வகைப்படுத்தப்படாத

தேசிய மாநாட்டை விரைவில் நடத்துமாறு – சிறீதரனுக்கு சுமந்திரன் கடிதம்

(UTV | கொழும்பு) –

எமது வரலாற்றில் முதன்முறையாக வாக்கெடுப்பினாலே தெரிவுசெய் யப்பட்ட தலைவராகிய நீங்கள் அப்படியான அதற்குகந்த விமர்சையோடு வைபவரீதியாக பதவியேற்பது முக்கியமான விடயமாகும்.

எமது மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் பல்வேறு சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் அது முற்றுப்பள்ளி வைக்கும். ஆகவே தயவு செய்து காலம் தாழ்த்தாது வெகு விரைவில் அந்தப் பகிரங்கப் பொது நிகழ்வை நடத்துமாறும் அன்புரிமையோடு நான் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் என்று குறிப்பிட்டு அவருக்குக் கடிதம் எழுதியிருக்கின்றார் கட்சியின் முன்னாள் பிரதிப் பொதுச் செயலாளர் ம. ஆ.சுமந்திரன்.

ஏற்கனவே நடந்த கட்சியின் நிர்வாகிகள் தெரிவு முடிந்த முடிவு என்பதையும் இக்கடிதத்தில் சுமந்திரன் பூடகமாகச் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.

அந்தத் கடிதத்தின் முழுவிவரம் வருமாறு:

கெளரவ சிவஞானம் சிறீதரன்,

தலைவர்,

இலங்கை தமிழரசுக் கட்சி,

30, மார்ட்டின் வீதி,

யாழ்ப்பாணம்.

மதிப்பார்ந்த தலைவர் அவர்கட்கு,

17 ஆவது தேசிய மாநாடு

முதலிலே தமிழ் மக்களின் முதன்மைக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற வாக்கெடுப்பிலே தாங்கள் அதிகப்படியான வாக்குகளாலே தெரிவுசெய்யப்பட்டமை எமது கட்சியின் வரலாற்றிலும் இந்நாட்டின் வரலாற்றிலும் ஒரு முன்னுதாரணமாக திகழும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. வாக்கெடுப்பில் கலந்துகொண்ட பொதுச்சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட முறைகள், யாப்புக்கு முரணாக பலர் சேர்த்துக்கொள்ளப்பட்டமை சம்பந்தமாக பல நியாயமான கருத்துக்கள் வெளிப்பட்டாலும், போட்டியாளன் என்றவகையிலே அந்த முடிவை நான் முழுமையாக, பகிரங்கமாக ஏற்றிருக்கின்றேன்.

இது எங்கே சவாலுக்குட்படுத்தப்பட்டாலும் இந்த முடிவு என்னால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற என்னுடைய உறுதியான நிலைப்பாட்டை நான் தொடர்ந்தும் பேணுவேன் என்பதை மீளவும் எழுத்தில் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். பல குறை நிறைவுகளோடு ஒரு தேர்தல் நடைபெற்றாலும் அதில் பங்குபற்றிய பின்னர் தோல்வியுற்றதன் காரணமாக அந்த முறைமை தவறென்று சொல்லுகின்ற முன்னுக்குப் பின் முரணான செயலை நான் எப்போதும் செய்யமாட்டேன்.

மாநாட்டை ஒட்டிய மத்திய செயற்குழுக் கூட்டம், அமைப்பு விதி 10 இன் படி கடந்த 27 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு திருகோணமலை JKABS Beach Resort Hotel இல் கூடியபோதும் அதன் பின்னர் அமைப்பு விதி 7 (இ) இன்படி விஷயாலோசனை சபையாக பொதுச்சபை கூடியபோதும் பதில் பொதுச் செயலாளர் வைத்தியர் பா.சத்தியலிங்கம் சமுகமளித்திருக்காத சூழ்நிலையில் பிரதிப் பொதுச் செயலாளராகிய நான் அக்கூட்டங்களின் செயலாளராக கடமையாற்றியவன் என்ற வகையில் கீழ்வரும் விடயங்களை தங்கள் மேலான கவனத்துக்கு சமர்ப்பிக்கின்றேன்.

