உள்நாடுசூடான செய்திகள் 1

பொய் கூறியுள்ளேன்- ஒப்புக்கொண்ட ஹிஜாஸுக்கு எதிரான சாட்சியாளர்

(UTV | கொழும்பு) –

பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கில், அரச தரப்பின் பிரதான சாட்சியாளர்களில் ஒருவரான இரண்டாவது சாட்சியாளரான, புத்தளம், அல் சுஹைரியா மதரசா பாடசாலையின் முன்னாள் மாணவன் எனக் கூறப்படும் மொஹம்மட் பெளஸான், தான் நீதிமன்றில் வழங்கிய சாட்சியத்தில் குறிப்பிட்ட விடயங்கள் பொய்யானது எனவும் அது எதுவும் நேரடியாக தன் கண்களால் காணாதவற்றை அடிப்படையாக கொண்டது எனவும் ஒப்புக்கொண்டார்.

புத்தளம் மேல் நீதிமன்றில் நடந்த வழக்கு விசாரணைகளின் இடையே, இந்த விடயம் பிரதிவாதி தரப்பின் சட்டத்தரணி சமிந்த அத்துகோரளவின் குறுக்கு விசாரணையின் போது மன்றில் வெளிப்ப‌டுத்தப்பட்டது.

உயிர்த்தஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு நேற்று (19) நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது , பிணையில் இருக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் இரண்டாம் பிரதிவாதியான அல் சுஹைரியா மதரசா பாடசாலை அதிபர் சகீல் கான் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

முதல் பிரதிவாதியான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் , சிரேஷ்ட சட்டத்தரணி அசித் சிறிவர்தன உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.

இரணடாம் பிரதிவாதியான அதிபர் சகீல்கான் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள தலைமையில் குழுவினர் ஆஜராகினர். வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொல்சிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகமவும், சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன சில்வாவும் ஆஜராகினர்.

அத்துடன் இவ்வழக்கு விசாரணைகளை கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், அமெரிக்க தூதரக அதிகாரிகள் நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்தமை விஷேட அம்சமாகும்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புத்தளம் அல் சுஹைரியா மதரசா பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு, கற்றுக்கொடுக்கப்பட்ட சொற்கள் ஊடாகவோ, தவறான பிரதி நிதித்துவம் ஊடாகவோ பல்வேறு மதங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வண்ணம் எதிர் உணர்வுகளை தூண்டும் விதமாக சொற்பொழிவினை நடாத்தியமை, அதற்காக சதி செய்தமை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து கூறப்படும் அச்சட்டத்தின் 3 (அ) பிரிவின் கீழ் தண்டனைக் குறிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில், ‘இஸ்ரேலியர்கள் கைப்பற்றியிருப்பது, எமது பள்ளிவாசல்கள். இலங்கையில் கத்தோலிக்கர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினாலேயே அவர்கள் அச்சப்படுவர்.’ என கூறி இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த காணொளிகளை காண்பித்தமை ஊடாக மதக் குழுக்கள் இடையே மோதல் நிலைமையை ஏற்படுத்தும் வண்ணம் உணர்வுகளை தூண்டியதாக பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து நோக்கப்படும் அச்சட்டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்டனைக் குறிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் உதவி ஒத்தாசை புரிந்ததாக சுஹைரியா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்கரவாத தடை சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனைவிட, பலஸ்தீன் – இஸ்ரேல் தொடர்பிலான யுத்த காணொளி காட்சிகளை காண்பித்து ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கூறியதாக கூறப்படும் வசனங்கள் ஊடாக வெறுப்புணர்வுகளை விதைத்தாக குற்றம் சுமத்தி சிவில் அரசியல் உரிமைகள் குறித்தான சர்வதேச இணைக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1) ஆம் உறுப்புரையுடன் இணைத்து பார்க்கப்படும் அச்சட்டத்தின் 3 (3) ஆம் உறுப்புரையின் கீழ் குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகவும், அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் மத்ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீலுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மார்ச் 24, 27, ஜூலை 14 ஆம் திகதிகளில் நடந்த விசாரணைகளின் போது இரண்டாம் சாட்சியாளராக அல் சுஹைரியா மதரசாவின் முன்னாள் மாணவனான, 19 வயதுடைய மொஹம்மட் பெளஸான் சாட்சியமளித்திருந்தார்.

அவரது சாட்சியத்தை அரசின் பிரதி சொல்சிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம நெறிப்படுத்தியிருந்த‌ நிலையில் முதல் பிரதிவாதி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் இந்ரதிஸ்ஸவினால் குறுக்கு விசாரணையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே நேற்று இரண்டாவது பிரதிவாதி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள குறுக்கு விசாரணைகளை தொடர்ந்தார்.

கடந்த தவணையின் போது, பாத்திமா ஜிப்ரியா, சாரா ஜெஸ்மின் என இரு பெண்கள் மதரசா பாடசாலைக்கு வந்தது போதனைகளை செய்ததாக கூறினீர்கள் அல்லவா? அந்த இரு பெண்கள் மட்டுமா போதனை செய்ய மதரசாவுக்கு வந்தார்கள் என சட்டத்தரணி சமிந்த அத்துகோரள முதல் கேள்வியை தொடுத்தார்.

