(UTV | கொழும்பு) –
இந்திய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, தமது நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் மூலம் தொலைத்தொடர்பு வணிகத்தை இலங்கையிலும் விஸ்தரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி அரசுக்கு உரித்தான தொலைத்தொடர்பு நிறுவனமான ஸ்ரீலங்கா டெலிகொம்மின் பங்குகளை கொள்வனவு செய்ய அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நிதி நெருக்கடிக்கு மத்தியில் பொருளாதாரத்தை புத்துயிர் பெற செய்வதற்கு தற்போதைய அதிகாரிகள் பல துறைகளை தனியார்மயமாக்குவதற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களைத் தூண்டிய ஆழமான பணப் பற்றாக்குறையிலிருந்து இலங்கையை மீட்பதற்காக, நாட்டில் உள்ள அனைத்து முக்கியத் துறைகளையும் தனியார்மயமாக்குவதற்கு அழுத்தம் கொடுக்க சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) இலங்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கை அரசாங்கம் பணமில்லாத நிலையில் டெலிகொம் நிறுவனத்தை கொண்டு நடத்திவருகிறது. அதன்படி ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு சாத்தியமான ஏலதாரர்களிடமிருந்து கடந்த நவம்பர் 10 ஆம் திகதிக்குள் இலங்கை அரசாங்கம் விண்ணப்பங்களை கோரியிருந்தது. அதற்கமைய, டெலிகொம் பங்குகளை வாங்குவதற்கு முன்வந்துள்ள 3 நிறுவனங்களில் முகேஷ் அம்பானியின் ஜியோ பிளாட்ஃபோர்ம்ஸ் நிறுவனமும் ஒன்றாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கை முதலீட்டுடன், ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் உலகளாவிய தொலைத்தொடர்பு சந்தையில் நுழைந்து ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ஜியோ அனைத்து இந்திய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களிடையே சந்தையில் முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්