(UTV | கொழும்பு) –
புத்தாண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை நடைபெறவுள்ளது.
பாராளுமன்றம் நாளை முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை கூடும் என சபாநாயகர் தலைமையில் கூடிய பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளைய தினம் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலக சட்டமூலம், தேசிய நீரியல் சட்டமூலம் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வர்த்தமானி இலக்கம் 2355/30 என்ற வர்த்தமானி பத்திரத்திற்கான உத்தரவுகள் விவாதத்திற்கு உட்படுத்தப்பட உள்ளன.
நீதிமன்றத்தை, நீதித்துறை அதிகாரத்தை அல்லது நிறுவனத்தை அவமதிக்கும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு தொடர்பாக 2023 நவம்பர் 8 ஆம் திகதி நடத்தப்பட்ட ஒத்திவைக்கப்பட்ட விவாதம் ஜனவரி 10 ஆம் திகதி இரண்டாவது நாளாக நடைபெறவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வியாழன் அன்று எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படவுள்ள சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளதுடன், தனிப்பட்ட உறுப்பினர்களின் பிரேரணைகளை முன்வைப்பதற்கு 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஒதுக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්