(UTV | கொழும்பு) –
எமது சமூகம் 200 வருடங்களாக காணி உரிமையற்ற சமூகமாக காணப்படுவதாக இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த தற்போதைய எதிர்க்கட்சியினர் அடையாளப்படுத்திய போதிலும், இம்முறை வரவு செலவு திட்டத்தில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, எமது சமூகத்தினருக்கு 10 பேர்ச் காணி உரிமையானது உள்வாங்கப்பட்டுள்ளது. எமது காணி உரிமை தொடர்பான யோசனையானது ஒரு வரவு செலவுத் திட்டத்திலேயே உள்வாங்கப்பட்டமை இதுவே முதல் தடவை எனவும், அதனை அமுல்படுத்தும் வகையில் 4 பில்லியன் நிதி ஒதுக்கீட்டினைப் பெற்றுக் கொடுத்த அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு இரத்தினபுரி மாவட்ட மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், அவர் மேலும் கூறுகையில் இதுவரைக் காலமும் மத்திய மாகாணத்தை மாத்திரம் மையப்படுத்தி “மலையக அபிவிருத்தி” என்பதற்கு அப்பாற் சென்று, இம்முறை இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, கொழும்பு, மாத்தரை, காலி, களுத்துறை, குருநாகல், பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் வாழும் எமது சமூகத்தின் மேம்பாட்டுக்காக முன்மொழியப்பட்டுள்ள பாதீட்டின்போது 10 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளமையானது, இந்த அரசாங்கம் எவ்வளவு தூரம் எமது இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு முன்னுரிமையளிக்கிறது என்பதனை பறைசாற்றுகிறது.
அதேவேளை, ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கான பத்தாயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு, மலையகத்திற்கான தனிப் பல்கலைக்கழக முன்மொழிவு, பாடசாலை இடை விலகிய மலையக இளைஞர்களுக்கான தொழில்நுட்ப கல்வியை விருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்கள் என பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிய வரவு செலவு திட்டமாக இதனை நாம் கருதுகிறோம்.
மலையக சமூகத்தின் வளர்ச்சிக்காக முன்னெடுக்கும் எந்த ஒரு நல்ல வேலைத்திட்டத்திற்கும் எமது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவு என்றென்றும் வழங்கும் என்பதே வரலாறு. அந்த வகையில், இந்த வரவு செலவு திட்டத்திற்கு எமது மலையக சமுதாயத்திற்கு பல அனுகூலங்களை உள்ளடக்கியவாறு அமைவதற்கு பாராளுமன்றத்திற்குள் காரணமாக இருந்த கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் தவிசாளரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமாகிய மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களுக்கும் எமது இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්