உள்நாடுசூடான செய்திகள் 1

குழப்பங்களை தீவிரமாக்குவதை ஹக்கீம் நிறுத்த வேண்டும். ஹக்கீமின் பத்வாவுக்கு இஸ்லாமிய அறிஞர்களின் பதிலென்ன?

(ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)

நோன்பு காலம் அமல்களுக்குரிய அழகிய மாதம். தற்போது நோன்பு காலம் வந்துவிட்டால் கூட்டுத் துஆ, தராவீஹ், அது, இது என குழப்பங்கள் உச்சத்தை தொடும் மாதமாகியுள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயம். குழப்பங்களை தவிர்த்து அனைத்து முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழும் வகையில் எமது செயற்பாடுகளை அமைப்பது மிக அவசியமானது. தற்போது கூட்டுத் துஆ விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இப் பூதாகர நிலையை மேலும் தீவிரமாக்க முனைந்துள்ளார் ஹக்கீம்.

அண்மையில் உரையாற்றிய ஹக்கீம்
முஸ்லிம் சமூகம் சாபி மத்ஹபை கட்டிப்பிடித்து கொண்டிருப்பதாக விமர்சித்திருந்தார். இவருடைய இந்த கூற்று சாபி மத்ஹபை பின்பற்றுகின்ற பெரும்பாலானோரை கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. அதே நேரம் மத்ஹப்பை பின்பற்றாது இருக்கும் சிலரது உணர்ச்சியை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. இது தற்போதைக்கு தேவையான ஒன்றா. அதிலும் மு.கா என்ற ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பொது வெளியில் பேச அவசியமானதா என்பது தொடர்பில் நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். மேலும், முஸ்லிம்களின் திருமண வயது நிர்ணயிப்பை மத்ஹபை பின்பற்றாத, எமது பாசையில் சொல்வதானால் பெரும்பாலான தௌஹீத் வாதிகளும் ஏற்கவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்ட மிகப் பொருத்தமானதெனாலாம்.

ஹக்கீம், தனதுரையில் மாற்று மதத்தினரை திருப்தி செய்யும் நோக்கில் திருமண வயதை அதிகரிக்கவும், பெண் காதிகளை நியமிக்கவும் சொல்லியிருந்தார். நாம் திருப்தி செய்ய வேண்டிய மாற்று மதத்தினரையா அல்லது அல்லாஹ்வையா? அவர் தனதுரையின் மேலுமொரு இடத்தில் பெண் காழி நீதிபதிகள் பல முஸ்லிம் நாடுகளில் உள்ளதாக கூறி, தனது வாதத்தை நியாயப்படுத்த முனைந்திருந்தார். நாம் பின்பற்றுவது முஸ்லிம் நாடுகளையா அல்லது குர்ஆன், ஹதீத் அடிப்படையிலான இஸ்லாமிய வழி காட்டலையா? இது தொடர்பில் ஒவ்வொரு முஸ்லிமும் ஆழமாக சிந்தித்தேயாக வேண்டும்.

சொத்து விவகாரத்தில் பருவ வயதை பார்க்கும் இஸ்லாம், திருமணத்துக்கு பருவ வயதை பார்க்காமல் இருக்குமா என அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இது முற்றிலும் மனோ இச்சைக்கு முன்னுரிமை கொடுத்த ஒரு வாதம். இஸ்லாத்தில் மனோ இச்சைக்கு எங்கும் இடமில்லை. சொத்து விவகாரத்தில் பருவ வயதை பார்க்கும் இஸ்லாம், திருமணத்துக்கும் பார்க்கவே வேண்டும் என கூற ஹக்கீம் யார்? இரண்டும் வெவ்வேறான விடயங்கள்.

திருமண வயது இது தான் என்பதாக குர்ஆனில் எங்குமே இல்லை என ஹக்கீம் கூறியிருந்தார். திருமணத்திற்கான வயது இது தான் என இஸ்லாம் பருவ வயதை எல்லையிட்டுள்ளது என்பது அனைத்து அறிஞர்களும் எவ்வித சந்தேகமுமின்றி ஏற்றுக்கொண்ட ஒரு விடயம். இங்கே பருவ வயது எத்தனை என்பது கேள்வியாகலாம். எது, எவ்வாறு இருப்பினும் தற்போதுள்ள திருமண வயதான 16 விட அதிகமான வயதே பருவ வயது என எந்த மார்க்க அறிஞரும் இதுவரை கூறவில்லை. தற்போது 9 வயது பெண்ணும் வயதுக்கு வருவதை எம்மிடையே அவதானிக்க முடிகிறது. பெண்கள் வயதுக்கு வருவதை பருவ வயதாக கொண்டால் 9 வயதையும் பருவ வயதாக கூற இயலும். தற்போது 16 வயதிலிருந்து 18 ஆக அதிகரிக்கவே ஹக்கீம் இவ்வாறான இஸ்லாமிய பத்வாக்களை வழங்கி கொண்டிருக்கின்றார். குர்ஆனில் எங்குமே திருமண வயதில்லை என்பது குர்ஆனையே மறுப்பதாகி விடும்.

திருமண வயது மற்றும் பெண் காதிபதிகள் விவகாரம் அடிக்கடி இலங்கை அரசியலில் சர்ச்சையாக எழும் விடயங்களே! இந்த விடயங்களை யார் எதிர்க்கின்றார்களோ, யார் சர்ச்சையாக மாற்றுகின்றார்களோ இல்லையோ, மு.கா தலைவர் ஹக்கீம் முன்னின்று செய்வதே மிகவும் கவலையான விடயம். அண்மையில் பல முஸ்லிம் அரசியல் வாதிகள் மற்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா உட்பட முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து இது தொடர்பில் ஒரு அறிக்கையை நீதி அமைச்சிடம் சமர்ப்பித்திருந்தன. இதில் கூட ஹக்கீம் கையொப்பமிட மறுத்திருந்தார். இவ் விடயத்தில் அவர் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவை வம்பிக்கிழுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எமது முன்னோர்கள் காத்து தந்த முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டம் மு.காவின் தலைவர் ஹக்கீமால் மிகப் பெரும் சவாலுக்குட்பட்டுள்ளதை இவ் விடயம் துல்லியமாக்கின்றது. ஹக்கீமின் இந்த தீவிரமான பிடி எமது சமூகத்தை மிகக் கடும் பாதிப்புக்குள் தள்ளிவிடலாம். தற்போதைய தேசிய அரசியலில் இது தொடர்பான பேச்சுக்களே இல்லாத போது, இதனை சர்ச்சையாக்கி ஹக்கீம் சாதிக்க முனைவது என்ன என்பது அனைவரும் ஆழச் சிந்திக்க வேண்டிய பகுதி. இது தொடர்பில் மார்க்க அறிஞர்கள், தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது காலத்தின் தேவையாகும். அரசியல் வாதிகளுக்கு அஞ்சி மார்க்கத்தை சொல்ல மறந்துவிடாதீர்கள்.

மு.கா தலைவரின் பேச்சை கேட்க

Related posts

New Fortress ஒப்பந்தத்திற்கு எதிராக JVP எழுத்தாணை மனு

நிக்கவெரட்டிய சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விஷேட குழு

பாராளுமன்றமானது இன்று கூடுகிறது..