(UTV | கொழும்பு) –
அனைத்துத் தரங்களுக்கும் புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் எனவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுசரணையாளர்களின் ஆதரவுடன் கல்விக் கட்டமைப்பை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
எதிர்காலத்தில் க.பொ.த சாதாரணப் பரீட்சை தரம் 10 இலும் க.பொ.த உயர்தரப் பரீட்சை தரம் 12 இலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர்,
“2024 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாண ரீதியில் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள 280 பில்லியன் ரூபா நிதியுடன் மொத்தமாக 517 பில்லியன் ரூபா இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.அதேபோன்று, விசேட தேவையுடைய பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவர்களையும் சாதாரண பிள்ளைகள் கல்வி கற்கும் வகுப்பறைகளில் இணைத்துக்கொள்ளக் கூடிய வகையில் inclusive education முறையை அறிமுகப்படுத்தவுள்ளோம்.
பல்வேறு அபிவிருத்தி அடைந்த நாடுகளின் தேசிய வருமானத்தின் பெரும்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் STEAM கல்வியின் மூலம் கட்டமைக்கப்பட்ட மனித வளமாகும். அதேபோன்று, இந்நாட்டின் பாடசாலைக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த, விஞ்ஞானம், தொழில்நுட்பம் பொறியியல், கலை, கணிதம் ஆகிய துறைகள் மூலம் பிள்ளைகளுக்கு முறையான வழிகாட்டல் வழங்கப்பட வேண்டியுள்ளதோடு, அவற்றை முன்னுரிமைப்படுத்தும் செயற்பாடுகளுக்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புடன் முழுமையான கல்விக் கட்டமைப்பையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 1-5 / 6-9 / 10-13 ஆம் தரங்களுக்கு புதிய கல்வி மறுசீரமைப்புகளை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும்.
மேலும் மாணவர்கள் 21 வயதுக்கு முன்னர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் வகையில் பாடசாலைப் பரீட்சைகள் நடத்தப்படும் தரங்களை மீள்திருத்தம் செய்யவுள்ளதுடன், 10 ஆம் தரத்தில் சாதாரண தரப் பரீட்சை மற்றும் 12 ஆம் தரத்தில் உயர்தரப் பரீட்சையை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் வருடத்தில் பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக 2,535 ஆசிரியர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதுடன், அவர்களுக்கான பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, 03 முதல் 05 வரையான வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைப் பருவ வளர்ச்சிக்கான சிறப்பு வேலைத்திட்டமொன்றை கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனம் மற்றும் UNICEF ஆகியவற்றுடன் இணைந்து செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஆசிரியர் கல்வியியலாளர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் ஆசிரியர் வெற்றிடங்கள் உட்பட கல்வி சேவையில் நிலவும் அனைத்து வெற்றிடங்களையும் அடுத்த வருடம் பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் நிரப்புவதற்கு அவசியமான பணிகளை முன்னெடுத்துள்ளோம்.” என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්