(UTV | கொழும்பு) –
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் இடம்பெற்று, கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர், இன்னொரு மக்கள் போராட்டத்துக்கான சாத்தியம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் மக்கள் எதிர்கொண்டதைப் போன்ற நெருக்கடிகள் மீண்டும் உருவாகத் தொடங்கியிருக்கின்றன. பொருளாதார ரீதியாக கொடுக்கப்படுகின்ற அழுத்தங்கள், எப்போதுமே மக்களை உணர்வு ரீதியான நிலைக்கு கொண்டு செல்லக் கூடியவை. அவ்வாறான பொருளாதார அழுத்தங்கள் மீண்டும் உருவாகத் தொடங்கியிருப்பது ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் பாதகமானது.
ஒரு பக்கம் பொருளாதார மீட்சி பற்றி வீர வசனங்களைப் பேசிக் கொண்டே மக்களைச் சுரண்டும் நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கின்றன.ஊழலையும், மோசடிகளையும் தடுக்கக் கூடிய ஆற்றலை ரணில் விக்கிரமசிங்கவும் அவரது அரசாங்கமும் கொண்டிருக்கவில்லை என்பது இப்போது நிரூபணமாகி வருகிறது. சீனிக்கான பண்டக வரி உயர்த்தப்படுவதற்கு முன்னரே, அந்த தகவல் கசிந்து வர்த்தகர் ஒருவரால் பெருந்தொகை சீனி இறக்குமதி செய்யப்பட்டமை அதில் ஒன்று. இதே போன்றதொரு மோசடி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்திலும் இடம்பெற்றது. இரண்டு மோசடிகளாலும் அரசாங்கம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை இழந்திருக்கிறது. கிரிக்கெட் சபையில் (ஸ்ரீலங்கா கிரிக்கெட்) இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள், இன்று நாட்டைச் சந்தி சிரிக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றன.
ஜனாதிபதி மோசடியாளர்களைக் காப்பாற்ற முனைகிறார் என்று விளையாட்டுத்துறை அமைச்சரே பாராளுமன்றத்தில் கூறுகிறார். மோசடியாளர்களைப் பாதுகாப்பவர் ரணில் விக்கிரமசிங்க என்ற குற்றச்சாட்டு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மத்திய வங்கி பிணை முறி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்டவர்களை தப்பிக்க விட்டவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் என்ற குற்றச்சாட்டு உள்ளது.ரணில் விக்கிரமசிங்கவின் நிழலில் தான் அத்தனை ஊழல் மோசடிகளும் இடம்பெற்றன. அவர் இந்த மோசடிகளில் தொடர்புபட்டார் என எந்த ஆதாரங்களும் இல்லாவிட்டாலும், மோசடியாளர்கள் அவரைப் பயன்படுத்திக் கொண்டனர். இப்போதும் அதுவே நடந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் எடுக்கின்ற பல முடிவுகள் அவருக்கே குழி பறிப்பதாகத் தான் அமைந்திருக்கிறது. பொலிஸ் மா அதிபருக்கு சேவை நீடிப்பு வழங்கியது சட்டவிரோதம் என்றும், இதனை காரணமாக வைத்து அவருக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணையைக் கொண்டு வர முடியும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருக்கிறார்.அவர் பதவியில் இல்லாத போதும், அரசியலமைப்பை மீறியதற்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.மக்கள் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் வேகமாக செல்வாக்கிழந்து வருகிறது. இந்த செல்வாக்கு வீழ்ச்சி தான் பஷில் ராஜபக் ஷவை பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னிறுத்தும் தீர்மானத்தை அந்தக் கட்சியினர் எடுக்கும் நிலைக்கு வந்திருப்பதற்கு முக்கியமான காரணம்.
ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக்காலத்தில் நற்பெயரைச் சம்பாதித்திருந்தால், அவருக்கு எதிராக போட்டியிடுவதற்கு ராஜபக் ஷவினரில் எவரேனும் தயங்கியிருப்பார்கள். அந்தநிலை இப்போது மாறி, ராஜபக் ஷவினருக்கு சார்பான சூழல் உருவாகத் தொடங்கியிருக்கிறது. வரவு,செலவுத் திட்டத்துக்குப் பின்னர் அரசாங்கத்துடன் அவர்கள் எந்தளவுக்கும் முரண்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளலாம். எந்த மக்கள் தமக்கு எதிராக போராட்டங்களை நடத்தினரோ அதே மக்கள் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு எதிராக திரும்புவார்கள் என்று ராஜபக் ஷவினர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நெருக்கடிகளுக்கு மேல் நெருக்கடி அதிகரிக்கும் போது மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும். தற்போதே ஆங்காங்கே தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்த தொடங்கி விட்டன.
