(UTV | கொழும்பு) –
“ஊழல் மிக்க ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் உட்பட அதிகாரிகளை நீக்குதல்” எனும் தலைப்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியன ஒன்றிணைந்து கொண்டுவரும் பிரேரணை மீதான விவாதத்தை நாளை நடத்துவதற்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார். அதற்கமைய, விவாதம் தொடர்பான பிரேரணை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்படவுள்ளதுடன், அது ஆளும் கட்சியினால் ஆமோதிக்கப்படவுள்ளது.
அதற்கமைய, அதனையடுத்து நாளைய தினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் 2023 ஆம் நிதியாண்டுக்கான 231.5 பில்லியன் ரூபாய் அனுமதியைப் பெறுவதற்கான 01 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு என்பன விவாதம் இன்றி அனுமதிக்கப்படவுள்ளன. நாளைய தினத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த வாய்மூல விடைக்கான கேள்விகள் பிறிதொரு நாளுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளன. அதன் பின்னர் நாளை மு.ப. 09.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை “ஊழல் மிக்க ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் உட்பட அதிகாரிகளை நீக்குதல்” எனும் தலைப்பிலான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளதாகவும் பி.ப. 5.30 மணிக்கு குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறும் எனவும் பதில் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
இதற்கு அமைய இலங்கையில் கிரிக்கட் விளையாட்டின் முன்னேற்றத்துக்கு தற்போதைய ஊழல் நிறைந்த இலங்கை கிரிக்கெட நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளைக் கொண்ட சபையை உடனடியாக நீக்கவேண்டும், ஊழல் அற்ற கிரிக்கெட் நிர்வாகத்தை வெளிப்படையான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக கிரிக்கெட் நிர்வாகத்திற்கு புதிய சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் பாராளுமன்றத்தினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්