(UTV | கொழும்பு) –
குருந்தூர் மலை ஆலய விவகாரம் தொடர்பான வழக்கினை கையாண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி, தனது பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியதற்கான முழுப் பொறுப்பும் அரசாங்கத்தையே சார்ந்தது என்பதை தயக்கம் எதுவும் இன்றி கூறிவைக்க விரும்புவதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ந.ஶ்ரீகாந்தா தெரிவித்தார். இது தொடர்பில் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில்,
பாராளுமன்றத்துக்கு உள்ளே எழுப்பப்பட்ட இனவெறிக் கூச்சல்களுக்கு அப்பால், அதிகாரத் தரப்பினால், நேரடியாகவும் மறைமுகமாகவும் நீதிபதி மீது பிரயோகிக்கப்பட்ட உளவியல் ரீதியான அழுத்தங்களே, அவரை இந்த முடிவுக்கு தள்ளியிருக்கின்றன என்பது தெட்டத் தெளிவானது. பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு அனுசரணையாக, நீதிபதி சரவணராஜா வளைந்து கொடுக்க மறுத்திருந்த காரணத்தினால் தான், அவருக்கு இந்தக் கதி ஏற்பட்டிருக்கின்றது. தமது கடமையை நேர்மையுடன் செய்ய விரும்பும் சகல நீதிபதிகளுக்கும் இது ஓர் சிவப்பு எச்சரிக்கை என்பதை, தமிழ், முஸ்லீம் மக்கள் மட்டுமல்லாமல், சிங்கள மக்களும் புரிந்து கொள்ள வேண்டிய நிலைமைக்குள் முழு நாடும் இப்போது தள்ளப்பட்டிருக்கின்றது.
நீண்ட பல வருடங்களாக நிலவி வரும் அரச பயங்கரவாதம் என்பது, இப்பொழுது புதிய களம் ஒன்றை திறந்திருக்கின்ற நிலைமையில், சட்டத்தின் ஆட்சி தொடர்பில் எஞ்சியிருந்த நம்பிக்கைகளும் சிதறத் தொடங்கியுள்ளன. எமது மக்களைப் பொறுத்தமட்டில், குருந்தூர் மலை விவகாரத்தில் சிலுவையில் அறையப்பட்டிருக்கும் நேர்மையான நீதிபதிக்கு ஆதரவாகவும், அதற்கும் மேலாக, நீதித் துறையின் சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் பாரிய சவாலுக்கு எதிராகவும், எமது ஒன்றுபட்ட எதிர்ப்பை நாம் வெளிப்படுத்தியே ஆக வேண்டும். உலக அரங்கின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அது நிச்சயமாக வெளிப்படுத்தப்படும் என்றுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්