1. மத்திய செயற்குழுக் கூட்டத்தின் ஆரம்பத்தில் தாங்கள் என்னைக் கூட்டத்தின் பின்புறத்துக்கு அழைத்துத் தனியாகப் பேசிய வேளையில் இரண்டு அணிகளாகப் பிரிந்திருக்கும் கட்சி ஒன்றித்து பயணிக்க வேண்டும் என்ற கருத்தை தாங்கள் சொன்னபோது, அப்படி நிகழ்வதாக இருந்தால் தாங்கள் தலைவராகவும் நான் பொதுச் செயலாளராகவும் இருந்தால் மாத்திரமே அது சாத்தியமாகும் என்று உங்களுக்குச் சொன்னேன். ஆனால் அது முற்றுமுழுதாக உங்களது கையிலேயே இருக்கின்றது என்பதையும் கூறினேன். அப்படியாக நாங்கள் இருவரும் இயங்குவது சம்பந்தமாக தங்களுக்குப் பூரண இணக்கப்பாடு உள்ளது என்பதைக் கூறிய நீங்கள், கிழக்கு மாகாணத்துக்குப் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்படவேண்டுமென்கின்ற எதிர்பார்ப்பை எப்படிப் பூர்த்திசெய்ய வேண்டும் என்ற வினாவை எழுப்பியிருந்தீர்கள். அதனைக் கூட்டத்தின்போது மற்றவர்களோடு பேசித் தீர்ப்போம் என்று நான் கூறிய பின்னரே கூட்டம் ஆரம்பமானது.

2. கூட்டத்தின் ஆரம்பத்தில் சிரேஷ்ட உபதலைவர் பதவியை தாங்கள் எனக்கு கொடுப்பதாக பெருந்தன்மையோடு முன்வந்தபோது, நான் அதனை நிராகரித்ததற்கான காரணமும் மேற்சொன்ன எமது கலந்துரையாடல் தான். அதையே நான் கூட்டத்திலேயும் கூறியிருந்தேன். ஒரு பொது இணக்கப்பாட்டை எய்துவதற்கு இரண்டு இலக்குகள் அடையப்பட வேண்டும் என்று நான் அவற்றை அடையாளப்படுத்தினேன்.

a) தலைவர் தெரிவிலே பிரிந்திருப்பதாக காணப்படும் இரு அணிகளும் ஒன்றுசேர்வது.

b) பொதுச் செயலாளர் பதவி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படுவது.

இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட தாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த திரு. பா. அரியநேத்திரன், திரு. சீ.யோகேஸ்வரன், திரு. ஞா. சிறிநேசன் ஆகியோரோடு உரையாடிவிட்டு திருகோணமலை மாவட்ட கிளைத்தலைவர் திரு.சண்முகம் குகதாசன் அவர்களை மட்டக்களப்பின் சம்மதத்தோடு பொதுச்செயலாளர் பதவிக்குத் தெரிவு செய்வதாக அறிவித்தீர்கள். இதை மத்திய செயற்குழு எவ்வித ஆட்சேபனையுமின்றி ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. இந்த முன்மொழிவை பொதுச்சபைக்கு மத்திய செயற்குழுவின் சிபாரிசாக முன்வைப்பதென்றும் இணங்கப் பட்டது. அதற்கு மேலதிகமாக பொதுச்சபையிலே இந்த முன்மொழிவுக்குப் போட்டியாக மத்திய செயற்குழு உறுப்பினர் இன்னொருவரின் பெயரை யாரவது முன்மொழிந்தால் அந்தப் பெயருக்குரியவர் அந்தப் போட்டியிலிருந்து தான் வாபஸ் பெறுவார் என்றும் இணங்கப்பட்டது.

3. பொதுச் செயலாளர் பதவிக்கு இப்படியாக ஓர் இணக்கப்பாடு ஏற்பட்டதன் காரணமாக, மற்றைய பதவி நிலைகளுக்கும் சேர்ந்து ஓர் இணக்கப்பாட்டுக்கு வருமாறு உங்களையும் என்னையும் மதியசெயற்குழு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கேட்டுக்கொண்டதற்கிணங்க

நாம் இருவரும் மேடையில் அமர்ந்திருந்து இரு தரப்பினரின் பாரிய விட்டுக்கொடுப்புக்களோடு அப்படியானதொரு இணக்கப்பாட்டை எய்தினோம். இதிலே தலைவர் ஸ்தானத்தில் இருந்திருந்தும் கூட பல விட்டுக்கொடுப்புக்களை செய்ய நீங்களும் முன்வந்ததை நான் மனதார மெச்சுகிறேன்.

