(UTV | கொழும்பு) –
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மானிடவியல் துறையில் விரைவில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
மேலும், பிராந்தியத்திலும் சர்வதேச அளவிலும் மேற்கொள்ளப்படும் புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளையும் ஆய்வுகளையும் மேற்கொள்வதற்காக தேசிய உயர்கல்வி அதிகாரசபை ஒன்றை நிறுவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்,“கல்வி மற்றும் உயர் கல்வித் துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதன் ஊடாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் மானிடவியல் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம். அதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்றை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோன்று, பிராந்தியத்திலும் சர்வதேச அளவிலும் ஏனைய நாடுகளில் இடம்பெறும் புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள தேசிய உயர்கல்வி அதிகாரசபை ஒன்றை நிறுவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். இது 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில் மேற்கொள்ளப்பட உள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தை ஓரிடத்திற்கு கொண்டு வருவது இதன் இன்னுமொரு நோக்கம் என்பதையும் கூற வேண்டும்..
மேலும், பல்கலைக்கழகங்களின் நிர்வாக செயல்பாடுகளை வலுப்படுத்தும் வகையில், துணைவேந்தரை தவிர, பிரதி துணைவேந்தர்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நாட்டு விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஏராளமானோர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். அவர்களின் சேவையை மீண்டும் நாம் பெற வேண்டும். அவர்களை இலங்கைக்கு வந்து அரச பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளோம். அதன்படி தற்போது இலங்கைக்கு பல விரிவுரையாளர்கள் வருகை தந்து அவர்களின் சேவையை வழங்குகின்றனர்.
இந்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வன்முறையை நிறுத்தி, முறையான கல்வியைப் பெறக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு நாம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதையும் கூற வேண்டும். அடுத்த வருடம் முதல் 41,000 மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு வருவதற்கு முன், அவர்கள் தேர்ந்தெடுத்த பாடநெறிக்கேற்ப நான்கு மாதங்கள் சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அதற்காக புதிய திட்டமொன்றை நாம் வகுத்துள்ளோம்.” என்றும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්