உள்நாடு

கிரிக்கெட்டில் திறமையை நிலைநிறுத்த சகலதுறைகளிலும் ஒத்துழைப்பு தேவை – தனஞ்சய டி சில்வா

(UTV | கொழும்பு) –

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் மீண்டும் திறமையை நிலைநிறுத்தவதற்கு களத்தடுப்பு மிகச் சிறப்பாக அமையும் அதேவேளை, மூன்று துறைகளிலும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் வெற்றி பெறுவதற்கான வைராக்கியம் வீரர்கள் மனதில் குடிகொள்ள வேண்டும் என இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவர் தனஞ்சய டி சில்வா தெரிவித்தார்.

இந்த விடயத்தை கடந்த சில நாட்களாக வீரர்களிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாக ஊடகவியலாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் முதன்முதலாக நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இரண்டு நாடுகளுக்கும் வரலாற்று முக்கியம் வாய்ந்ததாக அமையும் இந்த டெஸ்ட் போட்டி எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான அணிகள் நிலையில் இலங்கை கடை நிலையில் இருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவை மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிகொண்டதால் உலக டெஸ்ட் தரவரிசையில் இலங்கை கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.மேலும் இலங்கை கடைசியாக எஸ்.எஸ்.சி. மைதானத்தில் வி;ளையாடிய டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானிடம் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்தது. இலங்கை தனது சொந்த மண்ணில் அடைந்த மிக மோசமான தோல்வியாக அது பதிவாகினது.

‘டெஸ்ட் போட்டி ஒன்றில் மாயாஜாலங்கள் செய்து வெற்றிபெறமுடியாது. வெற்றிபெறுதற்கு சகல வீரர்களினதும் களத்தடுப்பு அதி உயரிய தரத்தில் இருக்கவேண்டும். அத்துடன் ஒவ்வொரு வீரரினதும் மனதில் வெற்றிபெறவேண்டும் என்ற வைராக்கியம் ஆழமாக ஊன்றியிருக்கவேண்டும். வீரர்கள் சகலதுறைகளிலும் ஆக்ரோஷத்துடன் விளையாடுவது அவசியம்.

‘டெஸ்ட் போட்டிகளில் எதிரணியின் 20 விக்கெட்களையும் கைப்பற்றினால்தான் வெற்றிபெறமுடியும். எனவே தடுத்தாடும் மனப்போக்கை மாற்றி ஆக்ரோஷத்துடன் எதிர்த்தாடவேண்டும். அத்துடன் களத்தடுப்பு வியூகங்கள் சிறப்பாக அமையவேண்டும்.

‘டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இந்த வருடம் எமக்கு மிக முக்கியமாக அமையவுள்ளது. எனவே இந்த வருடத்தின் முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று டெஸ்ட் தரவரிசையில் முன்னேற வெண்டும் என்பதே எமது இலக்காக இருக்கும்.

‘டெஸ்ட் போட்டி ஒன்றின்போது ஆடுகளத்தின் தன்மை அவ்வப்போது மாறக்கூடும். அதற்கேற்றவாறு வீரர்கள் தங்களை சரிசெய்துகொண்டு துடுப்பெடுத்தாட வேண்டும். எமது வீரர்கள் அனுபவசாலிகள் என்பதால் அதனை பின்பற்றி அணி வெற்றிபெறுவதற்கு பங்களிப்பு செய்வர் என நம்புகிறேன் என்றார்.

முன்னாள் அணித் தலைவர்கள் மூவர் அணியில் இடம்பெறுவது தனக்கு வரப்பிரசாதமாக அமைவதாகவும் அவர் கூறினார்.

‘எமது அணியில் மூன்று முன்னாள் அணித் தலைவர்கள் இடம்பெறுவது எனக்கு உற்சாகத்தையும் தைரியத்தையும் கொடுக்கிறது. நான் சாதாரண வீரராக விளையாடியபோது ஏஞ்சலோ மெத்யூஸ், திமுத் கருணாரட்ன, தினேஷ் சந்திமால் ஆகியோர் எனக்கு சிறந்த ஆலோசனைகனை வழங்கி என்னை வழிநடத்தினர். அவர்களது பிரசன்னம் எனக்கு வரப்பிரசாதமாக அமையும் அதேவேளை முழு அணிக்கும் அனுகூலமாகவும் பக்கபலமாகவும் அமைகிறது’ என்றார்.

இது இவ்வாறிருக்க, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இறுதி அணி தீர்மானிக்கப்படவில்லை எனவும் துடுப்பாட்ட வரிசையில் தனது நிலையில் மாற்றம் இருக்காது எனவும் குறிப்பிட்ட அவர், ஆடுகளத்தைப் பரீட்சித்த (இன்று காலை) பின்னர் 3 வேகபந்துவீச்சாளர்களை இணைப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை குழாம்: தனஞ்சய டி சில்வா (தலைவர்), குசல் மெண்டிஸ் (உதவித் தலைவர்), திமுத் கருணாரட்ன, நிஷான் மதுஷ்க, ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், சதீர சமரவிக்ரம, ரமேஷ் மெண்டிஸ், ப்ரபாத் ஜயசூரிய, அசித்த பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ, கசுன் ராஜித்த, கமிந்து மெண்டிஸ், லஹிரு உதார, சாமிக்க குணசேகர, மிலான் ரத்நாயக்க.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று

ஹரீனின் ‘Torch’ விவகாரம் விசாரணைக்கு

சற்றுமுன் கைது செய்யப்பட்ட அலி சப்ரி ரஹீம் MP!