அரசாங்கம் உருவாக்கி வரும் புதிய சட்டங்கள் மனித உரிமைகள், ஜனநாயகம் போன்றவற்றை நசுக்கும் ஆபத்து உள்ளதாக எதிர்க்கட்சியினர் எச்சரிக்கின்றனர்.புதிய சட்டங்களின் ஊடாக அரசாங்கம் மக்களை கட்டுப்படுத்த முனையும் போது அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் தீவிரம் பெறும்.அண்மையில் கொழும்பில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், மக்களாணை இல்லாத அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்துக்கு எதிராக மக்கள் சட்டரீதியான கட்டுப்பாடுகளை மீறி ஒன்று திரளத் தயாராக வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.
“ஆர்ப்பாட்டங்கள் மூலம் தனிநபர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துவது மிகவும் அவசியமானது. மக்கள் தங்கள் போராட்டத்தை முன்னெப்போதையும் விட அதிகமாக வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது” என்றும் அவர் கூறியிருக்கிறார்.அதுபோல அமெரிக்காவில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க, 2024 ஒக்டோபர் 24ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படாது போனால் மக்கள் வீதியில் இறங்குவார்கள் என்று எச்சரித்திருக்கிறார்.மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டியதொரு சூழல் இலங்கையில் உருவாகி வருகிறது என்பதைத் தான் இந்த இரண்டு பேரினது கருத்துக்களும் வெளிப்படுத்துகின்றன. பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ் தேச அரசியல்வாதிகளுக்குள்ளேயே அதிக மிதவாதி எனப் பெயரெடுத்தவர். அவரே, இன்று மக்களை கொதித்தெழுந்து வீதிக்கு வர வேண்டும் என்கிறார்.
நடைமுறையில் உள்ள சட்டங்களை மீறி அவர்கள் போராட வேண்டும் என்கிறார். இது ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் மீதுள்ள அவரது அதிருப்தி மாத்திரமல்ல, போராட்டங்கள் தொடர்பாக அவர் முன்னர் கொண்டிருந்த கருத்தில் ஏற்பட்டு வரும் மாற்றமும் கூட.
மென்போக்காளர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் கூட இன்று போராட்டங்களுக்கு மக்களை அழைக்கின்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது அரசாங்கம். ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லால் காந்த அண்மையில் கண்டியில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது, தேவைப்பட்டால் மீண்டும் ஆயுதம் ஏந்துவதற்கும் தயாராக இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். இவையெல்லாவற்றுக்கும் காரணம் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை தளர்ந்து வருவது தான். ஜனநாயகம் பலமானதாக இருந்தால், அவ்வாறான அரசியல் வழிமுறையை முன்னெடுப்பதில் கட்சிகளும், பிரதிநிதிகளும் தயாராக இருப்பார்கள். ஜனநாயகம் பலவீனமடைந்து, அடக்குமுறைகளும், எதேச்சாதிகாரமும் அதிகரிக்கும் போது, ஜனநாயகத்தை நம்பியிருப்பவர்கள் அதிகபட்ச ஏமாற்றத்துக்கு உள்ளாகிறார்கள்.
ஆயுதப் போராட்டத்தில் இருந்து விலகிய லால்காந்த இன்று மீண்டும் ஆயுதம் ஏந்த தயார் என்கிறார் என்றால், அரசியல் வழி மீதான அவரது நம்பிக்கைகள் பொய்த்து விட்டன என்று தான் அர்த்தம். சுமந்திரன் கூட மக்களை வீதிக்கு இறங்குமாறு அழைக்கிறார் என்றால், அரசாங்கத்துடன் பேசி தீர்வுகளைப் பெறலாம் என்ற நம்பிக்கையை அவர் இழந்து விட்டார் என்று தான் அர்த்தம். எல்லா மட்டங்களிலும் இந்தநிலை உருவாகி விட்டது. இது தான் அரச எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைவதற்கான முகிழ் நிலை. இந்தச் சூழலை அரசாங்கம் சரியாகப் புரிந்து கொள்ளாது போனால், ‘கோட்டா வீட்டுக்குக் போ’ போராட்டத்தைப் போன்ற போராட்டம் மீண்டும் உருவாகுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්