(UTV | கொழும்பு) –
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகம் வழங்குகின்ற அங்கீகாரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செயற்திறன்மிக்க கண்காணிப்பை முடிவுக்குக்கொண்டுவரும் எனவும், அது நல்லிணக்க செயன்முறையில் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் எச்சரித்துள்ளார்.
இலங்கைக்கான ஜப்பானியத்தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிரி வோல்ட் மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்டில் ஷால்க் ஆகியோர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வடமாகாணத்துக்குச் சென்றிருப்பதுடன், அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். குறிப்பாக அம்மூன்று இராஜதந்திரிகளுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளில் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் 7 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான முயற்சி குறித்து கலந்துரையாடப்பட்டது.
நாடளாவிய ரீதியில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு சுவிட்ஸர்லாந்து, தென்னாபிரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னின்று நிதி, ஆலோசனை மற்றும் வழிகாட்டல் சார்ந்த ஒத்துழைப்புக்களை வழங்கிவருவதாகத் தகவல்கள் வெளியாகி, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் பல்வேறு விமர்சனங்களைத் தோற்றுவித்திருக்கும் பின்னணியிலேயே இவ்விஜயம் இடம்பெற்றுள்ளது.
அதன்படி இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் (டுவிட்டர்) பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிரி வோல்ட், இவ்விஜயத்தின்போது வடக்கில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறிப்பாக நல்லிணக்கத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் பற்றி பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடியதாக அதில் குறிப்பிட்டுள்ளார். அதனை மேற்கோள்காட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன், ‘இலங்கை தொடர்பான ஜெனிவா பொறிமுறை செயலிழக்கின்றதா?’ எனக் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
அதுமாத்திரமன்றி உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகம் வழங்குகின்ற அங்கீகாரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் துடிப்பான (செயற்திறன்மிக்க) கண்காணிப்பை முடிவுக்குக்கொண்டுவரும் எனவும் அலன் கீனன் எச்சரித்துள்ளார். அத்தோடு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பின்றி நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதை முன்னிறுத்திய நகர்வுகளின் முன்னேற்றம் மந்தகரமானதாகவே காணப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්