4. இதைத் தொடர்ந்து பொதுச்சபை கூடியபோது அமைப்புவிதி 13 (உ) 1. இன்படி தலைமைதாங்கிய நீங்கள் மத்திய செயற்குழுவின் பிரேரணையை பொதுச்சபையில் முன்வைத்தீர்கள். பல வாதப்பிரதிவாதங்கள், சண்டைகள் நிகழ்ந்தாலும் கூட, நீங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி மத்திய செயற்குழுவின் யோசனையை தங்களது முன்மொழிவாக பிரேரித்தீர்கள். அதை திரு. பீட்டர் இளஞ்செழியன் வழிமொழிந்தார். மாற்று முன்மொழிவு எதுவும் இல்லாத நிலையில் பொதுச்சபை இதை ஏற்றுக்கொண்டது. இதை தாங்கள் கையாண்ட விதம் தங்களது ஆளுமையின் வெளிப்பாடு என்பதை அந்த நேரத்திலேயே நான் தங்களைப் பாராட்டியிருந்தேன் என்பதை தற்போது பதிவு செய்கிறேன். மதிய உணவுக்காக கூட்டம் கலைந்தபோது, திரும்பவும் கூடவேண்டிய தேவை இல்லை என்று பலர் சொன்னபோது, முன்னாள் தலைவர் அவர்கள் மாநாட்டுத் தீர்மானங்கள் சம்பந்தமாக பேசவேண்டும் என்று கூறியதன் காரணத்தால்தான் மதிய உணவுக்கு பின்னர் மீண்டும் கூட நேர்ந்தது.

5. மதிய உணவு இடைவேளைக் குப்பின் பொதுச்சபை மீண்டும் கூடியபோது, தங்களால் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டு, சபை முன்னர் ஏற்ற தீர்மானத்தை இப்போது தமது நிலைப்பாட்டை மாற்றி அதனை நிராகரிப்பதாக ஒரு சிலர் குழப்பம் விளைவித்தனர். வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்றும் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். ஏற்கனவே இடைவேளைக்கு முன்னர் சபை ஏற்றுக்கொண்ட தீர்மானத்தை மீண்டும் பரிசீலிக்க முடியாதென்று சொன்னதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், நீண்ட இழுபறிக்குப்பின் அந்த வாக்கெடுப்பை செயலாளர் ஸ்தானத்திலிருந்து நடத்துமாறு தாங்களும் என்னைக் கேட்டுக்கொண்டீர்கள். அப்படி வாக்கெடுப்பை நடத்த என்னைப் பணிப்பதாக முன்னாள் தலைவரும் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்தார். வாக்கெடுப்பு நடத்தப்படுவது முறையற்றது என்ற கருத்தை நான் கொண்டிருந்தபோதும் தங்கள் இருவரினதும் பணிப்புரைக்கமைய இவ்வாக்கெடுப்பை நடத்தினேன். அந்த வாக்கெடுப்பு எவ்வித குழப்பமுமின்றி ஒழுங்காக அவசரமின்றி நடத்தப்பட்டது தாங்கள் அறிந்ததே. மத்திய செயற்குழுவின் முன்மொழிவை ஏற்றுக்கொள்கிறவர்கள் முதலிலே கைகளை உயர்த்திக் காண்பித்தார்கள். அவை நிரைநிரையாக ஒழுங்காக எண்ணப்பட்டன. நான் அதனை ஒலிபெருக்கி மூலமாக எண்ணுகிறபோது, வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென்று கூறியிருந்த திரு. கருணாகரன் நாவலன் அவர்களும் கூடவே எழுந்துநின்று உயர்த்தப்பட்ட கைகளை எண்ணி இறுதியிலே அதன் தொகை 112 என்பதை உறுதிப்படுத்தினார். அதன் பின்னர், மத்திய செயற்குழுவின் தீர்மானத்தை எதிர்ப்பவர்கள் கைகளை உயர்த்தியபோது அவர்களின் தொகை 104 என்று என்னாலும் திரு. நாவலன் அவர்களாலும் உறுதிப்படுத்தப்பட்டது. வாக்களிப்பை நடத்திவிட்டு நான் வந்து அமர்ந்தபோது அதன் முடிவை அறிவிக்குமாறு நீங்கள் கேட்டுக்கொண்டதற்கமைய மீளவும் நான் ஒலிபெருக்கியிடம் சென்று, முடிவை அறிவித்தேன். அப்படியாக அது பதிவுசெய்யப்பட்டது. அதன் பின்னர், அடுத்தநாள் அதாவது 28.01.2024 அன்று மாநாட்டுக்காக கூடுவோம் என்று அறிவித்ததோடு கூட்டம் உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டது.

