உள்நாடு

2023 இல் 195 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ள ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் – அமைச்சர் சிசிர ஜயகொடி

(UTV | கொழும்பு) –

ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் 2023 இல் 195 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார். இந்த இலாபமானது 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிடைத்த அதிகூடிய இலாபம் என சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், ஆயுர்வேதக் கூட்டுத்தாபனத்தின் புதிய நிர்வாகத்தினூடாக இந்த இலாபத்தை ஈட்ட முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இவ்வாறு தெரிவித்தார்.இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி,
76 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பத்து இலட்சம் மூலிகைச் செடிகளை நடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் இன்று  ஆரம்பமானது. இதன்படி ஏப்ரல் 7ஆம் திகதி வரை இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதனை சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சு, ஆயுர்வேதக் திணைக்களம் மற்றும் பொது நிர்வாக அமைச்சு ஆகியன இணைந்து ஆரம்பித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் மையப்படுத்தி இந்த தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நமது நாட்டில் மூலிகைகள் ஏராளமாக உள்ளன. ஆனால் நீண்ட காலமாக சுதேச வைத்தியத்திற்கு அவசியமான மூலிகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே, வர்த்தக அடிப்படையில் சுதேச மூலிகைச் செடிகளை நட நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக மருந்து உற்பத்திக்கான இறக்குமதி மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாம் செலவழிக்கும் அந்நியச் செலாவணியை சேமிக்க முடியும்.

ஒரு சில பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான பயிரிடப்படாத நிலங்கள் உள்ளன. அந்த நிலங்களில் மூலிகைப் பயிர்ச் செய்கைத் திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிக சம்பளம் கேட்டு அரச ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மூலிகைச் செடிகளைப் பயிரிட்டால் சம்பளத்தை விட அதிகமாக வருமானம் ஈட்டலாம். அரச ஊழியர்களும் இவற்றை வணிக ரீதியாக பயிரிட வாய்ப்பு உள்ளது.

கடந்த காலங்களில் நட்டமடைந்து வந்த ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் 2023 இல் 195 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளது. எனவே, நட்டமடைந்து அரசாங்கத்துக்குச் சுமையாக இருந்த ஒரு நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றி நாட்டுக்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளோம். ஆயுர்வேதக் கூட்டுத்தாபனத்தில் உருவாக்கப்பட்ட புதிய நிர்வாகமே இந்த இலாபகரமான நிலையை உருவாக்கியுள்ளது என்பதைக் கூற வேண்டும்.

அத்துடன், எமது சுற்றுலாத்துறைக்கு அதிக வருமானத்தை வழங்கும் நோக்கில் பாரம்பரிய சுதேச மருத்துவ முறை மேம்படுத்தப்பட வேண்டும். சுதேச வைத்திய முறையை ஒருங்கிணைத்து நாட்டில் தற்போதுள்ள சுற்றுலா ஹோட்டல்களில் இருந்து அதிகபட்ச இலாபத்தைப் பெற முடியும். நம் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குறைவான பணத்தை செலவிடுகின்றனர். சில சமயங்களில் அவர்கள் தேர்ந்தெடுத்த இடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சென்ற பிறகு மீண்டும் இந்நாட்டுக்கு வருவதில்லை.

ஆனால் இங்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சுதேச சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தினால், அவர்கள் சிகிச்சை பெற குறைந்தது ஆறு அல்லது ஏழு முறை இந்த நாட்டிற்கு வருகை தர வேண்டும். இதன் மூலம் இந்நாடு அதிக அளவில் அந்நியச் செலாவணியைப் பெற முடியும்.

ஒரு ஆரோக்கியமான பசுமை உணவு கலாசாரம் உள்நாட்டு மருத்துவ முறையில் உள்ளது. அந்த விடயங்களையும் நாம் இதனுடன் இணைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறாக சுதேச மருத்துவ முறையின் அடிப்படையில் எமது சுற்றுலாத் துறையை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும்.

ஆயுர்வேதக் கூட்டுத்தாபனத்தில், முதல் தடவையாக, ‘பொடிமந்திரா’ என்ற சிறப்பு ஆயுர்வேத மசாஜ் முறை அறிமுகப்படுதப்படுகிறது. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வகையான மசாஜ் முறைகள் உள்ளன. ஆனால் எமது மசாஜ் முறையானது சுதேச ஆயுர்வேத முறை மூலம் பல்வேறு நோய்களை தடுக்கக்கூடியதாக இருப்பதே அதன் சிறப்பாகும். எனவே இவ்விடயத்திலும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேல் மாகாணத்தில் 2 மணி நேர விசேட சோதனை

கொரோனாவால் தொழிலை இழந்த தனியார் ஊழியர்கள் கவனத்திற்கு [VIDEO]

நீதிபதி விலகல்; ஜனாதிபதி அதிரடி உத்தரவு!