(UTV | கொழும்பு) –
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 05 களஞ்சியசாலைகளில் இருந்து நெல் இருப்புக்கள் காணாமல் போனமை தொடர்பில் 03 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டின் பல பருவங்களில் அவ்வப்போது கொள்வனவு செய்யப்பட்ட நெல் கையிருப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊழியர்கள் குழுவொன்று விவசாய அமைச்சரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய காரியாலயங்களின் சில அதிகாரிகளும் அரிசி இருப்பு காணாமல் போன சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
இதன்படி குருநாகல் மாவட்டத்தின் நிகவெரட்டிய, பொல்கஹவெல, மஹவ உள்ளிட்ட 05 களஞ்சியசாலைகளில் கொள்வனவு செய்யப்பட்ட அரிசி கையிருப்பு காணாமல் போயுள்ளதாகவும், அந்த கையிருப்புகளின் பெறுமதி சுமார் 10 கோடி ரூபா எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொடவிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්