உள்நாடு

“நஜீப் ஏ.மஜீதின் மறைவுக்கு ரிஷாட் அனுதாபம்!

(UTV | கொழும்பு) –

நாடறிந்த அரசியல்வாதியும் முதலாவது முஸ்லிம் முதலமைச்சருமான நஜீப் ஏ.மஜீத் அவர்களின் மறைவு நாகரீக அரசியலில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அன்னாரின் மறைவு குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“நாகரீக அரசியலின் நாயகன் மர்ஹும் நஜீப் ஏ.மஜீத். சிறந்த அரசியல் புலத்தில் புடம்போடப்பட்ட அவரிடம் ஆழ்ந்த அனுபவங்கள் இருந்தன. தந்தை அப்துல் மஜீதின் பாசறையே அவரது ஆளுமைகளை முழுமைப்படுத்தியது. அவரது தந்தையார் மூதூர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக நீண்டகாலம் இருந்து திருகோணமலை மாவட்டத்துக்கு அளப்பரிய சேவைகள் செய்தவர். அன்னார் அப்போதைய ஆட்சியில் தகவல் ஒலிபரப்பு பிரதி அமைச்சராக இருந்தபோது நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் அரும்பணியாற்றியவர். ஒலிபரப்புத் துறையில் சீர்திருத்தங்களையும் கொண்டுவந்தவர். தந்தையும் மகனும் இன, மத பேதமின்றி பணியாற்றியதனாலே எல்லோராலும் விரும்பப்பட்டவர்கள்.

மேலும், ஆர்ப்பரிப்பின்றி அமைதியாகச் சாதித்த செயல்வீரனாகவே நஜீப் ஏ.மஜீத் அவர்களை நான் காண்கிறேன். எம்மோடு இணைந்து அரசியல் செய்த காலத்தில் அவரது ஆளுமைகளை நாம் அடையாளங்கண்டோம். இதனால்தான், கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ.மஜீதை நியமிக்கும் முயற்சிகளில் எமது கட்சியும் ஈடுபாடு காட்டியது. பெருமையின்றி சகலருடனும் பவ்வியமாகப் பழகிய நாகரீக அரசியல்வாதியும் அவர்தான். பழிவாங்கல், கருவறுத்தல் மற்றும் வேரோடு வீழ்த்துதல் போன்ற ஈனச்சிந்தனைகள் அவரிடம் இருந்ததே இல்லை. அதிகாரத்தின் உச்சத்திலிருந்த போதும் அடக்கமாகவே செயற்பட்டவர் நண்பர் நஜீப் ஏ.மஜீத்.

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரது நற்செயல்களைப் பொருந்திக்கொள்ளப் பிரார்த்திக்கிறேன். அவரது இழப்பால் துயருறும் சகலருக்கும் கழாகத்ரை பொருந்திக்கொள்ளும் பொறுமையையும் அல்லாஹ் வழங்குவானாக..! ஆமீன்..!”

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வயிற்று வலிக்கு வழங்கிய ஊசியால் யுவதி மரணம் : பேராதனை வைத்தியசாலையில் சம்பவம்

புத்தளத்தில் காணமல் போன சிறுவன், பிக்குவாக கண்டுபிடிப்பு!

ஹரின், மனுஷ உள்ளிட்டோருக்கும் அமைச்சுப் பதவிகள் [முழு விபரம்]