உள்நாடுசூடான செய்திகள் 1

ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் உயிரிழப்பு!

ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். 30 ஆண்டு கால சிறைவாழ்க்கையில் இருந்து விடுதலை அடைந்தும் இலங்கைக்கு செல்ல முடியாமல் தமிழ்நாட்டில் உயிரை விட்டுள்ளார் சாந்தன். இறுதி காலத்தில் சொந்த மண்ணிற்கு செல்ல வேண்டும் என்ற அவரது ஆசை நிராசையாகி விட்டது.

இலங்கை தமிழர் என்பதால் சாந்தன், திருச்சியில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் இருந்தபடி கடந்த ஆண்டு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தில், இலங்கை குடிமகனான நான், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டேன். தற்போது நான் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளேன்.

கடந்த 32 வருடங்களாக எனது தாயாரை பார்க்கவில்லை. அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவருடன் வாழ விரும்புகிறேன். ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுகிறேன்.

தயவுசெய்து நான் இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட பிறகு, கடவுச்சீட்டு, அடையாள அட்டையை புதுப்பிப்பது சம்பந்தமாகவும், இலங்கைக்கு திரும்புவது சம்பந்தமாகவும் ஆலோசனை பெற வேண்டி இலங்கை துணை தூதருக்கும், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் ஏற்கனவே மனு அனுப்பினேன்.

இலங்கையில் என் மீது வழக்கு இல்லை. தயவு செய்து எனது சிரமத்தை கருத்தில் கொண்டு இலங்கைக்கு நான் வர உதவ வேண்டும் என கோரியிருந்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சாந்தன் தரப்பில் வழக்கும் தொடரப்பட்டது. அதில், இலங்கையில் முதுமையில் இருக்கும் தாயாரை கவனித்துக்கொள்ள திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்து இலங்கைக்கு அனுப்ப கோரி மனு கொடுத்திருந்தேன். இம்மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகையால் தம்மை இலங்கைக்கு அனுப்ப மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என சாந்தன் கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், சாந்தன் இலங்கைக்கு செல்வதற்காக தற்காலிக பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் வழங்கி இருக்கிறது. இந்த ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மத்திய அரசு தரப்பிலோ, தமிழ்நாடு அரசு அனுப்பிய ஆவணங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. தமிழ்நாடு அரசு அனுப்பிய ஆவணங்கள் கிடைத்த உடன் ஒரு வாரத்தில் சாந்தன் இலங்கைக்கு செல்வதற்கான உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

32 ஆண்டுகாலம் இந்தியாவில் சிறை தண்டனை அனுபவித்து, சிறப்பு முகாமில் அடைபட்டு கிடந்த சாந்தன் விரைவில் சொந்த மண்ணான இலங்கை திரும்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான கைதிகளில் வெளிநாடு செல்லும் முதல் நபர் சாந்தன் என்பதும் கூறப்பட்டது.

இந்த நிலையில்தான் சாந்தனின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டார். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சாந்தனின் உடல் நிலை நேற்றைய தினம் பாதிக்கப்பட்டது.

கல்லீரல் செயலிழப்புக்கு உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், சுவாச சுழற்சி உள்ளிட்டவை சீராக இருப்பதாகவும், பிற பாதிப்புகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சாந்தன் இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட்டுகள் விரைவில் முன்பதிவு செய்யப்படும் என தகவல் வெளியானது. சாந்தன் இலங்கை செல்வதற்கான அனுமதி கடிதத்தை திருச்சி கலெக்டருக்கு மத்திய அரசு அனுப்பியது. இலங்கை தூதரக அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின் சாந்தன் அந்நாட்டுக்கு அனுப்பப்படுவார் என்ற நிலை உள்ளது. இப்படியான சூழலில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் இன்று உயிரிழந்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 32 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான பின்னர் சொந்த மண்ணான இலங்கைக்கு சென்று வசிக்க வேண்டும் என்று நினைத்த சாந்தனின் ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போனது. அவரது உயிர் ராஜீவ்காந்தி மருத்துமனையில் பிரிந்து விட்டது.

Related posts

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

உயிர் நீத்த மத்ரஸா மாணவர்களுக்கு சாய்ந்தமருதில் துஆப் பிரார்த்தனை – மற்றொரு மாணவனை தேடும் பணி தொடர்கிறது

editor

பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு