வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் நேற்றைய தினம் (08.03) இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் மாலை 6 மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டு வருமாறும், பொலிஸாரின் கட்டளையை மீறும் பட்சத்தில் குறித்த நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் ஆலய நிர்வாகத்தினர் பூஜை நிகழ்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த நிலையில் அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்கள் என சுமார் 10 இலட்சம் பெறுமதியான பொருட்களை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.
இதன் காரணமாக பூஜை வழிபாடுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கலகம் அடக்கும் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆலயத்தில் குவிக்கப்பட்டனர்.
சப்பாத்துக்களுடன் ஆலயத்திற்குள் புகுந்த பொலிசார் கலந்து கொண்ட பெண்களையும் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதன்போது ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட வழிபாடுகளில் கலந்து கொண்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் தாக்குதல் மேற்கொண்டு பொலிசார் கைது செய்ய முயன்றதுடன், அவர் பாராளுமன்ற உறுப்பினர் என தெரியவந்ததையடுத்து தூக்கிச் சென்று ஆலய முன்றலில் போட்டு விட்டு சென்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு. எட்டு பேரும் தற்பொழுது வவுனியா நீதிமன்றதிற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்கள் எட்டு பேரும் தற்பொழுது வவுனியா நீதிமன்றதில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.