மத்திய செயற்குழுவினுடைய முன்மொழிவை பொதுச்சபை மதிய உணவு இடைவேளைக்கு முன்னரே ஏற்றிருந்த வேளையில், அது சம்பந்தமாக திரும்பவும் வாக்கெடுப்பொன்று நடத்துவது தேவையற்றதும் முறையற்றதும் என்று நான் கூறியிருந்த பொழுதிலும், அப்படியான வாக்கெடுப்பை ஒரு சிலர் வலியுறுத்துகிறார்கள் என்ற காரணத்துக்காக அதை நடத்துமாறு என்னைப் பணித்திருந்தீர்கள். அப்படியாக வலியுறுத்தியவர்கள் அந்த வாக்கெடுப்பிலே முற்றுமுழுதாக கலந்துகொண்டார்கள். அது மட்டுமல்ல உயர்த்திய கைகளை எண்ணுகிற பணியிலும் சேர்ந்து ஈடுபட்டு அந்த எண்ணிக்கைகளை உறுதிப்படுத்தினார்கள். ஆகவே அந்தத் தீர்மானம் ஒரு தடவை அல்ல, இரண்டு தடவைகள் அவர்கள் கேட்டுக்கொண்ட முறைக்கு அமைவாகவும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. வாக்கெடுப்பில் கலந்து கொண்டபிறகு அதில் தோற்ற காரணத்தினால் வாக்கெடுப்பு முறை தவறென்று சொல்லுவது முறை கேடான செயலென்பதற்கப்பால் சட்டத்தின் அடிப்படையிலும் அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நிலைப்பாடு. வென்றால் முறைமை சரி, தோற்றால் முறைமை பிழை என்பது கீழ்த்தரமான செயற்பாடாகும். குற்றவியல் சட்டக் கோட்பாடுகளிலே இதனை VOLUNTI NON FIT INJURIA என்பார்கள். இதற்குரிய சிறந்த உதாரணம்: குத்துச்சண்டை மேடைக்குள்ளே தானாக இறங்கியபிறகு தன்னை மற்றவர் அடிக்கிறார் என்று குற்றம் சொல்ல முடியாது. குடியியல் சட்டக் கோட்பாடுகளில் இதனை ACQUIESCENCE என்றும் ESTOPPEL BY CONDUCT என்றும் சொல்வார்கள்.

எமது கட்சி யாப்பு விதிகளுக்கு அமைவாகவும் சட்டப்படியும் தாங்களே இப்பொழுது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர். 28.01.2024 ஞாயிற்றுக்கிழமையன்று கோலாகலமாக நடைபெறவிருந்த பொது நிகழ்வு தவறான ஆலோசனைகளின் பேரிலும் கலந்துரையாடல் இன்றியும் அதிகாரமற்றதும் சட்டத்துக்கு முரணான அறிவிப்பினாலும் துரதிர்ஷ்டவசமாக பிற்போடப்பட்டுவிட்டது. எமது வரலாற்றில் முதன்முறையாக வாக்கெடுப்பினாலே தெரிவுசெய் யப்பட்ட தலைவராகிய நீங்கள் அப்படியான அதற்குகந்த விமர்சையோடு வைபவரீதியாக பதிவியேற்பது முக்கியமான விடயமாகும்.

அதுமட்டுமல்லாமல், தங்களது தலைமையுரையில் எமது மக்களுக்கான விடிவுப் பாதை எப்படியானது என்ற தங்களது யோசனைகளை செவிமடுக்கப் பலரும் காத்திருந்தார்கள். அத்தோடு, எமது மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் பல்வேறு சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் அது முற்றுப்புள்ளி வைத்திருக்கும். ஆகவே தயவு செய்து காலம் தாழ்த்தாது வெகு விரைவில் அந்தப் பகிரங்கப் பொது நிகழ்வை நடத்துமாறும் அன்புரிமையோடு நான் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த விடயம் சம்பந்தமாக பலதரப்பட்ட குழப்பமான செய்திகள் பொது வெளியில் பரவுகின்ற காரணத்தினாலே கட்சியின் நலன் கருதி இக் கடிதத்தை ஊடகங்களுக்கும் வெளியிடுகின்றேன்.

தங்கள் உண்மையுள்ள,

ம. ஆ. சுமந்திரன்,

முன்னாள் பிரதிப் பொதுச் செயலாளர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மழையுடன் கூடிய காலநிலை

கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

காங்கோவை மீண்டும் தாக்கிய எபோலா வைரஸ்