உள்நாடு

நாம் எதிர்நோக்கும் சவால் முடிவுக்கு வரவில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

(UTV | கொழும்பு) –

நாடு சரிவு நிலையில் இருந்து  மீண்டிருந்தாலும், நாம் எதிர்நோக்கும் சவால் முடிவுக்கு வரவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்பார்க்கும் இலக்குகளை அடைந்துகொள்ள அனைவரும் ஒற்றுமையாக பொறுமையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.அரசியல் கொள்கைகளுக்கு மாறாக அரசியலமைப்பின் 06 அத்தியாத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அரச கொள்கைகளை நடைமுறைப்படுத்து வதற்கான அடிப்படை நியதிளுக்கு அமைவாகவே அரசாங்கம் செயற்படுகிறது என்றும் சுட்டிக் காட்டினார். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று  நடைபெற்ற 2023 சனச தேசிய மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சனச ஸ்தாபகர் கலாநிதி. பீ.ஏ.கிரிவந்ததெனியவின் “செலவை குறைப்போம் – வரவை அதிகரிப்போம்” என்ற எண்ணக்கருவுக்கமைவான 1,250 சனச சங்கங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக 5,000 கிராமங்களை அவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பிலான மூன்று வருடங்களுக்கான எதிர்கால திட்டமிடவும் இதன்போது வெளியிடப்பட்டது. பின்னர் கலாநிதி. பீ.ஏ.கிரிவந்ததெனியவினால் மூன்று வருடத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கி வைக்கப்பட்டது. அதனையடுத்து ஜனாதிபதிக்கு சிறப்பு நினைவு பரிசொன்றும் வழங்கப்பட்டது.

அதேபோல் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கி 5,000 சனச தலைவர்களுக்கு வேலைத்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அதன் கீழ் 5,000 கிராமங்களில் 10,000 வேலைத்திட்டங்களை ஆரம்பித்து அதனூடாக நேரடி மற்றும் மறைமுகமான 50,000 தொழில் வாய்ப்புக்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனூடாக 300,000 குடும்பங்களின் பொருளாதாரத்தை பலப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “இந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு சனச போன்ற நிறுவனங்கள் உந்து சக்தியாக உள்ளன என்றும் சுட்டிக் காட்டினார். மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் இணைந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி அனைத்து அரச மற்றும் தனியார் துறையினரிடத்திலும் வேண்டுகோள் விடுத்தார். சனச வியாபாரத்தை ஆரம்பித்தமைக்காக நாம் கிரிவந்தெனியவுக்கு நன்றி கூற வேண்டும். அவர் ஆரம்பித்த வியாபாரத்தை வெற்றிகரமானதாக மாற்றியுள்ளார். இதனை மேலும் முன்னேற்ற வேண்டும்.

இந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தில் சனச வியாபாரத்தையும் இணைத்துக்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்வோம்.இவ்வருட இறுதிக்கும் சர்வதேச நாணய நிதியம் நமது நாடு கடன்களை நிர்வகிக்கக்கூடிய நிலையான தன்மைக்கு வந்துள்ளெதென அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதனால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. கடன்களை மீளச் செலுத்துவதற்கான சலுகை வட்டியை கோரிய பின்னர் கடன்களை செலுத்த முடியும். மேலும் புதிய கடன்களை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்படும். இந்த பணிகளை முன்னெடுத்துச் செல்ல எமக்கு வலுவான பொருளாதாரமொன்று அவசியம். இதன்போது ஏற்றுமதி பொருளாதாரம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்த வேண்டும். இந்த வேலைத்திட்டங்களில் சனச வியாபாரம் இணைந்துகொள்வதை பெரும் உந்துசக்தியாக கருதுகிறோம்.

நாம் ஆட்சியை பொறுப்பேற்றதன் பின்னர், அரசியல் கொள்கைகளுக்கு மாறாக அரசியலமைப்பின் 06 அத்தியாத்துக்கமைவான அரச கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதற்கான அடிப்படை நியதிளுக்கு அமைவாகவே அரசாங்கம் செயற்படுகிறது.அரச மற்றும் தனியார் துறைகளின் பொருளாதார செயற்பாடுகளின் வாயிலாக நாட்டுக்குள் துரிய அபிருத்தியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். கடன் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் எமக்கு துரித அபிவிருத்தியே அவசியப்படுகிறது. அனைவருக்கும் போதிய வாழ்வாதாரம் கிடைக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் பலரும் வாழ்வாதாரத்தை இழந்தனர். சில வியாபாரங்கள் மூடப்பட்டன. நாம் அனைவரும் நெருக்கடிகளுடனேயே வாழ்ந்தோம்.