அதற்கு பதிலளித்த சாட்சியாளர், அன்று நான் சொன்னது பொய். நான் அவர்களைக் காணவில்லை என தெரிவித்தார்.

ஜிப்ரியா, சாரா ஜெஸ்மின் ஆகியோர் அங்கு வந்த்து சில விளையாட்டுக்களை சொல்லிக்கொடுத்ததாக கூறினீர்கள் அல்லவா? என மீன்டும் கேட்ட போது, அது உண்மை இல்லை. நான் பொய் கூறினேன் என சாட்சியாளர் மீளவும் பதிலளித்தார்.

அதன்பின்னர் பிரதான சாட்சியத்தில் குறித்த சாட்சியாளர் குறிப்பிட்ட, அல் சுஹைரியா மதரசாவுக்கு சஹ்ரான் ஹஸீம் வந்த்தமை, மத்ரசாவில் போர்க் காட்சிகள் காண்பிக்கப்ப்ட்டமை, சஹ்ரானின் சகோதரர் என கருதப்ப‌டும் ரில்வான் அல்லது ரிஸ்வான் எனும் நபர் வருகை தந்தமை போன்ற அனைத்து விடயங்களும் பொய்யானவை எனவும் தான் முதல் சாட்சியாளர் மலிக்கின் கூற்றுப்படி சில விடயங்களை அவ்வாறு கூறியதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் சி.ஐ.டி.க்கு வழங்கிய வாக்கு மூலத்தில் கூட தான் பொய் கூறியதாகவும், சி.ஐ.டி. அதிகாரிகள் தன்னை கூண்டில் அடைப்பதாக அச்சுறுத்தியதால் அதனை தெரிவித்ததாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் வழக்கில் வழக்குத் தொடுநருக்காக ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன சில்வா, இரண்டாவது சாட்சியாளரை முறைப்பாட்டாளர் தரப்புக்கு பாதகமான சாட்சியாளராக சாட்சிகள் கட்டளை சட்டத்தின் 154 ஆவது அத்தியயத்துக்கு அமைய பெயரிட்டு குறுக்கு விசாரணை செய்ய கோரினார்.

எனினும் அந்த கோரிக்கை பிரதிவாதிகளுக்கு பாதகமாக அமையலாம் என பிரதிவாதி தரப்பினர் ஆட்சேபனம் முன் வைத்தனர். எனினும் அதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.

இதனைத் தொடர்ந்து பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன சில்வா சாட்சியாளரிடம் கேள்விகளை தொடுத்த போதும், தான் அடிப்படை சாட்சியத்தில் கூறிய முக்கியமான விடயங்கள் அனைத்தும் பொய்யானவையே என்பதை சாட்சியாளர் மீளவும் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து மன்றில் விஷேட வாதங்களை முன் வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன சில்வா, சாட்சியாளருக்கு எதிராக பொய் சாட்சியம் அளித்தமைக்காக குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 449 ஆவது அத்தியாயத்துக்கு மேலதிகமாக நடவடிக்கை அவசியம் எனவும் அதனால் குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 188 ஆவது அத்தியாயம் பிரகாரம் பொய் சாட்சியமளித்தமைக்காக குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய அனுமதிக்குமாறும், அதனை தாக்கல் செய்யும் வரை சாட்சியாளரை விளக்கமறியலில் வைக்கவும் கோரினார்.

‘இவ்வழக்கின் முதல் பிரதிவாதி ஒரு சட்டத்தரணி. சட்ட மா அதிபர் திணைக்களத்திலும் சேவையாற்றியவர். அவ்வாறான ஒருவருக்கு எதிராக பொய்சாட்சியம் அளித்ததை பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது.

இது மிக அவதானத்துக்கு உரிய விடயம். நியாயத்தை நிலை நிறுத்தும் நடவடிக்கைகளில் இவ்வாறான பொய் சாட்சியமளிப்போருக்கு நடவடிக்கை அவசியம்’ என குறிப்பிட்டார்.

எனினும் விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை 449 ஆவது அத்தியாயத்தின் கீழான நடவடிக்கை போதுமானது எனவும் அந்த நடவடிக்கையை வழக்கு விசாரணையின் பின்னர் எடுப்பதாகவும் அறிவித்தார்.

சட்ட மா அதிபர் கூறுவதைப் போல சாட்சியாளரை விளக்கமறியலில் வைக்க அனுமதிக்க முடியாது என குறிப்பிட்ட நீதிபதி, அவ்வாறு செய்தால் அது ஏனைய சாட்சியாளரை அச்சுறுத்தும் விதமாக அமைந்த்துவிடும் என சுட்டிக்காட்டினார்.

அதன்படி இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் ஜனவரி 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பஸீர்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று நள்ளிரவுடன் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்படுவதாக அறிவிப்பு

editor

“இந்நாட்டுக்கு ராஜபக்சவின் அரசியல் தேவை”

விநியோகத்திற்கு அமைவாக அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் தீர்மானிக்கப்படும்