(UTV | கொழும்பு) –
அரச சார்பற்ற அமைப்புக்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் கண்காணித்தலுக்காக அரசாங்கம் புதிதாகக் கொண்டுவருவதற்கு முயலும் சட்டத்தின் ஆபத்தான தன்மை குறித்து அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து ஆராய்ந்துள்ளனர்.
நாட்டில் இயங்கிவரும் சுமார் 40 க்கும் மேற்பட்ட முன்னணி சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று கடந்த வாரம் கொழும்பில் அமைந்துள்ள ரேணுகா ஹோட்டலில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் அரச சார்பற்ற அமைப்புக்களை ஒழுங்குபடுத்துவதற்கும், கண்காணிப்பதற்குமென அரசாங்கம் புதிதாகக் கொண்டுவருவதற்கு முயலும் சட்டம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக இப்புதிய உத்தேச சட்டத்தின் ஊடாக அரசாங்கம் அனைத்து அரச சார்பற்ற அமைப்புக்களையும் ஒரே சட்டத்தின்கீழ் கொண்டுவருவதற்கு முயல்வதாக சந்திப்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். இச்சட்டத்தின் பிரகாரம் ஸ்தாபிக்கப்படும் செயலகத்தின்கீழ் அனைத்து அரச சார்பற்ற அமைப்புக்களும் பதிவு செய்யப்படவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுத்தப்பட்டு, பின்னர் அதனடிப்படையில் ஒரே கட்டளையில் அனைத்து அமைப்புக்களையும் அடிபணியச்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அர்கள் தெரிவித்தனர்.
அதுமாத்திரமன்றி அரச சார்பற்ற அமைப்புக்களுக்கான செயலகத்தில் பதிவுசெய்யும் பட்சத்தில், அப்பதிவை குறித்த காலப்பகுதிக்கு ஒருமுறை மீளப்புதுப்பிக்கவேண்டியிருக்கும். எனவே அரசாங்கம் தம்மை விமர்சிக்கின்ற, தமக்கு எதிராக செயற்படுகின்ற அமைப்புக்களின் அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்காமல் விடக்கூடிய அல்லது திடீரென இரத்துச்செய்யக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்த சிவில் சமூகப்பிரதிநிதிகள் அச்சம் வெளியிட்டனர்.
மேலும் அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில் இப்புதிய சட்டம் கொண்டுவரப்பட்டால், அதனூடாக அரசாங்கம் எத்தகைய ஒடுக்குமுறைகளைப் பிரயோகிக்கக்கூடும் என்பது பற்றியும் இச்சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டது. அத்தோடு ஏற்கனவே சில அரச சார்பற்ற அமைப்புக்களின் அலுவலகங்கள் முன்னறிவிப்பின்றி சோதனைக்கு உட்படுத்தப்பட்டமை, ஓரிரு அரச சார்பற்ற அமைப்புக்களின் வங்கிக்கணக்குக்கு வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட பணம் முடக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் பற்றியும் இச்சந்திப்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්