நாம் தற்போது மீண்டும் அபிவிருத்தி கண்டு வருகிறோம். விவசாய செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம். சுற்றுலாத்துறை அபிவிருத்து அடைகிறது. சுற்றுலாத்துறைக்குள் பல்வேறு தொழில் வாய்ப்புக்கள் உருவாகின்றன. அதனால் அனைவரும் ஒன்றுபட்டு அந்த துறையை பலப்படுத்த வேண்டும்.நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் போதிய வாழ்வாதாரத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக பொறுமையுடன் பயணிக்க வேண்டும். சரிவடைந்த இடத்திலிருந்து முன்னேறி வந்துள்ளோம். இருப்பினும் பயணம் இன்னும் முடியவில்லை. அடுத்த ஜனவரி மாதத்திலிருந்து மேலும் சில  வருடங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தி நாம் செயற்பட வேண்டியிருக்கும்.

அன்று நமது நாடு நடுத்தர வருமானம் பெற்றது.  இன்று குறைந்த வருமானம் பெரும் நாடாக மாறியுள்ளோம். மீண்டும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடாக மாறுவதற்கே முயற்சிக்கிறோம். அதன் பின்னர் உயர் வருமானம் ஈட்டும் நாடாக மாற வேண்டும். 2048 வரையில் அதற்காக திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.எமது நாட்டின் கல்வியிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால் பலரும் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். தொழில் கல்விக்கு பாரி கேள்வி காணப்படுகிறது. இருப்பினும் அதனை பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதனாலேயே கல்வித்துறையை மறுசீரமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

மேலும் 2030 களில் ஆங்கில மொழியை பாடசாலைக் கல்வி மற்றும் உயர்கல்வியில் உள்வாங்குவதற்கான வேலைத்திட்டத்தை செயற்படுத்துவோம். பின்னர் தொழில் கல்விக்கான முழுமையான மறுசீரமைப்பை இவ்வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளோம். அத்தோடு விவசாய நவீன மயப்படுத்த வேலைத்திட்டத்தில் பங்களிப்புச் செய்ய சனச போன்ற நிறுவனங்களுக்கு பெரும் வாய்ப்புள்ளது. அதனோடு ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சனச ஸ்தாபகர் கலாநிதி. பீ.ஏ.கிரிவந்தெனிய, 

புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்து கிராமங்களின் பொருளாதார்தை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம். கொவிட் போன்ற நெருக்கடிகளுக்கு மத்தியில் கடந்த வருடத்தில் முடங்கிய செயற்பாடுகள் இவ்வருடத்தில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. அற்கான மூன்று வருட திட்டம் முன்மொழியப்படும். மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இவ்வாறான திட்டமிடல்களின் கீழ் 10 வருடங்களில் இலக்குகளை அடைந்துகொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

கிராமங்களின் இளைஞர்களை நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுடன் இணைத்துகொள்வதே எமது நோக்கமாகும். வகுப்புகள்,  மாநாடுகள் ஊடாக தனது செலவுகளுக்கு ஏற்ற வாழ்வாதார முறைமையை உருவாக்கிக்கொள்வது தொடர்பில் இளைய சமூகத்தினரை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்களை கிராம மட்டத்தில் முன்னெடுப்போம். செலவை குறைப்போம் – வரவை அதிகரிப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் வெற்றிகரமான எதிர்காலத்தை அவர்களுக்கு உருவாக்கி கொடுப்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்‌ஷ, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க உள்ளிட்டோரும் நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சனச சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி அநுரவிற்கும் இந்திய உப ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

editor

எரிபொருள் கோரி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஜனாதிபதி

Pfizer BioNTech தடுப்பூசிக்கு மாத்திரமே அவசர நிலைமைகளின் கீழ் அனுமதி [VIDEO]