உள்நாடு

சனத் நிஷாந்தவின் மரணம் – முக்கிய தகவலை வெளியிட்ட சாரதி

(UTV | கொழும்பு) –

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஜீப் வண்டியின் சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நேற்று அதிகாலை 1.55 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கந்தானை மொரவத்த பகுதியில் இடம்பெற்ற இந்த கோர விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர் அனுராதா ஜயக்கொடி ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான இராஜாங்க அமைச்சரின் சாரதியான பிரபாத் எரங்க ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து தொடர்பாக சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாகன சாரதியான பிரபாத் எரங்க பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
“முடிந்தளவு தாமதமின்றி கொழும்பு வருவதற்கு நினைத்தோம். அதற்குள் அமைச்சர் தூங்கிவிட்டார். நெடுஞ்சாலையில் எனக்கு முன்னால் இருந்த காரை முந்திச் சென்றேன்.

நான் ஜீப்பை மீண்டும் வலதுபுறம் உள்ள பாதையில் கொண்டு செல்ல முயன்றபோது, ​​முன்னால் இருந்த கண்டெய்னர் மீது மோதியது. பின்னர் ஜீப் வண்டி கட்டுப்பாட்டை இழந்து வேலியில் மோதி நின்றது.” என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான விசாரணையில் விபத்தின் போது ஜீப் மணிக்கு 160 கிலோ மீற்றருக்கு மேல் வேகத்தில் செலுத்தப்பட்டதாகவும், ஜீப் பலத்த சேதமடைந்ததுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

விபத்தின் பின்னர் ஜீப்பில் சிக்கியிருந்த இராஜாங்க அமைச்சர் மற்றும் பொலிஸ் அதிகாரியை மீட்க பொலிஸார், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடுமையாகப் போராடியுள்ளனர். எப்படியிருப்பினும் காயமடைந்தவர்களை ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே இருவரும் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாரதியின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை நாடாளுமன்ற அமர்வில் பங்குபற்றிய இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த குருநாகல் மற்றும் சிலாபம் பிரதேசத்தில் நடைபெற்ற இரண்டு திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அவர் தனது மூத்த சகோதரரை சந்தித்து நள்ளிரவில் கொழும்பில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது இந்த விபத்தை சந்தித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விரைவில் எதிர்க்கட்சிகளின் புதிய முன்னணி

புத்தாண்டை முன்னிட்டு இலங்கை வந்த INS ரன்விஜய் கப்பல்

சைக்கிள் ஓட்டிகள் பாதுகாப்பு ஹெல்மெட் அணிய அறிவுறுத்தல்