர்பில் சட்டம் இயற்றுவதற்கு முன்பிருந்தே பெண்களுக்கு இ.தொ.கா முக்கியத்துவம் வழங்கிவருகின்றது. பெண்களுக்கு உயர்பதவிகளைக்கூட வழங்கப்பட்டுள்ளது. எனவே, பெண்களை மதித்து, அவர்களின் கோரிக்கைளை நிறைவேற்றி, அவர்களால் முன்வைக்கப்படும் ஆலோசனைகளும் ஏற்கப்பட்டே முடிவுகள் எடுக்கப்படும்.

எமது பெருந்தோட்டத்தொழில்துறையில் ஈடுபடும் தாய்மாரின், சகோதரிகளின் தொழில்சார் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். முன்னெடுத்தும் வருகின்றோம்.” – என்றார்.

Related posts

விமான பணிப்பெண்களுக்கான அறிவிப்பு

“அடுத்த ஆண்டு மற்றுமொரு பொருளாதாரப் பேரழிவு”

சமூகத்துக்காக உழைத்ததனாலேயே முன்னாள் அமைச்சர் ரிஷாட் மீது இத்தனை எறிகணைகள்